தலைவர் பிரபாகரன் எதையும் மறப்பதில்லை
தலைவர் பிரபாகரன் அதிகம் பேசுவதில்லை. அவர் குறைவாக பேசிய வார்த்தைகளும் கனம் கூடியதாக காலவோட்டத்தில் மாறிவிடும்.
காரணம் அவர் பேசிய எதுவும் வெற்று வார்த்தைகளாக காற்றில் கரைந்து போனதில்லை.அந்த வார்த்தைகள் செயலாக மாறியிருந்தன. அவரது அகராதியில் வெற்று வார்த்தைகள் என்பதே இருந்ததில்லை.
குறைவாக பேசும் மனிதர் அவர். அதனால் அவரின் மனதிற்குள் என்னென்ன எண்ணங்கள் ஓடின என்பதை அவர்பேசிய குறைவான வார்த்தைகளை வைத்து அனுமானிப்பது கடினம். ஆனால் அவர் நடத்தி காட்டிய செயல்களை வைத்து அவர் மனதில் என்னென்ன ஓடியது என்பதை கணிக்கமுடியும்.
• ஒரு வரலாற்று நிகழ்வினை தருகிறேன்.
ஜூலை 1997, முல்லைத்தீவு இராணுவ தளம் மீதான விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் - 1 அழித்தொழிப்புசமரின் போது, கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் சடலங்களை அத்தாக்குதலில் பங்குபற்றிய பெண் போராளிகளே செஞ்சிலுவை ஊடகத்திற்கு கையளித்தார்கள்.
இதில் என்ன இருக்கிறது?
இருக்கிறது. இதற்கு பின்னே ஒரு காரணம் இருக்கிறது.
அவ்வாறு பெண் போராளிகளின் ஊடாக கையளிக்கப்பட்டதற்கான பிரதான காரணமாக இன்னொரு வரலாற்று சமரில் நடந்த மோசமான நிகழ்வொன்று இருந்தது.
• அதனால் அந்த வரலாற்று சமரை முழுமையாக இங்கே விளக்குகிறேன்.
தமிழீழத்தின் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பகுதியான மணலாறு பிரதேசத்தில் இலங்கை இராணுவம் ஒரு இராணுவ பெருந்தளத்தை அமைத்திருந்தது. இந்த இராணுவ பெருந்தளத்தின் பெயர் ‘ஜானகபுர’.
இதை ‘பெருந்தளம்’ என அழைத்ததன் காரணம், இந்த ‘ஜானகபுர’ தளமானது ஐந்து இராணுவ முகாம்களை தனது முன்னரங்கு பாதுகாப்பு வேலியாக வைத்து கொண்டு இயங்குவதாலேயே ஆகும்.
இந்த ஜானகபுர இராணுவ பெருந்தளம் மீது 28-7-1995 அன்று, விடுதலை புலிகள் ஒரு அழித்தொழிப்பு சமர் ஒன்றை தொடுத்தி்ருந்தார்கள்.
ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த அழித்தொழிப்பு சமர் பெரும் தோல்வியில் முடிந்தது.
காரணம் புலிகள் இத்தகைய அழித்தொழிப்பு சமரை ஜானகபுர பெருந்தளத்தின் மீது நடத்த போகிறார்கள் என்பது இலங்கை இராணுவத்திற்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது.
இந்த தாக்குதல் பற்றிய தகவல்கள் தமக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது என்பதை இலங்கை இராணுவமே இந்த சமர் முடிந்த பின்னர் வெளிப்படையாக அறிவித்திருந்தது.
இந்த தாக்குதல் பற்றிய இரகசியம் எவ்வாறு இலங்கை இராணுவத்திற்கு தெரிய வந்தது என்பது தொடர்பாக பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகிறது.
• போரியல் ஆய்வாளர் தராகி சிவராம், இந்த தாக்குதல் பற்றிய இரகசியம் எவ்வாறு இலங்கை இராணுவத்திற்கு கசிந்தது என்பதை ஒரு கட்டுரையில் பின்வருமாறு விளக்குகிறார்.
“The army was able to draw the Tigers into a bloody trap in Weli Oya in 1995 because the information about the attack was from a very reliable source in the LTTE itself — a girl who was training for the operation.
The intelligence had come through her father who had special access to the secret camp where his daughter and other girls were being prepared for the assault on Weli Oya.
The girl’s father was a member of the civilian militia which the Tigers raised in 1992. This militia formed the back bone of the LTTE’s first logistical system. Those in the militia were not expected to carry cyanide or take the Tiger oath.
One of the first things the LTTE did when it uncovered the intelligence network through which vital information from the Vanni had passed on to the Sri Lankan intelligence establishment which had led to the bloody fiasco in Weli Oya, was to disband the militia (The girl, it appears, had been found innocent).
(தராகி சிவராமின் ‘Blinded in the Wanni quagmire’ எனும் தலைப்பிட்ட கட்டுரையிலிருந்து - 29th June 1997)
அதாவது ஜானகபுர பெருந்தளத்தின் மீதான தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் போராளி ஒருவரை அவரது தந்தை பயிற்சி தளத்தில் சந்தித்திருக்கிறார். அப்போது அந்த பெண் போராளி ‘சகஜமாக’ இந்த பெருந்தளம் மீதான தாக்குதலுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார்.
அவரது தந்தை புலிகளால் உருவாக்கப்பட்ட மக்கள் படையை (civilian militia) சேர்ந்தவர். அதனாலேயே பயிற்சி நடக்கும் இடத்திற்கு செல்லக்கூடிய அனுமதி அவரது தந்தைக்கும் கிடைத்திருக்கிறது.
இந்த மக்கள் படையை சேர்ந்தவர்கள் புலிகள் அல்ல. இவர்கள் புலி போராளிகளுக்கான உறுதி மொழி எடுப்பவர்கள் அல்ல. சயனைட்டும் அணிபவர்கள் அல்ல. இவர்கள் ஒரு auxiliary force.
இவரது தந்தை மூலமாக இராணுவ புலானாய்வு துறைக்கு, ஜானகபுர பெருந்தளத்தின் மீது புலிகள் நடத்த இருக்கும் அழித்தொழிப்பு சமர் பற்றிய தகவல்கள் கசிந்து விடுகிறது.
இந்த தகவலை கூறிய பெண் போராளி நிரபராதி என்பதும் முடிவில் தெரியவருகிறது.
• இனி பதிவின் மையப்புள்ளிக்கு வருகிறேன்.
இந்த தாக்குதல் நடவடிக்கை முன்கூட்டியே தெரிய வந்ததால், விடுதலை புலிகளின் தாக்குதல் அணியை உள்ளே வரவிட்டு பின்னர் அவர்களை முற்றுகைக்குள் உள்ளாக்கி இலங்கை இராணுவம் அழித்தது.
தோல்வியில் முடிந்த இந்த தாக்குதலில் விடுதலை புலிகளின் தரப்பில் சுமார் 180 போராளிகள் பலியாகினர்.
இதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் பெண் போராளிகள்.
• இவ்வாறு கொல்லப்பட்டு, பின்வாங்கிய விடுதலை புலிகளால் மீள தூக்கி கொண்டு போக முடியாத பெண் போராளிகளின் சடலங்கள் மீது இலங்கை இராணுவம் வக்கிரமான விடயங்களை செய்தது.
இறந்து கிடந்த பெண் போராளிகளின் மார்பகங்களை அறுத்தது. பெண் உறுப்புகளை சிதைத்தது. இவ்வாறு சிதைக்கப்பட்ட பெண் போராளிகளின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்தினூடாக புலிகளுக்கு கையளித்தது. இதுதான் அந்த வரலாற்று சமரில் நடந்த மோசமான நிகழ்வு.
போரில் இறந்த எதிர்தரப்பு வீரர்களை இருதரப்பும் செஞ்சிலுவை சங்கத்தினூடாக கையளிப்பது என்பது நடைமுறை.
இவ்வாறு சிதைக்கப்பட்டு கையளிக்கப்பட்ட பெண் போராளிகளினது உடல்கள் போர்த்தப்பட்டிருந்த பொலித்தீன் பைகளை கழுவி அப்படியே பத்திரமாக வைத்திருக்குமாறு தலைவர் பிரபாகரன் உத்தரவிட்டார்.
• பின்னர் சரியாக ஒரு வருடம் கழித்து, 18-7-1996 திகதியன்று முல்லைத்தீவு இராணுவ தளத்தின் மீது விடுதலை புலிகள் அழித்தொழிப்பு சமரை நடத்தினார்கள்.
அந்த அழித்தொழிப்பு சமர்தான் ஓயாத அலைகள் -1.
இந்த தாக்குதலில் 1500 இற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
எந்த பொலித்தீன் பைகளில் பெண் போராளிகளின் உடல்கள் சிதைக்கப்பட்டு செஞ்சிலுவை சங்கத்தினூடாக புலிகளுக்கு கையளிக்கப்பட்டதோ, அதே பொலித்தீன் பைகளிலே இறந்த இலங்கை இராணுவத்தினரின் சடலங்கள் இலங்கையிடம் கையளிக்கப்பட்டன.
முல்லைத்தீவு இராணுவ தளம் மீதான விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் - 1 அழித்தொழிப்பு சமரின் போது, கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் சடலங்களை அத்தாக்குதலில் பங்குபற்றிய பெண் போராளிகளே செஞ்சிலுவை ஊடகத்திற்கு கையளிக்க வைத்தார் தலைவர் பிரபாகரன்.
தலைவர் பிரபாகரன் எதையும் மறப்பதில்லை.
• உதிரியாக இன்னுமொரு வரலாற்று நிகழ்வையும் தருகிறேன்.
தமிழர் போரியல் வரலாற்றில் பெரும் சாதனையாக குறிப்பிடப்பட வேண்டிய தாக்குதல் கட்டுநாயக்க விமானபடைத்தளம் மீது புலிகள் நடத்திய ‘commando raid’.
இந்த கமாண்டோ தாக்குதல் நடந்த திகதி 24-7-2001 .
கறுப்பு ஜூலை என்று நினைவு கூறப்படும் , இலங்கை அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட ‘83 இனகலவரம்’ தொடங்கிய நாளும் 24-7-1983 தான்.
தலைவர் பிரபாகரன் எதையும் மறப்பதில்லை.
க.ஜெயகாந்த்











Comments
Post a Comment