எல்லா சமாதான பேச்சுவார்த்தைகளும் சமாதானத்தை நோக்கியது அல்ல. அவை ராஜதந்திர/போரியல் நகர்வுகளின் ஒரு பகுதியாகவும் இருக்கும். (பகுதி-1)

இதை விளக்குவதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது இலங்கையில் விடுதலை புலிகளுடன் இலங்கை அரசாங்கம்நடத்திய சமாதான பேச்சுவார்த்தைகள்.


இன்றுவரை சில தமிழர்கள்,  2005  ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களிப்பதை புலிகள் தடுக்காமல் இருந்திருந்தால் , இந்நேரம்  அரசியல் தீர்வு உருவாகியிருக்கும் என பிதற்றி கொண்டிருக்கிறார்கள். 


ராஜதந்திர,போரியல்,புவிசார் நலன் அரசியல் தளங்கள் தொடர்பான அறிவில் தமிழ் சமூகம் எப்படி போதாமையோடு இருக்கிறது என்பதைதான் இது காட்டுகிறது. 


இதற்கு நடுவே இந்த தளங்களோடு சற்றும் தொடர்பில்லாத  பெரியாரியத்தையும் , திராவிடத்தையும் அடிப்படையாக வைத்து, திராவிட புத்திஜீவிகள் வைக்கும் வாதங்கள் சிரிப்பையே வரவழைக்கின்றன.


• விடுதலை புலிகள், 2005 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்கவேண்டும் என ஏன் முடிவெடுத்தார்கள்? 


அது ரணில் எனும் ஒற்றை மனிதனை மையப்படுத்தியதா ? 


அதை தாண்டிய பரிமாணங்கள் புலிகளின் இந்த நகர்வில் உண்டா என்பதை விளக்கத்தான் இந்த பதிவு. 


உலக ஒழுங்கும் , இலங்கையும் ராஜ தந்திர/போரியல் நகர்வாக இந்த 2002 சமாதான பேச்சுவார்த்தையை எப்படி காலப்போக்கில் வடிவமைத்தன என்பதையும் , இதற்கான விடுதலை புலிகளின் எதிர் ராஜதந்திர/போரியல் நகர்வுகளையும் தனித்தனியே விளக்கியிருக்கிறேன்.


• சமாதான பேச்சுவார்த்தையில் உலக ஒழுங்கு/இலங்கையின் ராஜ தந்திர நகர்வு


விடுதலைபுலிகளும் , இலங்கை அரசும்  போர்நிறுத்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு ( CeaseFire Agreement - CFA) ,அதன் தொடர்ச்சியாக பல கட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தியது தெரிந்ததே.


ஆறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதில் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது நார்வேயின் ஒஸ்லோவில். 


பின்னாளில் அதில் பேசப்பட்ட விடயங்களை ‘ஒஸ்லோ பிரகடனம்’ என்ற சொல்லாடலில் உலக ஒழுங்கும் , இலங்கையும் அழைக்க ஆரம்பித்தன.


இப்படி  பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும் உலக ஒழுங்கும் , இலங்கையும்  அரசியல் தீர்வு என குறிப்பிட்ட புள்ளியையே சுற்றி சுற்றி வந்தன. 


அதுதான் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காமல், மாற்றாக இலங்கையின் ஒருமைப்பாட்டுக்குள் அரசியல் தீர்வை காண்பது என்ற முடிவு.


இதை மையப்புள்ளியாக வைத்தே உலக ஒழுங்கும், இலங்கையும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக முன்வைத்தன. 


உலக ஒழுங்கு இந்த தீர்வை திணிக்க புலிகளுக்கு எவ்வாறு அழுத்தங்களை கொடுக்க முனைந்தன என்பதை போரியல் அறிஞரான தராகி சிவராம் பின்வருமாறு தனது கட்டுரையில் விவரித்திருப்பார்.


“சிறிலங்காப் பிரதமர் அமெரிக்கா சென்றிருந்த வேளையில் அந்நாட்டின் பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் றிச்சேட் ஆர்மிரேஜ் ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படைகள் என்ன என்பதை தெட்டத்தெளிவாக வலியுறுத்தியிருந்தார். 


விடுதலைப் புலிகளின் தலைவரைக் காண புறப்படுவதற்கு முதல் நாள் கொழும்பிலுள்ள சர்வதேசக் கற்கைகளுக்கான நிறுவனத்தில் உரையாற்றியபோது கிறிஸ் பற்றனும் ஒஸ்லோ பிரகடனத்தின்படியே புலிகள் இனச்சிக்கலுக்கான தீர்வு பற்றிய தமது முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும் எனக்கூறியது மட்டுமன்றி, ஒரு படி மேற்சென்று அவர்கள் தயாரித்திருக்கும் சமஷ்டி தீர்வு பிரிந்து செல்லும் உரிமை எனும் சற்றே திறந்த கதவிடுக்கினுள் காலை வைத்துக்கொண்டு முன்வைக்கப்படுவதாக இருக்கக்கூடாது என மிக அழுத்தமாக வலியுறுத்தினார்.


அதாவது ஒஸ்லோ பிரகடனத்தினடிப்படையில் தமிழ் பேசும் மக்களுடைய இன்னல்களுக்கு ஒரு சமஷ்டித் தீர்வை புலிகள் முன்வைப்பதாயின் அதனுள் எமது சுயநிர்ண உரிமை பற்றிய பேச்சுக்கு இடமேயில்லை என்பதே கிறிஸ் பற்றனுடைய கூற்றின் சாராம்சம். 


அமெரிக்க பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆர்மிரேஜ் இதை வேறு விதமாக வலியுறுத்தியிருந்தார்.


புலிகள் மிகக் கவனமாக ஆராய்ந்து தயாரித்துச் சமர்ப்பித்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை  ( Interim Self Governing Authority- ISGA) பற்றிய வரைவு ஒஸ்லோ பிரகடனத்தின் வரையறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளது. 


ஆகவே அது ஏற்கக் கூடியதல்ல என்பதே அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் திட்டவட்டமான நிலைப்பாடு என்பதை கிடைக்கும் சந்தர்ப்பங்களின் போதெல்லாம் அவை இப்போது வலியுறுத்தி வருகின்றன.”


( ‘ஒஸ்லோ பிரகடனம் ஒரு பொறி’ எனும் தலைப்பிட்ட கட்டுரையிலிருந்து - தராகி சிவராம் 7/12/2003)


ஆக உலக ஒழுங்கும் , இலங்கையும் தனக்கு தோதான ஒரு அரசியல் தீர்வையே தமிழ் மக்களுக்கு தர தயாராக இருந்தன என்பதும் , தமிழ் மக்களின் நெடுங்கால போராட்டமான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்தன என்பதும் இதில் தெளிவாக தெரிகிறது.


சமாதான பேச்சுவார்த்தையில் இலங்கையின் ராஜதந்திர நகர்வு

 

இதை விளக்குவதற்கு முன் அன்றைய இலங்கையின் நிலையை உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.


விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 1, ஓயாத அலைகள் 2, ஓயாத அலைகள் 3, ஜெயசிக்குறு முறியடிப்பு சமர், தீச்சுவாலை முறியடிப்பு சமர், கட்டுநாயக்கா விமான படை தளம் மீதான ‘ கமாண்டோ தாக்குதல்’ போன்ற எல்லாம் சேர்ந்து இலங்கை முப்படைகளின் முதுகெலும்பை முறித்திருந்தன.


புலிகளின் தீச்சுவாலை முறியடிப்பு சமரும், கட்டுநாயக்கா விமான படைதளம் மீதான தாக்குதலும் எப்படி இலங்கையில் படைவலு சமநிலையை ஏற்படுத்தியது என்பதை விளக்கி விரிவான கட்டுரையை முன்னர் எழுதியிருந்தேன்.


அத்தோடு விடுதலை புலிகள் போர் களத்தில் ஏற்படுத்திய அதே சேதத்தை இலங்கையின் பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்தியிருந்தார்கள். 

எதிரியின் போர் வலுவை பலவீனமாக்குவதற்கு அவனின் பொருளாதார வலுவையும் பலவீனமாக்கவேண்டும் என்பது அடிப்படை போரியல் விதிகளில் ஒன்று. 


உங்களை ஆள்பவர் இனிமேல் உங்களை அடக்கி வைக்ககூடிய  மனித வளமோ, பொருளாதார வளமோ தன்னிடம் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்படும்போதே வேறுவழியின்றி உங்களுக்கான நிலப்பரப்பை அங்கீகரிக்கிறார்கள்.உலக வரலாறு இதைத்தான் திரும்ப திரும்ப பாடமாக தருகிறது.


இலங்கைக்கும் இதே நிலை அன்று உருவானது. உலக ஒழுங்கு உதவினால் ஒழிய, விடுதலை புலிகளை இலங்கையால் தனித்து வீழ்த்த முடியாது என்ற நிலை உருவானது. 


இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், உலக ஒழுங்கு இலங்கையின் போர் வலுவையும், பொருளாதார வலுவையும் பலப்படுத்த உதவினால் ஒழிய , விடுதலை புலிகளை இலங்கையால் தனித்து வீழ்த்த முடியாது என்ற நிலை உருவானது.


இந்த பின்னணியில் தொடங்கியதுதான் இலங்கையின் நுட்பமான ராஜதந்திர நகர்வு.


இலங்கை நிலப்பரப்பில் தனது புவிசார் நலன்/ பொருளாதார நலன்களை வைத்திருக்கும் உலக ஒழுங்கின் முக்கிய நாடுகளை இந்த சமாதான காலத்தில் உள்ளிழுத்தது இலங்கை அரசு.


இலங்கை உலக ஒழுங்கிற்கு தேவையானதை தாரை வார்க்கும்போது ( இதனால் இலங்கையின் இறையாண்மை கேள்விக்குறிக்கு உள்ளானாலும் கூட), உலக ஒழுங்கு தங்களது நலன்களை ‘உறுதிப்படுத்த’  புலிகளை கட்டுப்படுத்த முனைவார்கள் என்ற பார்வையில் இந்த ராஜதந்திர நகர்வை இலங்கை அரசு வடிவமைத்தது.


தராகி சிவராம் இந்த நகர்வை ஆழமான போரியல் பார்வையில் விரிவாக பின்வருமாறு விவரித்திருப்பார்.


“சிறிலங்கா பிரதமர் ரணில் விரித்துள்ள சர்வதேச காப்பு வலை என்பது என்ன என்பதையும் அது ஏன் அவருக்கு இன்றியமையாதபடி தேவைப்படுகிறது என்பதையும் பார்ப்போம். 


தத்தமது நலன்களை இலங்கையில் வளர்த்தெடுப்பதற்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இங்கு போர் தற்காலிகமாக வேணும் ஓய வேண்டும் என்ற தேவை கடந்த பல ஆண்டுகளாக மிக வெளிப்படையாக இருந்து வருகிறது. 


அமெரிக்காவிற்கு இங்கு தளம் அமைப்பதற்கு வாய்ப்பாக ஒப்பந்தம் கைச்சாத்திடுவதும் இந்தியாவிற்கு தனது மூலதனப்பரம்பலை விரிவாக்குவதோடு இலங்கையை தன் நலனுக்குக் குந்தமாக வேறு நாடுகள் பயன்படுத்தக்கூடாது என்பதும் ஜப்பானுக்குத் தன் மூலதனத்தினதும் பிராந்திய அரசியல் செல்வாக்கினதும் ஒரு முக்கிய தளமாக இலங்கையை மாற்றிட வேண்டும் என்பதும் குறிக்கோளாக உள்ளன என்பதை பல ஆண்டுகளாக ஐக்கிய தேசிய கட்சி சரியாகவே புரிந்து வைத்திருந்தது. 


அத்தோடு இந்நாடுகள் தத்தமது குறிக்கோள்களை அடைந்திடவும் அவற்றின் நன்மைகளை நீண்ட காலத்தில் வலுப்படுத்திடவும் புலிகள் போரில் ஈடுபடாதவாறு அமைதிப் பேச்சு வட்டத்தினுள் கட்டுண்டு கிடந்திட வேண்டும் என்பதையும் ஐ.தே.க தலைவர் ரணில் உணர்ந்திருந்தார். 


எனவே புலிகளோடு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த கையோடு மேற்படி நாடுகள் இங்கு பெரிய அளவில் தமது மூலதனங்களை கொண்டுவருவதற்கான வேலைகளில் அவர் ஈடுபடலாயினார். 


அவருடைய செயலின் பின்னனியில் இருந்த தர்க்கம் மிக இலகுவானது. அதாவது உலக மற்றும் பிராந்திய வல்லரசுகளின் பொருளாதார மற்றும் கேந்திர நலன்கள் எந்தளவிற்கு பரவி வேரூன்றுகின்றனவோ அந்தளவிற்கு அந்த நாடுகள் புலிகள் மீண்டும் போருக்குப் போகாமல் பார்த்துக் கொள்ளும் என்பதே அது. 


இதனாலேயே அவர் ஒருபக்கம் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனமும் இங்கு விரைந்து காலூன்றிவிடுவதற்கான அவசரப் பேச்சுவார்த்தைகளையும் மறுபுறம் அமெரிக்க அரசுடன் ACSA ஒப்பந்தம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்பவற்றை செய்து கொள்வதற்கு அமைச்சர் மிலிந்த மொறகொடவை துரிதப்படுத்திக் கொண்டிருந்தார். 


விடுதலை புலிகளை சிறிலங்கா அரசு ஏமாற்றுகிறது என்ற உண்மை மிக உறுதியாக வெளிப்படும் காலத்திற்குள் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கேந்திர மற்றும் பொருளாதார முதலீடுகள் கணிசமாகப் பெருகியிருக்கும் என்பது ஐக்கிய தேசிய கட்சித் தலைமையின் கணிப்பு. 


அதாவது எந்தத்தீர்வும் கிடைக்காத நிலையில் புலிகள் மீண்டும் போருக்குப் போக முற்பட்டால் அதன் விளைவு தமது முதலீடுகள் மீது பொறுக்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்ற உந்துதலில் மேற்படி நாடுகள் அவர்களை எவ்வழிப்பட்டும் தடுத்திடும் என்பது திட்டம். 


இதனையே சர்வதேச காப்பு வலை (International Safty Net) என பெருமிதத்துடன் கடந்த ஆண்டு புலிகளுடன் கவனமாக அலுவல் பார்க்க வேண்டும் என அவரை எச்சரித்த பலரிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கினார். 


மேலைத்தேய போரியியலாளர் கூறும் கட்டுக்குள் பேணும் தந்திரோபாயம் (Containment Strategy) என்பதன் ஒரு வடிவமே பிரதமர் ரணிலின் சர்வதேச காப்பு வலைத் திட்டமாகும் (International Safty Net) .


சிறிலங்கா படைத்துறையின் தீச்சுவாலை நடவடிக்கையை புலிகள் முறியடித்தகையோடு சிறிலங்கா அரசினதும் அதன் அமெரிக்க பிரித்தானிய படைத்துறை மதியுரைஞர்களதும் போரியற் கோட்பாட்டுக் களஞ்சியத்துள் எஞ்சியிருந்தது இந்தக் கட்டுக்குள் வைத்திருக்கும் திட்டமே(Containment Strategy).


தீச்சுவாலை நடவடிக்கையை முறியடித்த பின்னர் புலிகள் திருகோணமலை மீது குறிவைக்க ஏற்பாடு செய்கிறார்கள் என்ற அச்சம் அமெரிக்க படைத்துறையினருக்கு உண்டாகலாயிற்று. 


மட்டக்களப்பில் தளபதி கருணாவின் கீழ் கணிசமான படைகள் ஒரு பெரிய நடவடிக்கைக்கு தயாராகின்றன என்ற தகவலும் திருகோணமலை துறைமுகம் அமைந்துள்ள கொட்டியாரக்குடாவின் தென் பகுதியான மூதூர் கிழக்குப்பிராந்தியத்தில் தளபதி பதுமனின் படைகளும் போருக்குத் திரள்கின்றன என்ற செய்தியும் மேற்படி அச்சத்தை தோற்றுவித்தன. 


தளபதி கருணாவின் படைகள் மட்டக்களப்பின் வடக்குப்பகுதியில் தயாராகிக் கொண்டிருந்ததால் அவை அநேகமாக மூதூரை நோக்கி முன்னேறி தளபதி பதுமனின் படைகளுடன் இணைப்பேற்படுத்திக் கொண்டு (Link up) திருகோணமலை சுற்றுப்புறத்தையும் அதை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் பாதைகளையும் கைப்பற்ற முனையலாம் எனவும் இதே வேளை வவுனியாவை அச்சுறுத்தும் வகையில் புலிகள் ஒரு படையெடுப்பை தொடங்கினால் சிறி லங்கா அரசால் அதன் கிழக்குத் துறைமுகத்தை பாதுகாக்க முடியாது போய் விடும் என 2001 இன் நடுப்பகுதியில் அமெரிக்க படைத்துறை மதிப்பீடு செய்தது. 


இது நடைபெற்றால் சிறிலங்கவின் கடற்படை மற்றும் வான் படைத் தளங்களை கையகப்படுத்தும் தனது ACSA ஒப்பந்தம் அர்த்தமற்றதாகிவிடும் எனவும் அது கவலை கொள்ளலாயிற்று. 


இந்த விடயம் சந்திரிக்கா அரசின் இந்தியச் சார்பாளர் சிலரால் டெல்லியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. திருகோணமலையிலுள்ள எமது நலன்களில் கைவைக்காத வரை புலிகள் அங்கு என்ன படையெடுத்தாலும் எமக்கு அக்கறை இல்லை என்று மட்டும் அப்போது இந்திய வெளியுறவு அலுவலர் ஒருவர்தெரிவித்தார். (இது என்ன நோக்கில் கூறப்பட்டது என அப்போது தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை) .


இந்த வகையில் புலிகளுக்கு கிடைத்திடக் கூடிய ஒவ்வொரு வெற்றியும் சிறிலங்காவின் இறைமையைக் குறைக்கும் எனவும் இதன் காரணமாக அதனுடன் கைச்சாத்திடக்கூடிய ACSA மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்பவை வலுவற்றதாகி விடும் எனவும் அமெரிக்கா கரிசணை கொள்ளலாயிற்று. 


இந்த நிலையில் புலிகளுக்கு சாதகமாக இலங்கைத்தீவில் போர்ச்சமநிலை விரைவாக மாறிச்செல்வதை தடுப்பதற்கு சிறிலங்கா அரசிற்கு இருந்த ஒரே வழி மேற்படி கட்டுக்குள் முடக்கி வைத்திருக்கும் தந்திரோபாயமே (Containment Strategy).


இப்போரியற் கோட்பாட்டின் முதலாவதும் முக்கியமானதுமான அடித்தளம் அமைதிப் பேச்சுக்களேயாகும். அதாவது அமைதியை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை என்பது வேறு போரிடல் திட்டமிடலின் ஒரு வெளிப்பாடாக நடைமுறைப்படுத்தப்படும் பேச்சு வார்த்தை என்பது வேறு. 


எனவே 2001 இன் நடுப்பகுதியில் காணப்பட்ட போர்ச் சமநிலையைக் கருத்திற் கொண்டு அப்போது சர்வதேச மட்டத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியா என்பனவற்றின் பின்னனியோடு அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எடுக்கப்பட்டு வந்த முயற்சிகள் போரியற் தந்திரோபாயத்தின் வெளிப்பாடாகவே அன்றி வேறு வகையில் அமைந்திட முடியாது என நான் எழுதியிருந்தேன். “


( ‘சர்வதேச காப்பு வலை ஒரு போரியல் வலை’ எனும் தலைப்பிட்ட கட்டுரையிலிருந்து- தராகி சிவராம் 15/6/2003)


ஆக உலக ஒழுங்கு இலங்கையின் போர் வலுவையும், பொருளாதார வலுவையும் பலப்படுத்த உதவுவதற்கான களத்தையும் , கால அவகாசத்தையும் தருவதற்காக வடிவமைக்கப்பட்ட ராஜதந்திர நகர்வுதான் ‘சமாதான பேச்சுவார்த்தை’.


• இந்த ராஜதந்திர நகர்வின் படிநிலைகள் என்னென்ன?


1. இந்த ‘சமாதான பேச்சுவார்த்தை’ என்ற பொறியின் பெயரில் உலக ஒழுங்கின் அழுத்தத்தின் ஊடாக , இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் வராத அரசியல் தீர்வை புலிகளின் மீது திணிப்பது முதல்படி.


2. அப்படி அந்த அரசியல் தீர்வை புலிகள் ஏற்காத பட்சத்தில் , முடிந்தவரை பேச்சுவார்த்தையை இழுத்தடித்து குறிப்பிட்ட கால அவகாசத்தை ஏற்படுத்தி கொள்ளுதல் இரண்டாம் படி. இந்த கால அவகாசம் என்பது இலங்கையின் போர் வலுவையும் , பொருளாதார வலுவையும் பலப்படுத்துவதற்கு தேவையான கால அவகாசம்.


3. இந்த பொறியை புலிகள் உணர்ந்து,  இலங்கைக்கு தேவைப்படும் அந்த ‘ கால அவகாசம் ‘ கிடைப்பதற்கு முன்பேயே பொறியை உடைத்து கொண்டு வெளியேற முனைந்தால் , அதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் சர்வதேச பாதுகாப்பு வலை (International Safty Net). உலக ஒழுங்கை கொண்டு அமைக்கப்பட்ட International Safty Net ஐ மீற விடுதலை புலிகள் துணியமாட்டார்கள் என்பது அவர்களின் கணிப்பு.


ஆனால் ‘இறையாண்மையுள்ள தமிழீழம்‘ என்ற இலக்கை சிதைக்கும் எதையும் உடைத்து கொண்டு வருவது தலைவர் பிரபாகரனின் போரியல் அணுகுமுறை. அப்படித்தான் இந்த International Safty Net ஐயும் விடுதலை புலிகள் உடைத்து கொண்டு வெளியே வந்தார்கள் என்பது வரலாறு


• சமாதான பேச்சுவார்த்தையில் விடுதலை புலிகளின் ராஜதந்திர நகர்வு


• விடுதலை புலிகள் இந்த பொறியை முதலிலேயே உணர்ந்திருந்தார்களா? 


விடுதலை புலிகள் உணர்ந்திருந்தார்கள். ஆனால் தெரிந்தும் இந்த ஆபத்தான பொறிக்குள்ளே பயணப்படவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருந்தது. 


• அது என்ன நிர்ப்பந்தம்?


விடுதலை புலிகள் உலக ஒழுங்கினால் அங்கீகரிக்கப்படாத non state actor. 

ஒரு non state actor இற்கென போரியல் போதாமைகள் உண்டு. 


ஆனால் உலக ஒழுங்கால் அங்கீகரிக்கப்பட்ட sovereign state இற்கு இந்த போதாமைகள் கிடையாது. வீழ்ந்தாலும் காலவோட்டத்தில் சாமர்த்தியமான ராஜதந்திர நகர்வுகள் முலம் உலக ஒழுங்கின் உதவியின் மூலம் எழக்கூடிய சாத்தியம் உண்டு.


இலங்கை வீழ்ந்து இருக்கும் நேரத்திலேயே , தங்களது போரியல் வெற்றிகளை தமிழர்களுக்கான நிரந்தர சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வாக மாற்றியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் non state actor ஆன புலிகளுக்கு இருந்தது. இறையாண்மையுள்ள அரசாக உருப்பெற உலக ஒழுங்கின் அங்கீகாரம் கட்டாயம் தேவை. அதனால் இந்த பொறி முறைக்குள்ளேயே பயணப்பட்டாக வேண்டும். 


• புலிகளின் காய் நகர்த்தல்


உலக ஒழுங்கும், இலங்கையும் திணிக்கும் அரசியல் தீர்வுக்கு மாற்றாக இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை ( Interim Self Governing Authority- ISGA) என்ற தீர்வை விடுதலை புலிகள் முன்வைத்தார்கள்.


இந்த ISGA தீர்வு என்பது உலக ஒழுங்கிற்கு தெரியாத ஒரு தீர்வல்ல. 


அதே 2002 ஆம் ஆண்டு இதே உலக ஒழுங்கு இதே தீர்வு திட்டத்தை Machakos Protocol என்ற பெயரில்   தென் சூடான்‘  இறையாண்மையுள்ள நாடாக உருவாவதற்கு பரிந்துரைத்திருந்தது. 


இந்த Machakos Protocol ஐ முன்மாதிரியாக வைத்துதான் விடுதலை புலிகள் ISGA தீர்வு திட்டத்தை முன்வைத்திருந்தார்கள்.


இந்த ISGA இல் தான் விடுதலை புலிகள் தங்களது ராஜ தந்திர நகர்வை வைத்திருந்தார்கள். 


ஏனெனில் இந்த Machakos Protocol தென் சூடானினது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறது. அத்துடன் தான் பிரிந்து போவதா இல்லையா என்பதை referendum மூலம் தீர்மானிக்கவும் அனுமதிக்கிறது.


தென் சூடானினது இந்த தீர்வு திட்டம் தொடர்பான மேலதிக தகவலுக்கு தராகி சிவராமின் கட்டுரையை கீழே தந்துள்ளேன்.


“தென் சூடான் போராட்ட இயக்கம் தன் சொந்தக் காலில் சுதந்திரமாக நின்று செயல்படும் ஓர் அமைப்பு அல்ல. 


அமெரிக்க, பிரித்தானிய செல்வாக்கிற்கு அமையவே அதன் தலைமை செயல்பட்டு வருகிறது. இதைப் பயன்படுத்தி சூடான் அரசு மீது படிப்படியாகத் தமது செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் தென் சூடான் போராட்ட இயக்கத்தை பேச்சுவார்த்தையில் இறக்கின.


சூடான் அரசுக்கும் தென்சூடான் போராட்ட அமைப்பிற்கும் இடையில் ஆரம்பித்த பேச்சுக்களுக்கு நோர்வே அனுசரணையாளராக நியமிக்கப்பட்டது.

(நோர்வேயை அனுசரணையாளராக கொண்டு வருவதில் அமெரிக்காவே பின்னின்று செயற்பட்டது.)


மேற்படி பேச்சுக்களின் ஊடாக சூடான் அரசு மீது தனது செல்வாக்கைப் பெருக்கி அதன் மூலம் அந்நாட்டின் எண்ணெய் வளம், கனிம வளம், அரபிப்பசை மற்றும் செங்கடல் பாதைகள் ஆகியவற்றை தான் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம் என அமெரிக்கா கருதுகிறது.


நோர்வேயின் அனுசரணையோடு நடைபெற்ற பேச்சுக்களின் விளைவாக சூடான் அரசுக்கும் தென் சூடான் போராட்ட அமைப்பிற்கும் இடையில் 2002ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு இடைக்கால ஒழுங்கு பற்றிய உடன்பாடு காணப்பட்டது.


இந்த இடைக்கால நிர்வாக அமைப்பு பற்றிய உடன்படிக்கை மச்சாக்கோஸ் ப்றொட்டக்கோல் (Machakos Protocol) என அறியப்படுகிறது.

இந்த உடன்பாட்டின் கீழ் தென் சூடான் மக்களின் சுயநிர்ணய உரிமை எந்தவித தங்குதடையுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 


இந்த உடன்படிக்கையின் கீழ் நிறுவப்படும் இடைக்கால நிர்வாக அமைப்பின் காலமுடிவில் (6 ஆண்டுகள்) தென் சூடான் மக்கள் ஐக்கியப்பட்ட சூடானுக்குள் இருப்பதா அல்லது பிரிந்து தனிநாடாகச் செல்வதா என்பதை தீர்மானிப்பதற்காக சர்வதேச ரீதியாகக் கண்காணிக்கப்பட்ட தேர்தல் ஒன்று நடத்தப்படும் என வரையறுக்கப்பட்டது.”


( சூடான்- தமிழ் ஈழம் எனும் தலைப்பிட்ட கட்டுரையிலிருந்து - தராகி சிவராம் 08/08/2004)


தமிழ் இனம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்


புவிசார் நலன் / பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்டுதான் உலக ஒழுங்கு புதிய இறையாண்மையுள்ள நிலப்பரப்பை அங்கீகரிக்கின்றன என்பதற்கு தென் சூடானையும், ஈழத்தையும் ஒரே காலகட்டத்தில் கையாண்ட விதமே சிறந்த உதாரணம். இந்த இயங்கு விதியை தமிழ் சமூகம்தான் கற்று கொள்ளவேண்டும்.


#நேரடியாக இறையாண்மையுள்ள தமிழீழம் உடனடியாக கிடைக்காவிட்டாலும் , Machakos Protocol ஐ முன்மாதிரியாக கொண்ட ISGA தீர்வுதிட்டம் மூலம் சுற்றி வளைத்து கிடைக்ககூடியதான ராஜதந்திர நகர்வாக புலிகள் இதை முன்வைத்தார்கள். அந்த ISGA வை தான் உலக ஒழுங்கு நிராகரித்தது.


தலைவர் பிரபாகரன் பொறியை உடைக்க முடிவெடுத்த தருணம்


தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வை உலக ஒழுங்கு/ இலங்கை வழங்கப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. 


அதே நேரம் சமாதான பேச்சுவார்த்தை என்ற போர்வையில் இலங்கை அதனது போர் வலுவையும், பொருளாதார வலுவையும்  பலப்படுத்துவதற்காக உருவாக்க நினைக்கும் ‘கால அவகாசத்தை’ உடைக்க வேண்டியதும் முக்கியம். இல்லாவிடில் மீண்டும் போர் தொடங்கும் போது  புலிகளுக்கு பெரும் பாதகமான விளைவை தரும்( தந்தது என்பதைதான் இறுதிப்போர் நிருபித்தது).


இந்த ‘கால அவகாசத்தில்’ sovereign state பலமடங்கு வித்தியாசத்தில் non state actor ஐ விட தன்னை பலப்படுத்த முடியும் என்பதை உலகின் பல பாகங்களிலும் நடந்த ஆயுதப்போராட்டங்களின் வரலாறு காட்டுகிறது. 


இலங்கை இந்த சமாதான காலத்தில் படை வலு சமநிலையை எப்படி தனக்கு சாதகமாக மாற்றியது என்பதை தனியாக விளக்குகிறேன்.


இந்த புள்ளியில்தான் தலைவர் பிரபாகரன் உலக ஒழுங்கு/இலங்கை வடிவமைத்த பொறியை உடைத்து கொண்டு வெளியே வர முடிவெடுத்தார்.


அதன் ஒரு பகுதிதான் 2005 ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் ரணிலுக்கு ஆதரவாக வாக்களிப்பதை தடுத்தது. 


காரணம் மகிந்த ராஜபக்‌ஷ, ஜேவிபி போன்றவர்கள் போருக்கான புற சூழ்நிலையை உருவாக்குவார்கள் என்பதை தலைவர் பிரபாகரன் கணித்திருந்தார்.


இங்கு தமிழ் சமூகம் உற்று கவனிக்க வேண்டியது

சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியல் செயற்படும் விதத்தை பற்றியே. 


முதலில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போராட்டத்தை வன்முறையின் மூலம் நசுக்க முனைந்தது. அதை விடுதலை புலிகள் தமது போரியல் ஆற்றலில் முறியடித்த பின்னர்,  மாற்று வியூகமாக இந்த சமாதான பேச்சுவார்த்தை பொறியை வடிவமைத்தது. ஏதாவது ஒரு வழியில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போராட்டத்தை நசுக்கத்தான் நினைக்கிறதே ஒழிய , அதற்கான தீர்வை தர அது தயாரில்லை என்பது வெளிப்படை. 


#ஆக விடுதலை புலிகள் ஜனாதிபதி தேர்தலில் ரணிலை வீழ்த்தியது என்பது ரணில் என்ற மனிதனை அல்ல. அதன் பின்னே உலக ஒழுங்கும் /இலங்கையும் விரித்திருந்த சமாதான பேச்சுவார்த்தை எனும் பொறியையே வீழ்த்தியிருந்தார்கள். 


இந்த ஒற்றை சம்பவத்திற்கு பின்னே இவ்வளவு நீநீநீநீநீண்ட பதிவு எழுத வேண்டிய அளவிற்கு ராஜதந்திர/போரியல் நகர்வுகள் இருக்கின்றன.


ஆனால் தமிழர்களில் சிலர் இத்தகைய நகர்வுகள் பற்றிய எந்த புரிதலும் இன்றி , ரணில் 2005இல் ஜனாதிபதியாக வந்திருந்தால் எல்லாமே மாறியிருக்கும் என கூமுட்டை தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.


இந்த கட்டுரையை இதுவரை வாசித்து வந்தீர்களேயானால் , விடுதலை புலிகள் தன்னந்தனியாக இந்த உலக ஒழுங்குடனும் இலங்கையுடனும் எவ்வளவு அதிபுத்திசாலித்தனமான சதுரங்க ஆட்டத்தை ராஜதந்திர/போரியல் தளங்களில் ஆடி கொண்டிருந்தார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.


ஆனால் ராஜதந்திர/போரியல்/புவிசார் அரசியல் தளங்களின் அரிச்சுவடியை கூட கேள்விபட்டிராத, தமிழ்நாட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு பார்ப்பான், திராவிடம், பெரியார், சங்கி, தேர்தல் சீட்டு என ஐந்து வார்த்தைகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் திராவிட அறிவுஜீவிகள் இடையே புகுந்து விடுதலை புலிகளுக்கு பாடம் எடுப்பதுதான் நகைச்சுவையாக இருக்கிறது.


இலங்கை இந்த சமாதான காலத்தில் படை வலு சமநிலையை எப்படி தனக்கு சாதகமாக மாற்றியது என்பதையும் , அது இறுதிப்போரில் புலிகளுக்கு எதிராக எப்படி முக்கிய பங்காற்றியது என்பதையும் தனியாக அடுத்த பதிவில் விளக்குகிறேன். 


க. ஜெயகாந்த்






Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]