விடுதலை புலிகள் ஏன் கெரில்லா போர்முறையிலிருந்து மரபு போர் படையணியாக மாறினார்கள்?
விடுதலை புலிகள் கெரில்லா முறையில் போரிட்டிருக்கவேண்டும். மரபுரீதியிலான போர்முறைக்கு மாறியதாலேயே அவர்களை விட பலமான மரபு இராணுவத்திடம் தோல்வியடைய நேர்ந்தது என்ற வாதம் 2009 இற்கு பின்னர் சிலரால் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இது ஏன் பிழையான வாதம் என விளக்கவே இந்த பதிவு.
• கெரில்லா போர்முறையின் அடிப்படை பண்பு என்ன ?
எதிர்பாராத நேரத்தில் மரபு இராணுவத்தை தாக்குவது (ambush).
• ஏன் எதிர்பாராத நேரம் ?
மரபு இராணுவம் கனரக ஆயதங்களை ( heavy weapons) வைத்திருப்பதால் அதனது சூட்டாற்றலிற்கு (Fire power) கெரில்லா படையணியின் இலகுரக ஆயுதங்கள் ( SMALL ARMS LIGHT WEAPON - SALW) தாக்குபிடிக்க முடியாது.
அதனால் எதிர்பாராத நேரத்தில் எதிரியை தாக்கி சேதம் ஏற்படுத்துவது, எதிரி கை ஓங்கினால் தமது தரப்பின் இழப்புகளை முடிந்தளவு தவிர்த்து பின்வாங்குவது ( hit and run). அதனால் ambush ஐ திட்டமிடும்போதே அவர்கள் பின்வாங்குவதற்கான exit route ஐயும் முன்கூட்டியே தீர்மானித்திருப்பார்கள்.
• இந்த கெரில்லா போர் முறையின் அடிப்படை பண்புகள் நமக்கு சொல்லும் செய்தி என்ன?
போரியல்ரீதியில் பலவீனமான தரப்பு பலமான தரப்பை எதிர்கொள்ளும் முறையே கெரில்லா முறை.
It is the universal war of the weak.
• கெரில்லா போர்முறையின் சாதகங்கள் என்னென்ன?
தொடர்ச்சியாக சிறு சிறு ambush கள் மூலம் எதிரிக்கு இழப்பை ஏற்படுத்துதல், எதிரியின் உளவியலை பலவீனப்படுத்துதல், எதிரி இந்த போரை நடத்துவதற்கு மனித வள, பொருளாதார வள ரீதியில் அதிக விலை கொடுக்கும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துதல் என்ற சாதகங்கள் இதில் உண்டு.
• ஆனால் கெரில்லா போர்முறையின் போதாமைகள் என்னென்ன?
1. எதிரியை முற்றாக அழித்தொழிப்பதற்கான சாத்தியம் இந்த கெரில்லா முறையில் இல்லை.
Hit and run தான் செய்ய முடியுமே தவிர அழித்தொழிப்பு சமர் (offensive war) செய்ய முடியாது.
காரணம் மரபு இராணுவம் கனரக ஆயுதங்களை சார்ந்ததாக இருக்கும்( tanks, artillery , helicopters, fighter planes). கெரில்லா அமைப்பு இலகு ரக ஆயுதங்களை சார்ந்தே இருக்கும் ( small arms light weapons (SALW).
மரபு இராணுவத்தின் சூட்டாற்றலிற்கு ( Fire Power) முன்பு இலகு ரக ஆயுதங்கள் ஈடுகொடுப்பது மிக கடினம்.
அதனால் கெரில்லா போர்முறையின் மூலம் எதிரிக்கு வலியை தொடர்ந்து கொடுக்கமுடியுமே தவிர எதிரியை முற்றாக அழிக்கும் ஆற்றல் கிடையாது .
எதிரியை முற்றாக அழித்து , நிலப்பரப்பை கைப்பற்றவேண்டுமானால் எதிரி எதிர்பார்த்திருக்கும் வேளையிலும், நேருக்கு நேர் அதனோடு களத்தில் சமர் செய்யும் ஆற்றல் தேவை. அதற்கு கனரக ஆயுதங்கள் அவசியம். அதற்கேற்ற போர்முறையும் அவசியம்.
2. எதிரியை அழித்தொழிப்பு சமர் மூலம் அழிக்கமுடியாது என்ற நிலை வரும்போதே, கெரில்லா படைக்கு ஒரு நிலப்பரப்பை கைப்பற்றக்கூடிய திறனோ அல்லது கைப்பற்றிய தளபிரதேசத்தை தக்க வைத்திருக்கும் ஆற்றலோ இல்லாமல் போய்விடுகிறது.
தளப்பிரதேசத்தை தக்கவைக்க முடியாது என்ற நிலைவரும்போது, இயல்பாகவே அந்த நிலப்பரப்பு தொடர்ந்து அரச இராணுவத்தின் கைகளிலேயே இருக்கும்.
3. கெரில்லா போர் முறை குறைவான இழப்புகளுடன் எதிரிக்கு சேதத்தை ஏற்படுத்தகூடியது என்றாலும் அதற்கு எதிரியை முற்றாக அழித்தொழிக்கும் பண்பு இல்லாத காரணத்தினால் இந்த போர்முறை காலவரையின்றி நீண்டு செல்லகூடிய சாத்தியகூறு அதிகம்.
ஆயுத போராட்டம் நீண்டு செல்ல செல்ல மக்கள் சோர்வடைந்து போராட்டம் மீது நம்பிக்கை இழப்பார்கள்.
இந்த புள்ளியை எதிர்ப்பார்த்துத்தான் அரசுகள் காயை நகர்த்துகின்றன. அதாவது மக்கள் சோர்வடைந்து போராட்டத்தின் மீது நம்பிக்கை இழக்கும் புள்ளி.
4. இதற்கு இடையே தளப்பிரதேசம் அரசின் கையில் இருக்கும்போது,அரசே களத்தில் போலி இயக்கங்களை உருவாக்கி போராட்டத்தை திசை திருப்ப முடியும். மக்களை குழப்ப முடியும். ஆனால் ஒரு தளப்பிரதேசம் போராட்ட இயக்கத்தின் கையில் இருக்கும்போது, அவர்களால் தளப்பிரதேசத்தினுள் இயங்ககூடிய எதிர் சக்திகளை எளிதாக களையெடுக்கமுடியும். மக்களின் உணர்வுகளை போராட்டத்தின் மீது குவிக்கமுடியும்.
5. அழித்தொழிப்பு சமர் செய்யாதவரை எதிரிகளை முற்றாக அழிக்கமுடியாது.ஒரு நிலப்பரப்பை கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியாது.
அதேநேரம் இந்த அழித்தொழிப்பு சமரை செய்வதற்கு கட்டாயம் கனரக ஆயுதங்கள் தேவை.
ஆனால் கனரக ஆயுதங்களை வைத்திருக்கும் போது,கெரில்லா போராளிகள் அடிக்கடி இடம்மாறுவது போல கனரக ஆயுதங்களை இடம்மாற்றி கொண்டிருக்கமுடியாது. அவை பின்தளத்தில் மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருக்கப்பட வேண்டியவை.
அப்படியாயின் தளப்பிரதேசம் என்பது அத்தியாவசியம் என்றாகிறது. தளப்பிரதேசத்தை தக்கவைக்க அழித்தொழிப்பு சமர் ஆற்றல் தேவைப்படுகிறது. அழித்தொழிப்பு சமர் செய்ய கனரக ஆயுதங்கள் அவசியம். அவதானமாக நீங்கள் வாசித்தால் இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்திருப்பதை இங்கே காணலாம்.
6. ஒரு போராளி இயக்கம் தமக்கென ஒரு நிலப்பரப்பை கைப்பற்றி அதனை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆற்றலை பெறும்போதுதான் அது அரசியல்ரீதியில் இன்னொரு பரிமாணத்தை தோற்றுவிக்கின்றது.
ஒரு போராளி இயக்கம் தமது கட்டுப்பாட்டு நிலப்பரப்பில் தமக்கென ஒரு நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தும்போது அது நேரடியாக ஒரு இறையாண்மை அரசிற்கு எதிரான சவாலை ஏற்படுத்துகிறது. ஒரே நிலப்பரப்பில் இரண்டு அரசுகள் உருவாகின்றன.
• மேலேயுள்ள காரணங்களினால்தான் இறையாண்மை அரசுகள், ஒரு போராட்ட அமைப்பு கெரில்லா இயக்கமாக தொடர்ந்தால் கூட பரவாயில்லை ஆனால் மரபு சார்ந்த போரியல் ஆற்றலை பெற்றுவிடக்கூடாது என்பதில் பெரும் முனைப்பை காட்டுகின்றன.
• விடுதலை புலிகள் கெரில்லா இயக்கமாக இருந்து மரபு படையணியாக பரிணமித்த விதம்
விடுதலை புலிகள் முதலாம் ஈழப்போர் வரை (1983-87) கெரில்லா முறையையே கையாளநேர்ந்தது. மரபு படையாக மாறுவதற்கான கள சூழலும் கால அவகாசமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
பின்னர் இந்திய படை வெளியேறிய பிறகு, 1990 ஜூன் இல் இரண்டாம் ஈழப்போர் ஆரம்பித்தது. தலைவர் பிரபாகரன் 1991 ஏப்ரல் 10 திகதி புலிகளின் முதலாவது மரபு படையணியான சார்ள்ஸ் அன்டனி படைப்பிரிவை தொடங்கினார்.
அதன் பின்னர்தான் அழித்தொழிப்பு சமர்கள் மூலம் இலங்கை இராணுவத்திற்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தி நிலப்பரப்பை மீட்கமுடிந்தது. மரபு இராணுவமாக மாறுவது , அதற்கான உட்கட்டமைப்பை ஏற்படுத்துவது மிக மிக கடினமானது.
விடுதலை புலிகளை மரபு படையாக மாறவிடக்கூடாது என்றுதான் இந்தியாவும், இலங்கையும் முதலாம் ஈழப்போரில் பெரும் பிரயத்தனப்பட்டன.
ஆனால் இலங்கையை எடுத்துகொண்டால் விடுதலை புலிகள் semi conventional படையணியை வைத்திருந்தார்கள்.
ஒரு state இற்கே உரித்தான முழு ஆற்றல் மிக்க conventional military ஐ உருவாக்க முடியவில்லை. அதற்கான heavy weapons களை பெற இன்னொரு இறையாண்மை அரசின் (sovereign state) உதவி தேவை. வன்னி பெருநிலப்பரப்பில் மரபு படையணியாகவும் கிழக்கில் பெரும்பாலும் கெரில்லா படையணியாகவும் செயற்பட்டார்கள்.
அப்படியிருந்தும் புலிகளின் semi conventional படையணியால் இலங்கை இராணுவத்தின் மீது பல அழித்தொழிப்பு சமர் செய்து , பெரும் நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடிந்தது.
அப்படி முடிந்ததால்தான் அதில் ஒரு மாதிரி அரசாங்கத்தையே (De facto state) அவர்களால் நடாத்த முடிந்தது.
இதில் பதிவின் ஒவ்வொரு விடயங்களும் தனி தனி கட்டுரையாக எழுதப்படவேண்டியவை. நீளம் கருதி சுருக்கமாக பதிவிட்டுள்ளேன்.
க.ஜெயகாந்த்










Comments
Post a Comment