புலிகளின் ஆயுத போராட்டம் மௌனித்ததற்கான ஒற்றை காரணி, மூல காரணி எது?
புலிகளின் ஆயுத போராட்டம் மௌனித்ததற்கான காரணத்தை ஒரு வரியில் சொல்வதாக இருந்தால், ‘உலக ஒழுங்கு’ என்ற ஒற்றை வார்த்தைதான் பதிலாக இருக்கும் என கூறி அதனை விளக்கி 3 வருடங்களுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.
அதனை வாசித்தவர்கள் அதன் பொருளை முழுமையாக உள்வாங்கியிருப்பார்கள் என எனக்கு தோன்றவில்லை.
இதன் பொருள் என்ன என்பதை மறுபடியும் விளக்குகிறேன்.
• நான் கூறியதன் உட்பொருள், இறுதி போரில் தலைவர் பிரபாகரன் கணித்த விடயத்துடன் உடன்படுகிறது என்பதனை சமீபத்திய ஒரு நேர்காணலில் கண்டுகொண்டேன்.
இந்த நேர்காணல் ஜெயந்தன் படையணியின் சிறப்பு தளபதி ஜெயாத்தன் அவர்களினால் சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டதாகும். இறுதி போரிற்கு பின்னர் மேற்குலக நாடுகளிற்கு தப்பி வந்த போராளிகளுள் இவரும் ஒருவர்.
அந்த நேர்காணலில் பின்வரும் தகவலை தெரிவிக்கிறார்.
தலைவர் பிரபாகரன் 2008 இல் ஆகஸ்ட் மாதமளவில் தளபதி ஜெயாத்தனுடன் உரையாடியிருக்கிறார். அதில் அந்த இறுதி யுத்தம் இப்படித்தான் முடிவடையும் என கூறுகிறார். அந்த பின்னடைவிற்கான காரணத்தையும் கூறுகிறார்.
முதலில் எனது காரணத்தை விளக்கிவிட்டு, தலைவர் எதை பின்னடைவிற்கான காரணம் என கூறினார், தலைவர் கூறிய காரணமும் நான் கூறிய காரணமும் எந்த புள்ளியில் இணைகின்றன என்பதை விளக்குகிறேன்.
• இனி நான் எனது முன்னைய கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு தாவுகிறேன்.
ஏன் புலிகளின் ஆயுத போராட்டம் மௌனித்ததற்கு ‘உலக ஒழுங்கே காரணம்’ என கூறுகின்றேன்?
விடுதலை புலிகளை ஈழப்போர்-4 இல் (2006-2009) முற்றாக அழிவு நிலைக்கு தள்ளிய போரியல் காரணம் எது?
விடுதலை புலிகளின் கடல் வழி ஆயுத விநியோக பாதை முற்றாக தடைப்பட்டதுதான்.
• ஏன் இந்த காரணம் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
விடுதலை புலிகளின் ஆட்பல எண்ணிக்கையிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான Force Ratio எப்பொழுதுமே குறைந்தது (10:1) என புலிகளுக்கு எதிராகவே இருந்தது.
அதாவது ஒவ்வொரு விடுதலை புலி போராளிக்கும் எதிராக குறைந்தது 10 இலங்கை இராணுவம் இருந்தது.
கெரில்லா போர் முறையில் போராடும்போது, இத்தகைய பாதகமான Force Ratio பெரிய அளவில் பாதிப்பினை தராது. பெரும்பாலான தாக்குதல்கள் ambush, hit and run வகையான தாக்குதல்களே. தமக்கென ஒரு தளப்பிரதேசத்தை வைத்துக்கொள்ளும் தேவையும் அங்கு வராது.
ஆனால் மரபுரீதியான போரில் (conventional warfare) பாதகமான Force Ratio பெரும் சிக்கலை தரும்.
ஏனெனில் பல ஆயிரக்கணக்கான சிங்கள இராணுவத்தினர் பல முனைகளில் நகர்ந்து பெரும் இராணுவ நடவடிக்கையினை முன்னெடுக்கும்போது, அதனை எண்ணிக்கை குறைவான புலிகள் தடுத்து தற்காப்பு சமரோ அல்லது எதிர் சமர் (counter offensive) செய்வதோ மிக கடினமானது.
ஆனால் புலிகள் தற்காப்பு சமரையும் அல்லது எதிர் சமரையும் செய்து , தமக்கு தோதான வேளையில் அழித்தொழிப்பு சமரையும் செய்தார்கள்.
• எப்படி?
தங்களது ஆளணி பற்றாக்குறை, கனரக ஆயுதங்கள் இல்லாமைக்கு மாற்று வழியாக தங்களது பீரங்கி, மோட்டார் தாக்குதல்களை புதுமையான போரியல் உத்திகளோடு பயன்படுத்தினார்கள்.
இலங்கை அதிக எண்ணிக்கையிலான கனரக ஆயுதங்களை வைத்திருந்த போதும் புலிகள் தங்களது அழித்தொழிப்பு , முறியடிப்பு சமர்களில் பயன்படுத்திய சூட்டுவலு செறிவாக இருந்தது. இது இலங்கை இராணுவத்திற்கு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியதுடன், அவர்களது உளவியலை பெருமளவு பாதித்தது.
“In the asymmetrical land war that was going on in Sri Lanka, with the LTTE out-manned and out-gunned, the LTTE was using ammunition and area weapons like artillery and mortars liberally to strike terror in the heart of the enemy.
It did not show the restraint and conservatism conventional armies generally show in using their ammo. For the LTTE, firing had to be well-targeted and also exceptionally heavy, to make up for the shortage of men and artillery pieces.
As Seelan, a former “Sea Tiger” said: “When army fired a shell, we fired about 20 shells. We fired a lot of shells like mortars and artillery.”
The heavy shelling from the LTTE did have a devastating effecting on the Sri Lankan army. A former Army Commander said: “Casualties due to artillery and mortars were the heaviest on our side. I think it was more than 50 percent”.
(இலங்கை கடற்படையின் தளபதியும், பின்னர் இலங்கை வெளியுறவு செயலாளராகவும் இருந்த ஜெயனத் கொலம்பகே (Jayanath Colombage) எழுதிய Asymmetric Warfare at Sea - The Case of Sri Lanka எனும் ஆய்வு புத்தகத்திலிருந்து பக்கம்-197)
• Jayanath Colombage இனுடைய Asymmetric Warfare at Sea - The Case of Sri Lanka எனும் ஆய்வு நூலின் பகுதிகளை இந்த கட்டுரை நெடுக மேற்கோளிற்கு பயன்படுத்தியிருக்கிறேன்.
இலங்கை இராணுவம் பெரியளவிலான இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கும்போது ஒரே சமயத்தில் பல முனைகளை திறக்கும். அதன்மூலம் புலிகள் தங்களது ஆளணியை பலமுனைக்கும் அனுப்பும்போது அவர்களது எதிர்ப்பு பலவீனமாகும் என்ற அடிப்படையில்.
ஆனால் புலிகள் இந்த ஆளணி பற்றாக்குறைக்கு மாற்றுவழி கண்டுபிடித்தார்கள்.
குறைவான ஆளணியுடன் , துல்லியமான உளவுதகவல்களை கொண்டு( HUMINT) , இலக்குகள் மீது துல்லியமான , செறிவான சூட்டு தாக்குதல்களை நடத்தி பெரும் இராணுவ நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினார்கள்.
பின்னர் சரியான நேரத்தில், சரியான இலக்கின் மீது அழித்தொழிப்பு சமரை நடத்துவார்கள்.
இந்த போரியல் உத்தியை ஈழப்போர் 3 (1995-2002) நெடுக பயன்படுத்தினார்கள்.
புலிகள் நடத்திய பெரும் முறியடிப்பு சமர்களான ஜெயசிக்குறு எதிர்சமர், தீச்சுவாலை முறியடிப்பு சமர் என்பவை சில உதாரணங்கள்.
அதுபோல அழித்தொழிப்பு சமர்களில் அமெரிக்க பாணியிலான shock and awe வகையிலான தாக்குதல்களை நடத்தினார்கள். குறுகிய காலத்தில் அதிக செறிவான சூட்டுவலுவை பயன்படுத்துவது.
புலிகள் தங்களது ஆளணி பற்றாக்குறையையும், கனரக ஆயுதங்களின் போதாமையையும் ஈடுகட்டிய விதம்தான் மேலே நான் கூறிய புலிகள் தங்களது ஆர்ட்டிலெறிகளையும், மோர்ட்டார் ஷெல்களையும் பயன்படுத்திய விதம்.
இந்த போரியல் உத்திதான், இலங்கை இராணுவம் பெருமளவில் முன்னெடுத்த பல இராணுவ நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த உதவியது.
• சரி. இனி ஈழப்போர்-4 (2006-2009) இல் என்ன நடந்தது?
அன்றைய காலப்பகுதியில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் புவிசார் நலன் அரசியல் சமன்பாடுகள் மாற்றமடைந்துவிட்டன.
சீனா-அமெரிக்காவிற்கு இடையிலான Great Power Competition அதன் ஆரம்ப கட்டத்தை தொட்டிருந்தது.
இந்திய பெருங்கடலில் சீனா அதனது கடல்வழி வணிக பாதையை (Sea Lanes of Communication (SLOCs)) காப்பாற்றுவதற்கான நகர்வுகளை செய்ய ஆரம்பித்திருந்தது.
இதைப்பற்றி விரிவான போரியல் ஆய்வுகட்டுரையை முன்னர் எழுதியிருக்கிறேன். இணைப்பு கீழே.
அதைப்போல சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் containment strategy இல் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது. அதனால் இந்தியாவின் செல்வாக்கும் புதிய உயரத்தை தொட்டிருந்தது. இதைப்பற்றியும் விரிவான கட்டுரையை முன்னர் எழுதியிருக்கிறேன்.
ஆக மேலே சொன்ன இந்த புதிய புவிசார் அரசியல் சமன்பாடுகள் மாற்றமடைந்த காலகட்டத்திற்குள், ஈழப்போர்-4 தொடங்குகிறது.
• புலிகள் தங்களது ஆளணி பற்றாக்குறையையும், கனரக ஆயுதங்களின் போதாமையையும் தங்களது ஆர்ட்டிலெறிகளையும், மோர்ட்டார் ஷெல்களையும் பயன்படுத்தியதன் ஊடாக ஈடுகட்டினார்கள் என கூறியிருந்தேன்.
போர் களத்தில் புலிகள் பயன்படுத்திய இந்த போரியல் உத்தி tactical level இனை சேர்ந்தது.
• அது என்ன tactical level?
War என்பதன் போரியல் இலக்கை அடைய Levels Of War எனும் இராணுவ கோட்பாடு மிக மிக முக்கியமானதொன்று.
அந்த Levels Of War இன் மூன்று அடுக்குகள்தான் Strategic Level, Operational Level, Tactical Level.
இதில் Strategic Level என்பது உச்ச அடுக்கு.
Tactical Level என்பது அடியில் உள்ள அடுக்கு.
“Tactical level is the sharp end of war where men and machines clash. The way they fight and the equipment and organization they use are all part of the tactical level.”
இந்த tactical level என்பது மனிதர்களும், ஆயுதங்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் அடுக்கு. அது அந்த போர்களத்தை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்ளும்.
அதன்படி புலிகள் பெரும் எண்ணிக்கையிலான இலங்கை இராணுவத்தை தமது ஆர்ட்டிலறி, மோட்டார் ஷெல்களினூடாக எதிர்கொண்டு முறியடித்த விதம் என்பது tactical level இனை சேர்ந்தது.
ஆனால் இந்த tactical level இல் ஏற்படும் சிக்கல்களை, Strategic Level இல் சாமர்த்தியமான நகர்வுகளை செய்வதன்மூலம் தீர்க்கமுடியும்.
• அது என்ன Strategic Level?
உச்ச அடுக்கான Strategic Level என்பது பரந்தளவிலானது. ஒரு நாட்டினது சகல வளங்களையும் ஒரு முனைப்படுத்தும் அடுக்கு.
ஒரு நாடு தனக்கான national security strategy என்பதை வகுத்து, அதற்கென பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான செயற்திட்டம், இராணுவத்தை நவீனமயப்படுத்தல், அந்நிய நாடுகளுடனான உறவு என சகலவற்றையும் இலக்கிற்காக ஒரு முனையில் குவிக்கும் அடுக்கு.
According to the Department of Defence Dictionary of military and Associated forms, strategy has been defined as "a prudent idea or set of ideas for employing the instruments of national power in a synchronized and integrated fashion to achieve theatre, national, and/or multinational obiectives”.
(Joint Publication 1-02-amended document, 2013)
நான் மேலே கூறியது போல சகல பரிமாணங்களையும், சகல வளங்களையும் உள்ளடக்கியதுதான் இந்த Strategic Level.
இந்த Strategic Level அடுக்கிற்குள்தான் ஒரு நாடு உலக ஒழுங்குடன் ஆடும் புவிசார் நலன் சதுரங்க ஆட்டமும் வருகிறது.
இது போர் களத்தை தாண்டியது. ஒரு அரசு அதனது இலக்கை அடிப்படையாக வைத்து உலக ஒழுங்குடன் ஆடும் சதுரங்க ஆட்டம்.
நான் மேலே கூறியதுபோல, ஈழப்போர்-4 காலகட்டத்தில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் புவிசார் அரசியல் சமன்பாடு வேறுவகையாக மாறியிருந்தது.
சீன-அமெரிக்க Great Power Competition காரணமாக, இந்திய பெருங்கடலில் இலங்கையின் புவியியல் அமைவிடம் அதனை கேந்திர முக்கியத்துவம் (sri lanka’s strategic location) உடையதாக மாற்றியது.
அமெரிக்காவிற்கும் இலங்கை தேவையாக இருந்தது. சீனாவிற்கும் இலங்கை தேவையாக இருந்தது. இந்தியாவிற்கும் இலங்கை தேவை இருந்தது. இந்தியாவிற்கு முக்கியமாக தமிழீழம் என்பது அமைந்துவிடக்கூடாது என்ற தேவையும் இருந்தது.
இதனை முழுமையாக புரிந்துகொள்ள நான் குறிப்பிட்ட எனது முன்னைய கட்டுரைகளை நீங்கள் வாசிக்கவேண்டும்.
• ஆக Strategic Level இல் உலக ஒழுங்கு செய்த நகர்வுகள் இலங்கைக்கு tactical level இல் இருந்த சிக்கலை தீர்க்க உதவின.
எப்படி?
அதற்கு புலிகளின் கடற்புலிகள் அணியின் தோற்றம், பின்னர் எவ்வாறு ஒரு நாட்டினது கடற்படைக்கு சவாலானதாக மாறியது, அதனது கடல் வழி ஆயுத விநியோகம் செயல்படும் விதம் எல்லாம் உங்களுக்கு தெரியவேண்டும்.
ஆனால் அதனை முழுமையாக இங்கே நான் விவரிக்க ஆரம்பித்தால், கட்டுரையின் நீளம் மிகவும் நீண்டுவிடும். பிறகு நீங்கள் கட்டுரையின் மையப்புள்ளியை தவறவிட்டு விடுவீர்கள்.
அதனால் சுருக்கமாக விவரிக்கிறேன்.
• விடுதலை புலிகளின் கடல்வழி ஆயுத விநியோகத்திற்கு (procurement wing) என ஒரு பிரிவு இருந்தது. உலகின் பல பாகங்களில் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்து கொண்டுவருவது அதனது பிரதான வேலை. மற்றையது புலிகளின் கடற்புலிகள் பிரிவு.
இந்த procurement wing தனக்கு கீழ் 20 இற்கும் மேற்பட்ட வணிக கப்பல்களை (cargo ships) வைத்திருந்தது. மற்றைய cargo ships எப்படி பொருட்களை ஏற்றி செல்லும் வணிகத்தை செய்ததோ அதைத்தான் புலிகளின் வணிக கப்பல்களும் செய்தன. புலிகளுக்கு நிதி வருமானத்தை தரும் ஒன்றாகவும் இது இருந்தது.
ஆனால் அதனது பிரதான வேலை உலகின் பல பாகங்களில் இருந்தும் புலிகளுக்கான ஆயுதங்களை கொள்வனவு செய்து கொண்டு வருவதுதான்.
“The LTTE started building its maritime network with the help of a Bombay shipping magnate in the mid-1980s.
Today the fleet numbers at least eleven freighters, all of which are equipped with sophisticated radar and Inmarsat communications technology.
The vessels mostly travel under Panamanian, Honduran or Liberian flags, and are typically owned by various front companies located in Asia. ninety five per cent of the time the vessels transport legitimate commercial goods...for the remaining five per cent they play a vital role in supplying explosives, arms, ammunition and other war-related materiel to the LTTE theatre of war (Chalk, 1999).”
(Jayanath Colombage இனுடைய Asymmetric Warfare at Sea - The Case of Sri Lanka எனும் ஆய்வு நூலில் இருந்து- பக்கம் 70)
இந்த வணிக கப்பல்கள் எப்படி இயங்கின என்பதை, இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் ஜூலை 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “Humanitarian Operation Factual Analysis July 2006 - May 2009” எனும் விரிவான அறிக்கையும் பின்வருமாறு கூறுகிறது.
“In order to build its formidable arsenal, the LTTE developed a sophisticated arms procurement and delivery network that operated around the world through LTTE front organisations, shipping networks and a fleet of floating warehouses stationed in international waters off Sri Lanka.
Once procured, these items were sent to Sri Lanka through the LTTE's shipping network. Starting with small-scale gun running and human smuggling efforts between Sri Lanka and South India in the 1980s, this network had grown by 2005 to include over 20 large vessels and a considerable number of trawlers registered under different flags.
Boatyards were also established in South East Asian countries to facilitate this shipping operation. The crewmembers of these ships were LITE cadres travelling under various assumed identities using the passports of several nations, and they transported the items procured under the guise of normal cargo.”
• புலிகளின் cargo ships ஆயுதங்களை கொண்டுவந்த சேர்த்த விதம்
இந்த கப்பல்கள் ஆயுதங்களை கொள்வனவு செய்தபிறகு அவை சர்வதேச கடற்பரப்பில் floating arms warehouses ஆக மாறும்.
அதாவது மற்றைய cargo ships பொருட்களை காவி செல்வது போல இவைகளும் சர்வதேச கடற்பரப்பில் திரிந்து போக்கு காட்டிக்கொண்டு இருக்கும். ஆனால் தமிழீழத்தில் ஆயுதங்களை கொண்டு இறக்குவதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும். அதுவரை சந்தேகம் யாருக்கும் எழாமல் இருக்கவேண்டும் என்பதற்காக சர்வதேச கடற்பரப்பில் நகர்ந்து திரிந்து (loitering) கொண்டிருக்கும்.
ஆயுதங்களை இறக்குவதற்கான கள சூழல் உருவான பிறகு, இலங்கையிற்கு அருகாமையில் இருக்கும் சர்வதேச கடற்பரப்பிற்கு வரும். ஆனால் இலங்கையின் கடற்பரப்பிலிருந்து விலகியே இருக்கும். கிட்டத்தட்ட 200 nautical mile தொலைவிற்கு நெருங்கிய பின்னர் இந்த floating arms warehouses ஆக செயற்படும் cargo ship களிலிருந்து ஆயுதங்கள் fishing trawlers இற்கு மாற்றப்படும்.
இந்த சிறிய வகை fishing trawlers கப்பல்கள்தான் ஆயுதங்களை முல்லைத்தீவு கடற்கரைக்கு எடுத்து செல்பவை. இவைதான் logistics trawlers ஆக செயற்படும்.
இந்த logistics trawlers முல்லைத்தீவு கடற்கரையில் பத்திரமாக ஆயுதங்களை இறக்கும்வரை அந்த கடற்பரப்பை கடற்புலிகளின் தாக்குதல் படகுகளும், தற்கொலை படகுகளும் தமது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
• ஒரு கடற்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் படை வலுவை கடற்புலிகள் கொண்டிருந்ததாகவும், ஒரு sophisticated de-facto navy ஐ கடற்புலிகள் தம் வசம் வைத்திருந்தார்கள் எனவும் Jayanath Colombage தனது நூலில் குறிப்பிடுகிறார்.
“It is a well-established fact that the LTTE Sea Tigers used the ocean effectively in carrying out their logistic, training and other activities to support the battle against the government armed forces. This they did for nearly three decades, graduating from a very small component of fishermen-turned-insurgents operating fibre glass dinghies to a much more sophisticated de-facto navy, which could even threaten the dominance of the Sri Lanka Navy.” (பக்கம் 47)
கடற்புலிகளின் படை வலுவை, Jayanath Colombage அவரது ‘Asymmetric Warfare at Sea - The Case of Sri Lanka’ நூல் நெடுக பல பக்கங்களுக்கு விவரித்திருக்கிறார். அனைத்து விடயங்களையும் இந்த கட்டுரையில் விவரிப்பது சாத்தியம் அல்ல. ஆனால் மிக சுருக்கமாக ஒரே ஒரு பகுதியை மட்டும் கீழே தருகிறேன்.
“In order to venture into acquiring the limited Blue water capabilities, the LTTE leadership focused on establishing a dedicated fleet with ocean-going capabilities along with suitable platforms to attack the naval fleet, logistics transportation and to carryout suicide attacks.
Two main sections were formed by Sea Tigers; one to look after the operations closer to shore and the other to mainly focus on the international logistic fleet network which was crucial in the survival of the LTTE and their quest for Tamil Eelam. The Sea Tiger wing had almost all the major components of a modern navy.
dedicated units working on intelligence, Radar/communication, Underwater Demolition Teams (UDTs), boat building yards etc. are among the twelve sections which formed the Sea Tiger wing. The twelve sections include the following (Sridhar, 2007);
a. Sea battle regiments
b. UDT's
c. Marine Engineering and Boat building section
d. Radar and Telecommunications unit
e. Marine weapons armoury and dump group
f. Maritime school and academy
g. Recruiting section
h. Political, finance and propaganda section
i. Exclusive Economic Zone-Marine Logistics Support Team (EEZ- MLST)
j. Rescue team and intelligence section
k. Welfare section
l. Registry
• புலிகளின் இந்த கடல் வழி ஆயுத விநியோக பாதையை தடுப்பது எப்படி என்பதுதான் இலங்கை இராணுவத்திற்கு முன்பு இருந்த மிகப்பெரும் சவால்.
ஏனெனில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் பதிவுசெய்யப்பட்டு இயங்கும் புலிகளின் வணிக கப்பல்களை முதலில் கண்டுபிடிக்கவேண்டும். ஏனெனில் மேலே குறிப்பிட்டது போல இந்த cargo ship பெரும்பாலான நேரங்களில் சராசரி வணிக கப்பல்கள் போலவே இயங்கும். இது புலிகளின் கப்பல்கள்தான் என தகுந்த ஆதாரங்கள் இல்லாதபட்சத்தில் பிற நாடுகள் அவைகளை சட்டரீதியாக தடுத்து வைப்பது சாத்தியம் இல்லை.
“This organization gradually tended to change its activities by late 1990s and in early 2000 to prevent ships being apprehended or noticed by the intelligence community.
Although LITE procurement officers had been active in Africa and in South and Central America, there was very little intelligence of the LITE procurement and shipping activities in these regions. With arms transport spanning across the globe, LTTE ships crossed both the Atlantic and the Pacific Ocean (Sakhuja 2006).” (பக்கம்-69)
• அடுத்ததாக ஆயுதங்களை கொள்வனவு செய்து, floating arms warehouses ஆக இந்த cargo ship மாறியிருக்கும் நேரத்தில் கண்டுபிடிப்பது உள்ள சிக்கல்.
floating arms warehouses ஆக மாறி, ஆயுதங்களை இறக்குவதற்கு ஏற்ற தகுந்த சூழல் களத்தில் உருவாகும்வரை இவை சர்வதேச கடற்பரப்பில் வெறுமனே திரிந்து கொண்டுதான் (loitering) இருக்கும். மற்றைய வணிக கப்பல்கள் போல போக்கு காட்டி கொண்டிருக்கும்.
இந்த நேரத்தில் கண்டுபிடிப்பதிலும் பெரும் சிக்கல் இருக்கிறது. ஏனெனில் பரந்த சமுத்திரத்தில் ஒரு கப்பலை தொடர்ந்து கண்காணித்து அதனது இருப்பிடத்தை அறிவது மிக கடினமானது.
• இந்த புள்ளியில்தான் strategic level இன் பங்கு வருகிறது.
மேலே கூறியதுபோல ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் புவிசார் அரசியல் சமன்பாடுகள் மாற்றமடைகிறது.
அமெரிக்கா, இந்தியா அனைத்தும் இலங்கையின் பின் அணி திரள்கின்றன.
அமெரிக்கா சர்வதேச கடற்பரப்பில் புலிகளின் cargo கப்பல் floating arms warehouses ஆக மாறி திரியும்போது அதனை கண்டுபிடிக்க முன்வருகிறது.
ஆனால் ஒரு முக்கிய நிபந்தனையை விதிக்கிறது.
கண்டுபிடித்து தாக்கியழிக்கும்போது, தப்பித்தவறி கூட பிழையான வணிக கப்பலை தாக்கியழித்து விடக்கூடாது என்பதுதான் அந்த முன்நிபந்தனை. ஏனெனில் உலக வர்த்தகத்தின் ஆணிவேர் கடல்வழி வணிகம்தான். இந்திய பெருங்கடலில் மட்டும் வருடத்திற்கு குறைந்தது 90000 cargo கப்பல்கள் பயணம் செய்கின்றன.
“The US side wanted assurance that we will not attack any innocent ship or civilians unless they are 100% LTTE combatants.
Once the procedure was explained they were satisfied and positioned a satellite into the probable area that we gave them.
Then one day in September 2007, we got an intelligence report saying that they (Americans) had detected some suspicious vessel in the area.
This was a major challenge to SLN. The OPV fleet was ready go after the LITE floating warehouses even to distances that they have never been. But endurance was a main issue.”
(Jayanath Colombage இனுடைய Asymmetric Warfare at Sea - The Case of Sri Lanka எனும் ஆய்வு நூலில் இருந்து- பக்கம் 199)
அதன்பின்னர் அமெரிக்காவின் U.S. Pacific Command அதனது Signals Intelligence (SIGINT) and Imagery Intelligence (IMINT) ஊடாக சர்வதேச கடற்பரப்பில் திரிந்த புலிகளின் floating arms warehouses களை track செய்து அதனது இருப்பிட தகவல்களை இலங்கை கடற்படைக்கு தருகிறது.
“In addition to cooperation with India, the United States also provided intelligence to the SLN on the location of the LTTE arms warehouses.
Through the collection of Signals Intelligence (SIGINT) and Imagery Intelligence (IMINT), U.S. Pacific Command passed the location of the LTTE cargo vessels to Sri Lankan Naval commanders.
The intelligence proved critical in locating the more remote LTTE vessels that were loitering more than a thousand nautical miles from Sri Lankan waters.”
(Maritime interdiction in counterinsurgency : the role of the Sri Lankan Navy in the defeat of the Tamil Tigers எனும் ஆய்வுகட்டுரையிலிருந்து - பக்கம் 50)
இந்தியாவும் அதனது பங்கிற்கு maritime reconnaissance aircraft இனை தந்து, அந்த கப்பல்களை தொடர்ந்து கண்காணிக்க உதவுகின்றன.
“The process of locating and destroying the LTTE cargo vessels required a coordinated and sustained effort. Sri Lanka successfully located the floating arms warehouses through both domestic and international intelligence gathering. A Sri Lankan Navy officer described his experience with the first attempts to track down the LTTE vessels:
‘It all began in 2006 when we started to conduct aerial reconnaissance.
The Indian Navy sent a Dornier aircraft to Colombo. I was the first one to go onboard. We went to the equator on an aerial patrol. We spotted one ship without hull identification and we came back and reported it.
We sent our ships to go after the vessel but by the time they arrived, the ship had gone... Sri Lanka began its own reconnaissance effort with navy aircraft and India continued to conduct aerial missions to locate the LTTE ships.’ “
புலிகளின் floating arms warehouses கப்பல்கள்தான் என்பதை உறுதிப்படுத்தி, துல்லியமாக அதனது இருப்பிடத்தை அறிந்தபின்பு இலங்கையின் கடற்படை ஆயிரக்கணக்கான மைல்களை கடந்து அவற்றை தாக்கியழிக்கின்றன.
“Despite the difficulties, the remaining LITE floating arms warehouses were located through the combined efforts of domestic HUMINT collection, Indian and Sri Lankan naval reconnaissance missions, and SIGINT and IMINT assistance from the United States.
Once the LTTE vessels were located, the SLN had to develop tactics to interdict the vessels that were located well beyond the SLN's normal capability to conduct operations”
(Maritime interdiction in counterinsurgency : the role of the Sri Lankan Navy in the defeat of the Tamil Tigers எனும் ஆய்வுகட்டுரையிலிருந்து - பக்கம் 51)
• இவ்வாறு தாக்கியழிக்கப்பட்ட floating arms warehouses இல் புலிகள் கொண்டுவந்த ஆயுதங்களை இலங்கை இராணுவமே பட்டியலிட்டிருக்கிறது.
“Under Karanngoda's command, the SLN, with international support, hunted down and destroyed the remaining LITE cargo ships.
‘Between September 2006 and October 2007, the SLN succeeded in destroying eight large LITE warehouse ships containing over 10,000 tons of war-related material.’
Vice Admiral Karannagoda later described the contents of the ships:
‘These vessels were carrying over 80,000 artillery rounds, over 100,000 mortar rounds, a bulletproof jeep, three aircraft in dismantled form, torpedoes and surface-to-air missiles.
There were a large number of underwater swimmer delivery vehicles and a large quantity of diving equipment. There was radar equipment as well as outboard motors with high horsepower.’
The process of locating and destroying the LITE cargo vessels required a coordinated and sustained effort. Sri Lanka successfully located the floating arms warehouses through both domestic and international intelligence gathering.”
(Maritime interdiction in counterinsurgency : the role of the Sri Lankan Navy in the defeat of the Tamil Tigers எனும் ஆய்வுகட்டுரையிலிருந்து - பக்கம் 49,50)
Sep 2006 - Oct 2007 இற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் புலிகளின் 8 floating arms warehouses கப்பல்கள் தாக்கியழிக்கப்பட்டதாக அன்றைய கடற்படை தளபதி கரனகொட கூறுகிறார்.
அவ்வாறு தாக்கியழிக்கப்பட்ட கப்பல்களில் இருந்த ஆயுதங்களை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
80000 ஆர்ட்டிலெறி ஷெல்கள், 100000 மோட்டார் ஷெல்கள், விமானத்தை தாக்கியழிக்கும் surface-to-air missiles (SAM), assemble செய்யக்கூடிய வகையில் 3 விமானங்கள், கப்பல்களை தாக்கியழிக்கக்கூடிய torpedoes, ரேடார் கருவிகள், underwater swimmer delivery vehicles என அவருடைய பட்டியல் நீள்கிறது.
• இதே தகவலை கடற்படை தளபதி Jayanath Colombage உம் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
“A former director of naval intelligence indicates what was carried by the
LTTE floating warehouse ships:
LTTE ships were destroyed along with military hardware including artillery ammunitions (large quantity of 152 mm, 130 mm and 122 mm artillery shells and 120 mm mortar rounds in addition to other arms and ammunitions on board).
electronic warfare (EW) equipment, communication equipment, Higher powered outboard motors (OBMs), Water Scooters, Jet Skies, swimmer delivery vehicles, Radars, global positioning systems (GPSs) and other warlike materials with the intention of unloading in the Sri Lankan coast.
During the last phase of the war, the LTTE did not have large number of artillery and mortars as they could not unload them into land before these pieces were destroyed with ships.
MV Koshia that was destroyed in September 2007 alone had about 29,000 artillery shells on board after unloading 6,000 artillery shells into land. MV Matsushima had torpedoes, bullet-proof vehicles, light aircraft, tons of explosives and artillery pieces on board.”
(Jayanath Colombage இனுடைய Asymmetric Warfare at Sea - The Case of Sri Lanka எனும் ஆய்வு நூலில் இருந்து- பக்கம் 200,201)
• இலங்கை இராணுவம் உலக ஒழுங்கின் உதவியுடன் புலிகளின் ஆயுத கப்பல்களை அழித்தபின்பு, அது எத்தகைய தாக்கத்தினை போர் களத்தில் ஏற்படுத்தியது?
இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்தின் பல்வேறு மட்ட தளபதிகளும் போர் களத்தின் பல தகவல்களை அதனது தலைமையகத்திற்கு (Joint Operation Command HQ) தினமும் அனுப்பவேண்டும்.
அந்த குறிப்பிட்ட ஆபரேசனில் பயன்படுத்தப்படும் இராணுவத்தின் எண்ணிக்கை, ஏற்பட்ட உயிரிழப்புகள், இலங்கை இராணுவம் பயன்படுத்திய சூட்டாற்றல் தரவுகள், அதுபோல புலிகள் பயன்படுத்திய சூட்டாற்றல் தரவுகள் அதாவது புலிகள் ஏவிய ஆர்ட்டிலறி ஷெல்கள், மோர்ட்டார் ஷெல்கள் என சகல தகவல்களும் திரட்டப்பட்டு தினமும் தலைமையகத்திற்கு அனுப்பப்படும்.
இந்த தகவல்களை வைத்துக்கொண்டு தலைமையகம் strategic, operational, tactical level களில் செய்யவேண்டிய நகர்வுகளை தீர்மானிக்கும்.
இவ்வாறு அனுதினமும் புலிகள் ஏவிய ஆர்ட்டிலறி ஷெல்கள், மோர்ட்டார் ஷெல்கள் பற்றிய தரவுகளை வைத்துக்கொண்டு, கிராபிக்கலாக புலிகள் பயன்படுத்தும் சூட்டாற்றலின் மாறுதல்களை (firing patterns) இலங்கை இராணுவம் அவதானித்து கொண்டே இருந்தது.
இலங்கை இராணுவம் புலிகளின் ஆயுத கப்பல்களை தாக்கி அழிக்க, அழிக்க போர் களத்தில் புலிகளின் சூட்டாற்றலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா என அவதானித்தபோது, இலங்கை இராணுவம் எதிர்ப்பார்த்த மாற்றம் தென்பட தொடங்கியது.
விடுதலை புலிகளின் ஆயுத கப்பல்கள் அழிக்கப்பட, அழிக்கப்பட, அவர்கள் போர் களத்தில் ஏவும் ஆர்ட்டிலறி ஷெல்களின், மோட்டார் ஷெல்களின் எண்ணிக்கை குறைந்து செல்வதை firing patterns காட்டியது.
குறிப்பாக 2007 இல், 10ம் திகதி, 11ம் திகதி செப்டம்பர் , 17ம் திகதி அக்டோபர் தினங்களில் மட்டும் புலிகளின் 4 ஆயுத கப்பல்கள் (floating arms warehouses) அழிக்கப்பட்டன.
அதன்பின்பு புலிகளின் சூட்டாற்றல் சடுதியாக பெருமளவில் குறைந்ததை firing patterns காட்டியது.
மேலே கூறிய 2007 செப்டெம்பர், அக்டோபர் மாதங்களில் அழிக்கப்பட்ட floating arms warehouses கப்பல்கள்தான் புலிகள் கடைசியாக கொண்டுவர முயன்ற ஆயுதக்கப்பல்கள்.
அதற்கு பிறகு மே 19, 2009 வரை புலிகள் எந்தவொரு ஆயுத கப்பலையும் கொண்டு வரவில்லை.
இந்த தகவலை Jayanath Colombage இன் நூல் பின்வருமாறு விவரிக்கிறது.
“The destruction of these LTTE warehouse ships by the SLN created a major uproar in the tiger hierarchy.
Further, such destruction gave a severe blow to the LTTE international arms shipments network and drastically reduced its fire power. A former Commander of the Navy explains the success of these destructions:
Each area commander, battle commander, ground commander sent their casualties, numbers of troops deployed for various operations, arms and ammunitions they fired, arms and ammunitions fired by the enemy and types of ammunitions etc, to the Joint Operation Command HQ every day and they summed it up and was given to the army, navy, and air force.
SLN plotted these information graphically just to understand the enemy firing patterns, so we can have a good idea whether the enemy still receiving arms and ammunitions or it is declining. That was a measurement to check our effectiveness at sea; how well we had sea control.
The destruction of each vessel gave a different pattern and the best results came in 10th and 11th September 2007, when we destroyed 3 vessels and October 17th the fourth last one.
LTTE firing of mainly artillery and 122 mm mortars reduced drastically and when the army was approaching Kilinochchi, the LTTE had only about 150 or 200 odd numbers of 130 and 155 mm.
After the destruction of the last four vessels in September and October, LTTE did not have any vessels. Our analysis clearly showed that their fire power, their effectiveness had gone down and the army was now able to advance very rapidly.”
(Jayanath Colombage இனுடைய Asymmetric Warfare at Sea - The Case of Sri Lanka எனும் ஆய்வு நூலில் இருந்து- பக்கம் 201)
• புலிகளுக்கு ஆர்ட்டிலெறி, மோட்டார் ஷெல்களின் வருவது முற்றாக நின்றவுடன், புலிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலப்பகுதிகளை இழக்கும் வேகம் அதிகரிக்க தொடங்கியது.
அன்றைய போர்களத்தின் நிலவரத்தை நீங்கள் உற்று நோக்கினால் புரியும்.
ஈழப்போர்- 4 (Eelam War IV) நடந்த மொத்த காலப்பகுதி என்பது ஜூலை 2006- மே 2009.
அதில் தமிழீழத்தின் கிழக்கு பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கு இலங்கை இராணுவம் ஒரு வருடம் எடுத்தது.
அதாவது Eastern Theater of Eelam War IV இல் இலங்கை இராணுவம் ஜூலை 2006 - ஜூலை 2007 வரை சண்டையிட்டு கிழக்கு பிராந்தியத்தை கைப்பற்றியது. இத்தனைக்கும் கிழக்கு பிராந்தியம் புவியியல்ரீதியில் புலிகளுக்கு சாதகமற்ற நிலப்பரப்பு. அதனால் புலிகள் எப்பொழுதுமே மரபுரீதியான போரியலை கிழக்கு பிராந்தியத்தில் பெரிதாக பயன்படுத்துவதில்லை.
கிழக்கு பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றிய பின்னர் வன்னி பிராந்தியத்தை நோக்கி, இலங்கை இராணுவத்தின் வளங்கள் திரட்டி குவிக்கப்பட்டு Northern Theater of Eelam War IV தொடக்கப்பட்டது. இது 2007 மார்ச் மாதமளவில் தொடங்கப்பட்டது.
அதற்காக ஈழப்போர்-4 தொடங்கியவுடன் வன்னி பிராந்தியத்திலோ, யாழ் குடா பகுதியிலோ போர் நடக்கவில்லை என்பது இதன் பொருள் அல்ல.
அதே 2006 இல்தான் இலங்கை இராணுவத்தின் 55ம் டிவிசன் பெரும் முன்னேற்பாடுகளுடன் யாழ்குடாவில் முகமாலை பகுதியை கைப்பற்ற முனைந்தது.
சில மணித்தியாலங்களிலேயே 55 வது டிவிசனின் சிறப்பு படையணியினர் (Elite Commandos) 250-300 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 800 பேர் காயமடைந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இலங்கை இராணுவத்தின் இந்த பெரும் இராணுவ நடவடிக்கை தோல்வியில் முடிந்தது.
ஆனால் சகல இராணுவ வளங்களையும் ஒன்று திரட்டி வன்னி பிராந்தியத்தை நோக்கி மூன்று முனைகளில் படைகள் நகர்ந்ததைத்தான் Northern Theater of Eelam War IV என இலங்கை இராணுவம் குறிப்பிடுகிறது.
வன்னி பிராந்தியத்தை நோக்கி 2007 மார்ச் 5ம் திகதி தொடங்கிய இந்த படை நகர்வு, 2009 ஜனவரி 2ம் திகதி கிளிநொச்சியை கைப்பற்றுகிறது.
கிட்டத்தட்ட 2 வருடங்களை துல்லியமாக சொல்வதானால் 22 மாதங்களை இலங்கை இராணுவம் எடுத்திருக்கிறது வன்னி பிராந்தியத்தின் மேற்கு பகுதியை கைப்பற்றுவதற்கு. ஏனெனில் இந்த காலப்பகுதியில் புலிகள் தங்களது இருப்பில் இருந்த ஆர்ட்டிலறி, மோட்டார் ஷெல்களை பாவித்திருக்கிறார்கள்.
ஆனால் 2009 ஜனவரியிலிருந்து 2009 மே மாதத்திற்குள் வன்னி பிராந்தியத்தின் கிழக்கு பகுதி 5 மாதங்களிற்குள் வீழ்ந்துவிட்டது. ஏனெனில் புலிகளின் வசம் இருந்த ஆர்ட்டிலறி, மோட்டார் ஷெல்களின் இருப்பு அடி பாதாளத்திற்கு போய்விட்டது.
புலிகளின் ஆர்ட்டிலறி,மோட்டார் ஷெல்களின் வீச்சு எவ்வாறு குறைந்து கொண்டு போனது, அவர்களது firing patterns என்பவற்றை தரவுகளோடு வரைபடமாக Jayanath Colombage தனது நூலில் தந்திருக்கிறார். அந்த படத்தினை கீழே தந்திருக்கிறேன்.
• ஆக இலங்கை இராணுவத்தின் பல டிவிசன்கள் பல முனைகளில் முன்னேறியபோது புலிகளால் தடுக்க முடியாமல் போனதற்கான காரணம் என்ன?
காரணம் எண்ணிக்கை குறைவான புலிகள் அதிக எண்ணிக்கையுடைய இலங்கை இராணுவத்தை தடுத்து நிறுத்த தேவையான ஆர்ட்டிலறி, மோட்டார் ஷெல்கள் வருவது தடைப்பட்டதுதான்.
ஏன் வருவது தடைப்பட்டது?
காரணம் புலிகளின் கடல்வழி ஆயுத விநியோகம் தடுத்து நிறுத்தப்பட்டது.
எப்படி புலிகளின் கடல்வழி ஆயுத விநியோகம் தடுத்து நிறுத்தப்பட்டது?
காரணம் உலக ஒழுங்கின் உதவியுடன் நிறுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா வழங்கிய Signals Intelligence (SIGINT) & Imagery Intelligence (IMINT) உதவியுடனும், இந்தியா வழங்கிய naval reconnaissance உதவியுடனும் புலிகளின் கடல்வழி ஆயுத விநியோகம் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஏன் அமெரிக்கா, இந்தியா, சீனா மற்றும் பல நாடுகள் எல்லாம் இலங்கையின் பின் அணி வகுத்தன?
காரணம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஏற்பட்ட புதிய புவிசார் அரசியல் சமன்பாடுகள்.
ஆக இந்த காரணங்களை தலைகீழாக தந்திருக்கிறேன். உன்னிப்பாக கவனித்தீர்களேயானால், tactical level இல் தொடங்கி strategic level இல் முடிவதை காணலாம்.
புலிகளுக்கு ஆர்ட்டிலெறி,மோட்டார் ஷெல்கள் இல்லாமல் போனது tactical level.
அமெரிக்கா, இந்தியா, சீனா என உலக நாடுகள் இலங்கை பின் அணி திரண்டது strategic level .
இதைத்தான் புலிகளின் ஆயுத போராட்டம் மௌனித்ததற்கான காரணத்தை ஒரு வரியில் சொல்வதாக இருந்தால், ‘உலக ஒழுங்கு’ என்ற ஒற்றை வார்த்தைதான் பதிலாக இருக்கும் என இந்த கட்டுரையின் முதல் வரியில் கூறியிருந்தேன்.
• இனி எனது இந்த பார்வையும் தலைவர் பிரபாகரன் பின்னடைவிற்கான காரணமாக கூறியதும் எந்த புள்ளியில் இணைகின்றன என்பதை விளக்குகிறேன்.
இந்த நேர்காணல் ஜெயந்தன் படையணியின் சிறப்பு தளபதி ஜெயாத்தன் அவர்களினால் சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டதாகும். இறுதி போரிற்கு பின்னர் மேற்குலக நாடுகளிற்கு தப்பி வந்த போராளிகளுள் இவரும் ஒருவர்.
அந்த நேர்காணலில் பின்வரும் தகவலை தெரிவிக்கிறார்.
இணைப்பு: தளபதி ஜெயாத்தனின் நேர்காணலுக்கான வீடியோ இணைப்பு பின்னூட்டத்தில். தலைவர் பிரபாகரன் குறிப்பிட்ட விடயம் 10:23 நேரத்தில் தொடங்குகிறது.
https://youtu.be/qubPgUDv8Lo?si=EPEaGFkPa3YVxJvD
2008 ஆகஸ்ட் மாதம், மட்டக்களப்பில் இருந்து கிளிநொச்சிக்கு வந்துசேர்ந்த ஜெயந்தன் படையணியின் சிறப்பு தளபதி ஜெயாத்தன் தலைவர் பிரபாகரனை சந்திக்கிறார். தலைவர் இவருடன் கிட்டத்தட்ட 3 மணி நேரங்கள் கதைத்ததாக கூறுகிறார்.
அந்த உரையாடலில் தலைவர் பின்வருமாறு கூறுகிறார்.
“இப்பொழுது முன்னேறி வரும் இராணுவத்தை நம்மால் கடைசி வரை தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு காரணம் ஜெயசிக்குறு எதிர்சமர் செய்த காலத்தில், வாரத்திற்கு ஒரு ஆயுத கப்பல் இந்த முல்லைத்தீவு கடலுக்கு வந்து நிற்கும். ஆயுதங்களும் தாராளமாக வந்து கொண்டிருந்தது. இன்றைக்கு அது மிக மோசமான நிலையில் இருக்கிறது.”
அவ்வாறு சொல்லியபடி இறுதி யுத்தத்தில் புலிகள் பாவித்த சூட்டாற்றல் பற்றிய தகவல் அடங்கிய ஒரு பட்டியலை தலைவர் பிரபாகரன் தளபதி ஜெயாத்தனிற்கு கொடுக்கிறார்.
அந்த பட்டியலை தளபதி ஜெயாத்தன் பார்க்கும்போது, மிக குறைந்த அளவான ஆர்ட்டிலெறி, மோட்டார் ஷெல்களையே புலிகள் பயன்படுத்தியிருப்பதை காண்கிறார்.
அப்போது தலைவர் ‘இதை விட பல மடங்கு ஆர்ட்டிலெறி, மோட்டார் ஷெல்களை நாம் ஜெயசிக்குறு எதிர்சமரில் பயன்படுத்தினோம். ஆனால் அந்த சூழல் இப்போது இல்லை. அதனால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எதிரி எல்லாவற்றையும் கைப்பற்றி விடுவான். ஆனால் எல்லாவற்றையும் இழந்த பின்பு என்னிடம் கிட்டத்தட்ட 2000 போராளிகள் மிஞ்சுவார்கள். ஆனால் அந்த போராளிகளை வைத்து நாம் இழந்ததையெல்லாம் திருப்பி அடித்து மீட்பேன்’ என கூறுகிறார்.
• இதுவரை விவரித்த இந்த உரையாடலின் ஊடாக எனது பார்வை தலைவர் கூறிய காரணத்துடன் இணையும் புள்ளியை காணலாம்.
எண்ணிக்கை பலம் கூடிய இலங்கை இராணுவத்தை வீழ்த்துவதற்கு புலிகள் பிரதானமாக ஆர்ட்டிலெறி,மோட்டார் ஷெல்களை பயன்படுத்தினார்கள். அவைகளை புலிகள் தங்களது கடல்வழி ஆயுத விநியோகத்தினூடாக பெற்றுக்கொண்டார்கள். அதனை உலக ஒழுங்கு தடுத்து நிறுத்தியவுடன் புலிகளுக்கு அது போர்களத்தில் பெரும் பின்னடைவை தந்தது என்ற எனது பார்வையை கூறியிருந்தேன்.
தலைவரும் இதே கருத்தை தளபதி ஜெயாத்தனிற்கு கூறுகிறார். இதுதான் அந்த இணையும் புள்ளி.
இதில் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில், மேலே புலிகளின் பின்னடைவிற்கான காரணமாக இருந்த போரியல் காரணி என்பது tactical level ஐ சேர்ந்தது.
ஆனால் இந்த போரியல் காரணியை பிரசவித்த மூல காரணி strategic level ஐ சேர்ந்தது. அதாவது அந்த மூல காரணியான உலக ஒழுங்கு. அந்த உலக ஒழுங்கு அப்படி இயங்குவதற்கு காரணமாக இருந்த புவிசார் அரசியல் சமன்பாடு.
• இன்னும் சில உதாரணங்கள் தந்து விவரிக்க விரும்புகிறேன்.
ஈழப்போர்-4 இல், இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை அதிகமாக உயர்வதற்கு நீண்டகாலம் நீடித்த போர்நிறுத்தம் ஒரு காரணமாக இருந்தது. கிட்டத்தட்ட 4 1/2 வருடங்கள் (2002- 2006) இந்த போர்நிறுத்தம் நீடித்தது.
ஆனால் ஈழப்போர்-2, ஈழப்போர்-3 காலகட்டங்களில், இலங்கை இராணுவத்திற்கு ஆட்பற்றாக்குறையை தொடர்ந்து ஏற்படுத்தும் அளவிற்கு கள சூழல் இருந்தன.
அந்த போர்களில் இலங்கை இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்களின் எண்ணிக்கை இராணுவத்தின் மொத்த எண்ணிக்கையில் 15-20% இற்கு குறையாமல் இருந்தது.
இராணுவத்தில் இருந்தால், விடுதலைப்புலிகளின் தாக்குதலில் நிச்சயமாக கொல்லப்படலாம் என்ற அச்சத்தில் தப்பி , தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.
ஆனால் ஈழப்போர்-4 தொடங்குவதற்கு முன்பு இந்த நிலை மாறியிருந்தது.
காரணம் மேலே கூறிய நீண்ட நாட்கள் நீடித்த போர்நிறுத்த காலம்.
நீடித்து இருந்த போர் நிறுத்தகாலம், விடுதலை புலிகளின் தொடர் அழித்தொழிப்பு சமர்களின் வெற்றிகள் ஏற்படுத்திய எதிர்மறை உளவியல் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான வழியை இலங்கை இராணுவத்திற்கு ஏற்படுத்தி கொடுத்தது. அதனால் இராணுவத்தில் சேர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இந்த காலகட்டத்தில் இலங்கை இராணுவத்திற்கு எந்தவித புற அழுத்தமும் இன்றி ஆட்சேர்ப்பு நடத்தக்கூடிய நிலை இருந்தது.
அடுத்தது பயிற்சி காலத்தை எடுத்து கொண்டால், போர் காலங்களில் இலங்கை இராணுவம் அவசர அவசரமாக ஆட்சேர்ப்பு நடத்தி, குறைந்த கால பயிற்சியை அளித்து போர்களத்திற்கு அனுப்ப வேண்டியளவுக்கு கள நெருக்கடி இருந்தது.
புதிதாக சேர்ந்த இராணுவ வீரர்களை குறைந்த கால பயிற்சியுடன் களத்திற்கு அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்தை புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து ஏற்படுத்தி கொண்டிருந்தன.
ஏனெனில் momentum புலிகள் பக்கம் இருந்தது.
போரில் momentum ஒரு தரப்பிற்கு tactical level இல் சாதகத்தை ஏற்படுத்தி தரும்.
இறுதி யுத்தத்தின் இறுதி காலங்களில், புலிகள் குறைவான பயிற்சி காலத்துடன் போராளிகளை களத்திற்கு அனுப்பியதை இங்கு ஒப்பிடலாம். ஏனெனில் இங்கு இராணுவத்திற்கு momentum கைமாறியிருந்தது.
ஆக நீண்டகாலம் நீடித்த போர்நிறுத்தம் இராணுவத்தின் எண்ணிக்கை பலமாகுவதற்கு வழி வகுத்ததை தெளிவாக உணரலாம். இது தொடர்பான எனது முன்னைய கட்டுரையின் இணைப்பு கீழே.
இந்த இராணுவத்தின் அதிகரித்த எண்ணிக்கை புலிகளின் பின்னடைவிற்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்திய போரியல் காரணம்தான்.
ஆனால் இந்த போரியல் காரணத்தையும் பிரசவித்த மூல காரணி அதே உலக ஒழுங்குதான்.
உலக ஒழுங்கின் இயங்குவிதிதான் புலிகளை போர்நிறுத்தத்தின் ஊடாக பயணிக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியது.
ஏனெனில் உலக ஒழுங்கின் அங்கீகாரம் இன்றி இறையாண்மை அரசை நிறுவமுடியாது. அந்த அங்கீகாரத்தை பெற புலிகள் உலக ஒழுங்கு முன்வைத்த சமாதான பேச்சுவார்த்தை எனும் பொறியில் பயணப்படவேண்டி இருந்தது.
புலிகள் இந்த சமாதான பேச்சுவார்த்தை பொறி என தெரிந்தும் பயணித்தார்கள். வேறு வழியில்லை. ஏனெனில் முடிவே இல்லாமல் de facto state ஆக நீடித்து கொண்டு இருக்கமுடியாது. உலக ஒழுங்கின் அங்கீகாரத்தை பெற்று sovereign state ஆக மாறுவது மிக முக்கியமானது.
• இந்த கட்டுரையில் tactical level இல் இருக்கும் சிக்கல்களை strategic level இல் சாமர்த்தியமான நகர்வுகளை செய்து தீர்க்கலாம் என குறிப்பிட்டிருந்தேன்.
அப்படியானால் புலிகள் தங்களுக்கு tactical level இல் ஏற்பட்ட சிக்கலை ஏன் strategic level இல் சாமர்த்தியமான நகர்வுகளை செய்து தீர்க்க முயலவில்லை என்ற கேள்வி எழுகிறது.
ஒரு இறையாண்மை அரசுக்கு strategic level இல் நகர்வுகள் செய்வதற்கு ஏற்றவகையில், உலக ஒழுங்கின் இயங்குவிதியில் நெகிழ்வு தன்மை இருக்கிறது.
போரின் போக்குகளை மாற்றிய strategic partnership களிற்கு பல உதாரணங்களை வரிசையாக தரமுடியும்.
இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்காவை உள்ளே இழுத்த பிறகு, போரின் போக்கு மாறத்தொடங்கியது. இது strategic level இல் நடத்தப்பட்ட நகர்வு.
Cold War இல், அமெரிக்கா சோவியத்யூனியனை வீழ்த்துவதற்கு அது strategic level இல் உருவாக்கிய containment strategy ஒரு காரணம்.
இன்று அமெரிக்க தலைமையிலான மேற்குலகமே ஒன்று திரண்டு ரஷ்யாவை எதிர்த்த போதிலும், உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறுவதற்கு ரஷ்யா strategic level இல் செய்த நகர்வுகளே காரணமாக இருக்கின்றன.
ஆனால் ஒரு இறையாண்மை அரசிற்கு (sovereign state) கிடைக்கும் இந்த வசதி non state actor இற்கு கிடையாது.
ஏனெனில் sovereign state கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உருவாக்கி வைத்திருக்கும் இந்த உலக ஒழுங்கின் இயங்குவிதி, non state actors இற்கு அத்தகைய வசதிகள் இருக்கக்கூடாது என்ற வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
புலிகளும் ஒரு non state actor.
ஒரு non state actor இற்கு strategic level இல் நகர்வுகளை செய்வதற்கு இரண்டு தெரிவுகள்தான் இருக்கின்றன.
முதலாவது ஒரு sovereign state உடன் உறவினை ஏற்படுத்தி அவர்களுடன் பயணிப்பது. இதில் sovereign state இனுடைய இலக்கும் non state actor இனுடைய இலக்கும் ஏதோ ஒரு புள்ளியில் இணையும். அதனால் ஒருவரை ஒருவர் சார்ந்து பயணிப்பார்கள். ஆனால் sovereign state கையில்தான் கடிவாளம் இருக்கும்.
பல சமயங்களில் sovereign state சொல்வதை கேட்டு, non state actor பணிந்து, சமரசம் செய்து, விட்டுக்கொடுத்து போகவேண்டிய நிலை உருவாகும்.
உலகின் பல பாகங்களிலும் ஒரு sovereign state உடன் பயணம் செய்யும் அனைத்து non state actor களுக்கும் இந்த சிக்கலான நிலை தோன்றுவதை நீங்கள் காணலாம்.
இரண்டாவது தெரிவு என்பது, உலக ஒழுங்கின் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டத்தினால் உருவாகும் புறச்சூழல் ஒரு non state actor இற்கு சாதகமாக மாறுவது. இது non state actor இன் கையில் இல்லை. அந்த புறச்சூழல் தானாக கனியவேண்டும்.
non state actor புலிகளுக்கு இந்த இரண்டுமே அமையவில்லை.
தமிழீழம் அமைவது தமக்கும் சாதகம் என்ற நிலையில் எந்தவொரு sovereign state உம் இல்லை.
உலக ஒழுங்கின் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் தமிழீழம் உருவாவதற்கான புறச்சூழலும் புலிகள் இருந்த காலத்தில் உருவாகவில்லை.
அதனால்தான் புலிகளுக்கு tactical level ஏற்பட்ட சிக்கலை strategic level இல் நகர்வுகளை செய்து தீர்க்கமுடியாத நிலை தோன்றியது.
• இதுவரை இந்த கட்டுரையின் மையப்புள்ளியை பல கோணங்களில் தெளிவாக விளக்கிவிட்டேன் என்றே நினைக்கிறேன்.
புலிகளின் ஆயுத போராட்டம் மௌனித்ததற்கான காரணத்தை ஒரு வரியில் சொல்வதாக இருந்தால், ‘உலக ஒழுங்கு’ என்ற ஒற்றை வார்த்தைதான் பதிலாக இருக்கும் என்பதே கட்டுரையின் மையப்புள்ளி.
அத்துடன் இறுதிப்போரோடு தொடர்புடைய சில தவறான புரிதல்களையும் (myth) இந்த கட்டுரையிலேயே விளக்கி விடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
• முதலாவது இறுதிப்போரில் இலங்கை இராணுவம் ஒரே நேரத்தில் பல முனைகளில் நகர்ந்தது. அதனால்தான் புலிகள் தோற்றார்கள் என்பது ஒரு தவறான புரிதல்.
எண்ணிக்கை கூடிய படை அதனது numerical superiority இனை தனக்கு சாதகமான முறையில் போரில் பிரயோகிக்கும்.
எதிரியின் எண்ணிக்கையினை பல முனைகளில் பிரித்து பலவீனமாக்க, எண்ணிக்கை கூடிய படை பல முனைகளில் நகர்வது மாவீரன் அலெக்ஸாண்டர் காலத்திலிருந்து பயன்படுத்தப்படும் ஒரு போரியல் உத்தி. இது போரியலில் ஒரு அடிப்படை பாடம்.
இலங்கை இராணுவம் புலிகளுடனான 26 வருட போரில், தங்களது numerical superiority இனை சாதகமாக வைத்து பல தடவை ஒரே நேரத்தில் பல முனைகளில் நகர்வுகளை செய்திருக்கிறார்கள். அதையெல்லாம் சரியாக கணித்து தலைவர் பிரபாகரன் எதிர் சமரை செய்து பலதடவை அவைகளை முறியடித்து இருக்கிறார். அதை எப்படி தங்களது சூட்டாற்றலை வைத்து முறியடித்தார்கள் என்பதைத்தான் இந்த நீண்ட கட்டுரையில் விளக்கியிருந்தேன்.
ஆக இந்த ‘ஒரே நேரத்தில் பல முனைகளில் நகர்ந்தது’ என்ற காரணம் ஒரு தவறான புரிதல்.
• அடுத்தது இறுதிப்போரில் நீர் எல்லா பக்கங்களும் வழிந்து ஓடுவதை போல, இலங்கை இராணுவமும் எல்லா பக்கங்களும் நகர்ந்து முன்னேறினார்கள் என்ற வாதமும் பிழையான புரிதல்.
இதற்கு ஜெயசிக்குறு போரில் இருந்தே உதாரணம் தருகிறேன்.
ஜெயசிக்குறு military campaign இல், இலங்கை இராணுவம் வன்னி பிராந்தியத்தை A9 பாதையூடாக இரண்டாக பிளந்து நகர்ந்தது. இதில் கூட தொடக்கத்தில் இராணுவம் மூன்று முனைகளை திறந்தது. புலிகள் இரண்டு முனைகளை தடுத்து நிறுத்தினார்கள். (மேலே சொன்ன ஒரே நேரத்தில் பல முனைகள் myth)
ஒரு கட்டத்தில் இலங்கை இராணுவத்திற்கு A9 பாதையூடாக முன்னேற முடியாமல் போனது. ஒவ்வொரு இடங்களையும் கைப்பற்ற பல மாதங்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் இலங்கை இராணுவம் A9 பாதையை விட்டு பக்கவாடாக நகர ஆரம்பித்தது. பக்கவாடாக காட்டுப்பகுதியில் எந்தெந்த பகுதியில் எல்லாம் நகரமுடியுமோ அவ்வாறு நகர்ந்தார்கள்.
இதில் நேர்ந்த சிக்கல் என்னவெனில், நீரை போல கண்டவாறாக பரவி போக போக இராணுவத்தின் கால்களும் அகல பரப்பி வைத்தது போலாகியது.
கேந்திர முக்கியத்துவம் இல்லாத இடங்களையும் இராணுவம் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இலங்கை இராணுவம் அகல கால் பரப்ப பரப்ப அதனது எண்ணிக்கை Thin ஆக மாறியது.
தலைவர் பிரபாகரனும் இலங்கை இராணுவம் இவ்வாறாக கேந்திர முக்கியத்துவம் அற்ற பகுதியில் காலை அகல,அகல பரப்ப வேண்டுமென்றே அனுமதித்தார். சரியான தருணம் வந்தவுடன் ஓயாத அலைகள்- 2 அழித்தொழிப்பு சமரை நடத்தி, இராணுவத்தின் ஜெயசிக்குறு campaign இனை முறியடித்தார்.
ஆக நீரை போல பரவுவது என்பதும் பிழையான புரிதலில் முன்வைக்கப்படும் வாதம்.
ஜெயசிக்குறு எதிர்சமர் தொடர்பான முன்னைய கட்டுரையின் இணைப்பு
• மூன்றாவது இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவம் பயன்படுத்திய ஆழ ஊடுருவும் படையணியின் (Long Range Reconnaissance Patrol (LRRP)) தாக்கம்.
இந்த படையணி Deep Penetration Unit (DPU) என்றும் அழைக்கப்படும்.
இந்த படையணி சிறு குழுவாக எதிரி கட்டுப்பாட்டு நிலப்பரப்பில் covert operations ஐ செய்யும். ஒரு platoon ஐ விட குறைவான எண்ணிக்கையில் தனித்து தனித்து குழுவாகவே எதிரி கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இயங்கும்.
இறுதி யுத்தத்தில் DPU படையணி புலிகளுக்கு சவாலாக இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை.
இந்த DPU படையணி புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் மாதக்கணக்கில் தலைமறைவாக இருப்பார்கள். இவர்கள்தான் இறுதி யுத்தத்தில் புலிகளின் முக்கிய தளபதிகள் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தியது எல்லாம்.
பல ஆயிரக்கணக்கான சதுர கிமீ நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த புலிகளுக்கு ஆட்பற்றாக்குறை இருந்தது என்பது உங்களுக்கு தெரியும்.
பொதுவாக தமது கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்பின் ‘உட்பகுதியில்’ கண்காணிப்பிற்கான பணியில் auxiliary force என கூறப்படும் மக்கள் படையினரைத்தான் புலிகள் பயன்படுத்தினார்கள். புலிகளின் இந்த துணைப்படையினர் ‘எல்லைப்படை’ என அழைக்கப்பட்டார்கள் என நினைக்கிறேன்.
இறுதி யுத்தத்தில் முன்னரங்கிற்கும் (Forward Defense Line (FDL)) பின் தளத்திற்கும் இடையிலான புலிகளின் logistics, தளபதிகளின் convoy என்பவற்றின் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தியது எல்லாம் இந்த DPU படையணிதான்.
சில தாக்குதல்களில் முன்னேறி வரும் இலங்கை இராணுவத்தினரை தடுத்து கொண்டிருக்கும் புலிகளின் அணி மீது இந்த DPU பின்புறமாக தாக்குதலை நடத்தியது.
ஒரு கட்டத்தில் இந்த DPU படையணியை அகற்ற, புலிகள் தமது கணிசமான படையணியை தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தின் ‘உட்பகுதிக்கு’ ஒதுக்கவேண்டிய நிலையும் தோன்றியது.
ஈழப்போர்-3 இலேயே இந்த DPU படையணி உருவாக்கப்பட்டுவிட்டது. அதில்தான் புலிகளின் வான்படை தளபதி சங்கர் இந்த DPU படையணியின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஆனால் இந்த DPU படையணியின் தாக்கம் அதிகமாக மாறியது ஈழப்போர்-4 இல்தான்.
காரணம் ஈழப்போர்-4 இல் அதிகரித்த இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை. எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, இலங்கை இராணுவம் அதனது DPU படையணியை பெரிதாக்கியது.
அதனால் ஈழப்போர்-3 இல் புலிகளின் கட்டுப்பாட்டு நிலப்பரப்பிற்குள் இயங்கிய DPU படையணியின் எண்ணிக்கையை விட, ஈழப்போர்-4 இல் இயங்கிய எண்ணிக்கை கூடவாக இருந்தது. அதனால் புலிகளுக்கும் சவாலாக மாறியது.
இதை இன்னொரு கோணத்தில் அணுகி பாருங்கள்.
Strategic level இல் உலக ஒழுங்கின் இயங்குவிதி காரணமாகத்தான் புலிகள் போர்நிறுத்தத்திற்கு போகவேண்டியிருந்தது.
நீண்ட காலம் நீடித்த போர்நிறுத்தம் காரணமாக இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை பலம் கூடியது.
இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை பலம் கூடியதால்தான், இலங்கை இராணுவமும் அதனது DPU படையணியை பெரிதாக்க முடிந்தது.
• சரி. இங்கு உங்களின் புரிதலை ஆழமாக்க ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்.
புலிகளுக்கு கடல் வழி ஆயுத விநியோகம் தடைபடவில்லை என வைத்துக்கொள்வோம். புலிகளுக்கு தங்கு தடையின்றி ஆர்ட்டிலெறி, மோட்டார் ஷெல்கள் வந்து கொண்டிருந்தன என வைத்துக்கொள்வோம்.
மறுபுறத்தில் இலங்கை இராணுவம் மிக அதிக எண்ணிக்கையில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் DPU படையணியை இறக்கி வைத்திருக்கிறது என வைத்துக்கொள்வோம்.
என்ன நடந்திருக்கும்?
புலிகள் இந்த DPU படையணியின் சவாலை முறியடித்து இருப்பார்கள்.
காரணம் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் பெரிதாக இருக்கும்போதுதான், ஆட்பற்றாக்குறையால் ‘உட்பகுதியில்’ DPU படையணி சவாலாக மாறுகிறது.
ஆனால் புலிகள் தங்களது கட்டுப்பாட்டை பிரதேசத்தை சுருக்கி கொள்ளும்போது, அவர்கள் கண்காணிக்க வேண்டிய நிலப்பகுதியும் சுருங்கிவிடும். சுருங்கிய நிலப்பகுதியை கண்காணிப்பதற்கு தேவைப்படும் ஆளணியும் குறைவு. அந்த தேவையான ஆளணி வளமும் புலிகளிடம் இருந்தது. அந்த புள்ளியில் DPU படையணியால் இயங்கமுடியாது.
சுருங்கிய நிலப்பகுதியில் FDL இற்கும் பின் தளத்திற்குமான தூரம் குறைவாகவே வரும். அந்த தூரத்திற்குள் logistics இன் பாதுகாப்பை புலிகளால் உறுதிபடுத்தியிருக்க முடியும். குறைவான ஆளணியே போதுமானது.
ஆக இறுதிப்போரில் சவாலாக அடையாளம் காணப்பட்ட Deep Penetration Unit படையணியை, புலிகள் tactical withdrawal இனுடாக தங்களது நிலப்பகுதியை சுருக்கி முறியடித்திருப்பார்கள்.
ஆக பெரும்பாலோனோர் தமது தவறான புரிதலில் முன்வைக்கும் 3 காரணங்களும் புலிகளின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதற்கான காரணம் அல்ல.
ஒரே நேரத்தில் பல முனைகளில் இராணுவம் நகர்ந்தது. (இது போரியலில் அடிப்படை பாடம்)
நீர் வழிந்தோடுவது போல இலங்கை இராணுவம் பரவியது (பிழையான புரிதல்)
Deep Penetration Unit இனுடைய தாக்கம்.
• இனி இந்த போரியல் ஆய்வு கட்டுரையில் நான் நிறுவியதை சாராம்சமாக தருகிறேன்.
• விடுதலை புலிகளின் ஆட்பல எண்ணிக்கையிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான Force Ratio எப்பொழுதுமே குறைந்தது (10:1) என புலிகளுக்கு எதிராகவே இருந்தது.
• புலிகள் தங்களது ஆளணி பற்றாக்குறையையும், கனரக ஆயுதங்களின் போதாமையையும், தங்களது ஆர்ட்டிலெறிகளையும், மோர்ட்டார் ஷெல்களையும் அதிக சூட்டாற்றலுடன் பயன்படுத்துவதனூடாக ஈடுகட்டினார்கள்.
• ஈழப்போர்-4 இல், புலிகளுக்கான கடல்வழி ஆயுத விநியோகம் முற்றாக தடைப்பட்டது.
• புலிகளின் கடல் வழி ஆயுத விநியோகம் உலக ஒழுங்கின் உதவியுடன் முற்றாக தடுக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா வழங்கிய Signals Intelligence (SIGINT) & Imagery Intelligence (IMINT) உதவியுடனும், இந்தியா வழங்கிய naval reconnaissance உதவியுடனும் புலிகளின் கடல்வழி ஆயுத விநியோகம் தடுத்து நிறுத்தப்பட்டது.
• உலக ஒழுங்கு அவ்வாறு இலங்கையின் பின்னே அணி வகுத்ததன் காரணம் மாறிய புவிசார் அரசியல் சமன்பாடுகள்.
• முத்தாய்ப்பாக ஒரு உதிரி செய்தியுடன் இந்த கட்டுரையை முடிக்கிறேன்.
‘தமிழீழத்தின் எதிர்காலம் கடலில்தான் முடிவுசெய்யப்படும்’ என தலைவர் பிரபாகரன் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். அதனது உட்பொருள் இப்பொழுது உங்களுக்கு புரிகிறதா?
க.ஜெயகாந்த்




































Comments
Post a Comment