விடுதலை புலிகளின் தாக்கத்திலிருந்து இன்றுவரை மீளமுடியாமல் இருக்கும் இலங்கையின் பொருளாதாரம் - ஆய்வு பார்வையில்

ஒரு இறையாண்மை அரசு உருவாவதற்கான அடிப்படை நிபந்தனையை மிக சுருக்கமாக வரையறுத்து அதை நான் பல தடவை திரும்ப திரும்ப பதிவு செய்திருக்கிறேன்.


அந்த நிபந்தனை என்ன?

“ஏற்கனவே உள்ள அரசுகள், இனிமேல் எதிர்தரப்பை அடக்கி வைக்கக்கூடிய  மனித வளமோ, பொருளாதார வளமோ தன்னிடம் இல்லை என்ற ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும்போதே, புதிய இறையாண்மையுள்ள அரசுகள் உருவாவதை அனுமதிக்கிறார்கள்.”

விடுதலை புலிகள் தமிழீழத்தை அடைவதற்கான தங்களது ஆயுதப்போராட்டத்தில் இலங்கையின் பொருளாதார வலுவை எப்படி பலவீனமாக்கினார்கள் என்பதை முன்னொரு பதிவில் விவரித்திருந்தேன். 

இந்த பதிவு எப்படி விடுதலை புலிகளின் தாக்கத்திலிருந்து இலங்கை பொருளாதாரம் இன்னும் முற்றாக விடுபடமுடியாமல் இருக்கிறது என்பதை விளக்கும் பதிவு.

இந்த பதிவு முற்று முழுதாக இலங்கையின் பொருளாதாரம் எப்படி விடுதலை புலிகளின் ஆயுத போராட்டத்தில் சிக்கியது என்பதை மையப்புள்ளியாக கொண்டிருப்பதால், இதற்கான பல ஆதாரங்களை புள்ளி விபரங்களாகவே தரவேண்டியுள்ளது. அதனால் பல புள்ளிவிபரங்களை படங்களாகவே இணைத்துள்ளேன்.




முதன் முதலாக இலங்கையின் வரலாற்றில் பாதுகாப்பு செலவு (Defense Budget) எகிறியது.

கீழே உள்ள புள்ளிவிபரம் (படம்-1) , 1960 இலிருந்து இலங்கையின் பாதுகாப்பு செலவு அதன் GDP இல் எத்தனை சதவீதம் என்பதை காட்டுகிறது.







அதில் 1960 இலிருந்து 1984 வரை இலங்கையினது பாதுகாப்பு செலவு இலங்கையின் GDP இல் 1% வீதத்திற்கு உள்ளாகவே பெரும்பாலும் இருக்கின்றது. 1971 இல் மட்டும் 1.36% இற்கு அதிகரித்தது. அந்த ஆண்டு ஜேவிபி கிளர்ச்சி செய்த ஆண்டு.

ஆனால் தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டம் தொடங்கியதோடு, இலங்கையின் பாதுகாப்பு செலவு 1985 இலிருந்து கடுமையாக எகிற ஆரம்பித்தது.


1985 இல் பாதுகாப்பு செலவு GDPஇல் 3.16%.

1995 இல் உச்சபட்சமாக 5.86% இற்கு செல்கிறது.

இந்த புள்ளிவிபர தகவலை (படம்-2) உம் விளக்குகிறது.




புலிகளின் ஆயுத போராட்டத்தினால் இலங்கை அதனது பாதுகாப்பு செலவினத்தை கடுமையாக அதிகரித்ததை பார்த்தோம்.

அது இலங்கையின் வரவு-செலவு திட்டத்தில் எத்தகைய பாதிப்பினை செலுத்தியது என்பதை விளக்க இன்னொரு புள்ளிவிபரத்தையும் கீழே (படம்-3) இல் தந்திருக்கிறேன்.




இது இலங்கை அரசு அதனது பாதுகாப்பு செலவினத்தை அதிகரிக்க அதிகரிக்க, அது எத்தகைய Budget Deficit ஐ அதற்கு ஏற்படுத்தியது என்பதை காட்டுகிறது.


விடுதலை புலிகளின் அணுகுமுறை

விடுதலை புலிகள்,  புலிகளை வெற்றி கொள்ளக்கூடிய போர் வலுவோ, பொருளாதார வளமோ இலங்கையிடம் இல்லை என்ற புள்ளியை நோக்கி இலங்கை அரசை நகர்த்தினார்கள்.

போர் வலுவும் பொருளாதார வலுவும் பின்னி பிணைந்தவை.

ஒரு நாட்டின் போர் வலுவை முறிக்க வேண்டுமெனில் பொருளாதார வலுவையும் முறிக்கவேண்டும் என்பது அடிப்படை விதி.


2009 இற்கு பிறகாவது இலங்கையின் பாதுகாப்பு செலவினம் குறைந்ததா?


இல்லை என்பதுதான் முக்கியமான விடயமே. 

அது ஏன் என்பதுதான் இந்த பதிவின் மையப்புள்ளியும் கூட.

இதை விளக்க Institute of South Asian Studies (ISAS) எனும் Think Tank அமைப்பு சார்பாக Daniel Alphonsus எழுதிய Sri Lanka’s Post-War Defence Budget: Overspending and Underprotection எனும் ஆய்வு கட்டுரையை இந்த பதிவில் பயன்படுத்தியிருக்கிறேன்.



இந்த ஆய்வு கட்டுரை, இலங்கை ஏன் 2009 இற்கு பின்னரான காலகட்டங்களிலும் அதனது பாதுகாப்பிற்காக (Defense Budget) அதிகமாக செலவழிக்கிறது என்பதை பல கோணங்களில் ஆய்வு செய்கிறது.


2009 இற்கு பின்னர் இலங்கை அதனது Defense Budget இற்காக எவ்வளவு செலவு செய்கிறது?

விடுதலை புலிகளின் இருந்த காலத்தில், இலங்கையின் மொத்த செலவினத்தில் (Government Expenditure) பாதுகாப்பு செலவினம் 12% - 20% வரை சென்றிருந்தது. 

2009 இற்கு பிறகான காலகட்டத்திலும் இலங்கையின் பாதுகாப்பு செலவினம் அதே சதவீத கணக்கிற்குள்ளேயே தொடருகிறது.

இதற்கான புள்ளிவிபர வரைவை (படம்-4) இல் தந்திருக்கிறேன்.




இலங்கை பாதுகாப்பு செலவினத்தின் அதிகரிப்பை அளவிடுவதற்காக இலங்கையின் காலகட்டத்தை மூன்றாக பிரிப்போம்.


• முதலாவது காலகட்டம் என்பது விடுதலை புலிகளின் ஆயுதப்போராட்டம் தொடங்கியிராத காலகட்டமான 1948-1982.


• இரண்டாவது காலகட்டம் என்பது விடுதலை புலிகள் ஆயுதப்போராட்டம் நடந்த காலமான 1983-2009.


• மூன்றாவது காலகட்டம் என்பது போர் முடிந்த பிறகான காலமான 2009-2021.


இந்த முதலாவது காலகட்டத்தில் இலங்கையின் பாதுகாப்பு செலவினம் சராசரியாக அதனது GDP இல் 0.8% இருக்கிறது.

இரண்டாவது காலகட்டத்தில் இலங்கையின் பாதுகாப்பு செலவினம் சராசரியாக அதனது GDP இல் 3.3% எகிறுகிறது.

மூன்றாவது காலகட்டத்தில் இலங்கையின் பாதுகாப்பு செலவினம் சராசரியாக அதனது GDP இல் 2.4% இருக்கிறது.

உண்மையில் இலங்கையின் பாதுகாப்பு செலவினம் 2009 இற்கு பிறகு, முதலாம் காலகட்டத்திற்கு திரும்பியிருக்க வேண்டும்.ஆனால் திரும்பவில்லை.


இந்த புள்ளிவிபரத்தை (படம்-5) இல் தந்திருக்கிறேன்.




இலங்கையை ஒத்த நாடுகளின் பாதுகாப்பு செலவினம்


உண்மையில் இலங்கை தன்னுடைய இயலுமைக்கு மீறிய அளவுக்கு பாதுகாப்பிற்காக செலவு செய்கிறதா என்பதை கண்டறிய இந்த ஆய்வு கட்டுரை ஒரு ஒப்பீடை செய்கிறது.

இலங்கையை போன்ற சனத்தொகை, தலா வருமானம், போர், புவியியல் அமைவிடம் என்பவற்றை கொண்ட நாடுகள் சாம்பிளாக எடுக்கப்பட்டன. அவைகளின் பாதுகாப்பு செலவினத்தோடு இலங்கையின் பாதுகாப்பு செலவினம் ஒப்பிடப்பட்டது.

அதன்படி இலங்கை இன்னும் போர் சூழலில் இருக்கும் நாடுகளுக்கு ஒப்பான பாதுகாப்பு செலவினத்தை செய்துகொண்டிருக்கிறது என்பதை இந்த ஆய்வு கட்டுரை கூறுகிறது.

இதனை (படம்-6) இல் உள்ள அட்டவணை விளக்குகிறது.



ஏன் இலங்கை இன்றும் அதிக நிதியை Defense Budget இற்காக ஒதுக்குகிறது?

ஒரு நாட்டின் பாதுகாப்பு செலவினம் இரண்டு காரணங்களுக்காக சடாரென்று அதிகரிக்கும்.


1. ஒரு இறையாண்மை அரசுக்கு அந்நிய நாட்டால் ஏற்படும் அச்சுறுத்தல் (External security threat)

2. உள்நாட்டில் ஒரு இறையாண்மை அரசுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் (Internal security threat)


இலங்கைக்கான External security threat

இலங்கையின் சுமார் 3000 வருட வரலாற்றை எடுத்துகொண்டால் ஒரு விடயத்தை தெளிவாக காணமுடியும். 

ஐரோப்பிய நாடுகளின் காலனியாதிக்க காலத்தை தவிர்த்து பார்த்தால், அதனது வரலாறு நெடுக சிங்கள மன்னர்களது இராச்சியங்களின் மீது படையெடுப்பை நிகழ்த்தியது ஒரே ஒரு தேசம்தான். அது தமிழ்நாட்டின் சோழ சாம்ராஜ்யம்தான். வேறெந்த ஆசிய நாடுகளும் இலங்கை மீது படையெடுப்பை நிகழ்த்தியதில்லை.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து, இந்தியாவை தனக்கான அச்சுறுத்தலாக கருதியே அதனது வெளியுறவு கொள்கையை வடிவமைத்து வந்தது.

இது தொடர்பான விரிவான கட்டுரை ஒன்றை “தமிழீழம்-தமிழ்நாடு-இலங்கை-இந்தியா உறவுகளும்,வரலாறும்,அதன் உள்ளார்ந்த தன்மையும்” என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தேன்.

சரி. இனி இந்த பதிவிற்கு வருவோம்.


•  இலங்கையின் இன்றைய பாதுகாப்பு செலவினம் தொடர்ந்து அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம்?

இந்தியாவை தனக்கான அச்சுறுத்தலாக நினைத்து (External security threat ) தொடர்ந்து இலங்கை அதனது பாதுகாப்பு செலவினத்தை அதிகமாக வைத்திருக்கிறதா?

இதற்கான விடையை அறிய இலங்கை பாதுகாப்பு செலவினத்தின் உள்ளார்ந்த கூறுகளை அலசவேண்டும்.

இலங்கையின் பாதுகாப்பு செலவினத்தை உடைத்தால் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.


1 . personnel costs ( படைகளுக்கான ஊதியம்)

2. Procurement ( ஆயுத கொள்வனவு)

3. operations and maintenance costs (பராமரிப்பு,நிர்வாக செலவுகள்)

4. Research, Development, Test and Evaluation (RDT&E)

5. Other (மற்றையவை)


இலங்கை இராணுவத்தின் ஆயுத கொள்வனவு  (Procurement) செலவுகள்

இலங்கை இராணுவம், பாதுகாப்பு மொத்த செலவினத்தில் 10% குறைவான தொகையையே ஆயுத கொள்வனவிற்கு செலவழிக்கிறது.

ஆனால் 70% இற்கும் அதிகமான தொகையை அதனது படைகளின் ஊதியத்திற்கு செலவு செய்கிறது.

இதற்கான புள்ளிவிபர வரைவு (படம்-7) தரப்பட்டுள்ளது.



இலங்கையின் ஆயுத கொள்வனவு இந்தியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடியதா?

இலங்கை இராணுவம் பாதுகாப்பு மொத்த செலவினத்தில் 10% குறைவான தொகையையே ஆயுத கொள்வனவிற்கு  செலவு செய்கிறது என மேலே குறிப்பிட்டிருந்தேன்.

சரி. இந்த ஆயுத கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் இந்திய அச்சுறுத்தலை (External security threat) எதிர்கொள்ளக்கூடிய வலுவை 

கொண்டவையா? 

இல்லை என்பதை தரவுகள் நிருபிக்கின்றன.

இந்தியாவின் மரபு ரீதியான இராணுவ அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடிய வகையிலான ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படவில்லை என்பதை கீழே உள்ள Srilanka capability assessment தரவுகள் (படம்-8) தெளிவாக காட்டுகின்றன.




ஆக இலங்கையின் பாதுகாப்பு செலவு அதிகரிப்பு இந்திய இராணுவ அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டதல்ல என்பது இங்கு நிருபணமாகிறது.

அதாவது External security threat ஐ அடிப்படையாக வைத்து இலங்கை அதனது பாதுகாப்பு செலவினத்தை அதிகரிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

மிஞ்சியிருப்பது  Internal security threat மட்டுமே.


இலங்கைக்கான Internal security threat

இலங்கை அரசு , விடுதலை புலிகள் நடத்திய பலமான தமிழீழ ஆயுதப்போராட்டம் போன்ற ஒன்று  மீண்டும் இலங்கையில் வந்துவிடக்கூடாது என்பதை அடிப்படையாக வைத்தே அதனது பாதுகாப்பு செலவினத்தை அதிகரிக்கிறது.

இலங்கையின் பாதுகாப்பு செலவினத்தில் 70% ஐ அது அதனது படைகளுக்கான ஊதியமாக செலவு செய்கிறது.


அதன் பொருள் என்ன?

இலங்கை இன்னும் அதனது படை எண்ணிக்கையை அதிகமாக வைத்திருக்கிறது என்று பொருள்.

“Too much on manpower: On average, states spend 40 per cent of their defense budgets on personnel. This is true of island states too.

However, the Indian Ocean, Southeast Asian and South Asian regions spend over half their defense budgets on personnel. 

Sri Lanka is 10-percentage points higher than that average.”

(Daniel Alphonsus எழுதிய Sri Lanka’s Post-War Defence Budget: Overspending and Underprotection எனும் ஆய்வு கட்டுரையிலிருந்து)

இதற்கான புள்ளிவிபரத்தை (படம்-9) இல் காணலாம்.



இதனை முழுமையாக நீங்கள் புரிந்து கொள்ள இன்னொரு உதாரணத்தை அந்த ஆய்வு கட்டுரையில் இருந்தே தருகிறேன்.

இது இலங்கையின் கடற்படையினரின் எண்ணிக்கையை (Navy) இந்திய கடற்படையினரின் எண்ணிக்கையுடன் ஒப்பீடு செய்கிறது.

(இது கடற்படையினரின் எண்ணிக்கையே தவிர கடற்படையின் ஆயுத பலமல்ல)


“This may explain why Sri Lanka – the 58th largest country in the world by population – has the 24th largest army in the world. 

In fact, Sri Lanka’s Navy has 38,000 sailors, while the Indian Navy, a country whose population is 64 times greater, has a naval strength of 67,228. 

The result of spending so much on manpower has led to unusually low spending on procurement, research and development as well as testing and evaluation. Sri Lanka spends significantly less than other states in these areas.”

விடுதலை புலிகளோடு போரிட்ட காலத்தில் இருந்த அதே இராணுவ எண்ணிக்கையை இன்றுவரை இலங்கை தொடர்ந்து பேணிவருகின்றது. கிட்டத்தட்ட 317000 இராணுவம்.


இலங்கை இராணுவத்தின் உளவியல் போர்

இந்த பெரும் படையினை தொடர்ந்து வடகிழக்கில் வைத்திருப்பதன் மூலம், தமிழ் மக்கள் எந்தவொரு கணத்திலும் இன்னொரு ஆயுதப்போராட்டத்தினை பற்றி நினைக்காத அளவு ஒரு உளவியல் அழுத்தத்தினை பிரயோகிக்க நினைக்கிறது.

அதனாலேயே இலங்கை பெரும் நிதியினை அதனது பாதுகாப்பு செலவினத்திற்காக ஒதுக்குகிறது. 

அதிலும் குறிப்பாக அதனது man power இற்காக ஒதுக்கீடு செய்கிறது. 

இங்கு தமிழ் மக்கள் மீதான இராணுவ அழுத்தத்தினை உளவியல்ரீதியாக பிரயோகிக்க எண்ணிக்கையே முக்கியமானது. அதனாலேயே பெரும் படை எண்ணிக்கையை இன்றுவரை தொடர்ந்து தக்கவைத்து கொண்டிருக்கிறது.

அதனாலேயே Research, Development, Test and Evaluation (RDT&E), procurement என்பவற்றிற்கு பெருமளவு நிதியினை அது ஒதுக்குவதில்லை. ஏனெனில் இவைகள் இந்த உளவியல் அழுத்தத்திற்கு பெருமளவில் உதவாது.


இலங்கைக்கு எதிர்காலத்தில் உருவாக இருக்கும் நெருக்கடி

இன்று இலங்கை அரசு சம்பளத்திற்காக ஒதுக்கும் மொத்த செலவினத்தில் அரைவாசி இலங்கை இராணுவத்திற்காகவே செல்கிறது.

இது எதிர்காலத்தில் பெரும் நெருக்கடியை தரும். காரணம் இலங்கை பெரும் எண்ணிக்கையிலான படையினை தொடர்ந்து வைத்திருப்பதால் அதனது ஓய்வூதிய கொடுப்பனவும் அதிகரிக்கும்.

இன்றைய நிலையில் இலங்கையின் மொத்த ஓய்வூதிய கொடுப்பனவில் 17% இலங்கை இராணுவத்திற்கான கொடுப்பனவு.

எதிர்காலத்தில் ஓய்வு பெரும் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இலங்கையின் ஓய்வூதிய கொடுப்பனவு சதவீதம் இன்னும் அதிகரிக்கும்.

வளர்ந்த நாடுகளே ஓய்வூதிய கொடுப்பனவில் திணறி கொண்டிருக்கின்றன.

இதுதொடர்பான புள்ளிவிபரங்களை (படம்-10) இல் காணலாம்.




“The share of government pension expenditure accruing to military personnel has risen from 14.5 per cent to over 17 per cent in just three years. 

This number is likely to continue rising as the peak retirement level has most certainly not been reached yet. 

For context, Sri Lanka spent around US$1 billion (S$1.36 billion) on pensions, so military pensions cost the taxpayer approximately US$170 million (S$231.37 million) per year.”

(Daniel Alphonsus எழுதிய Sri Lanka’s Post-War Defence Budget: Overspending and Underprotection எனும் ஆய்வு கட்டுரையிலிருந்து)


இன்று காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இன்றைய 2K தமிழ் இளைய தலைமுறை கற்றுகொள்ளவேண்டிய ஒன்றும் உள்ளது.

மேலே இதுவரை விவரித்துள்ள தகவல்கள், இலங்கை அதனது சக்திக்கு மீறி பாதுகாப்பு துறைக்கு செலவினம் செய்து கொண்டிருக்கிறது என்பதை போதுமான புள்ளிவிபரங்களுடன் நிருபிக்கின்றன.

ஆனால் இன்றுவரை இலங்கையில் இருக்கும் ஒரு சிங்கள புத்திஜீவிகள் கூட, இலங்கை இத்தனை பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது ஏன் அதனது சக்திக்கு மீறி இராணுவத்திற்கு செலவு செய்கிறார்கள் என்ற கேள்வியை மறந்தும் கேட்கவில்லை.

ஏனெனில் சிங்கள புத்திஜீவிகளும் உறுதியாக இருக்கிறார்கள் எந்தவொரு காரணம் கொண்டும் தமிழீழ ஆயுதப்போராட்டம் மீண்டும் வந்துவிடக்கூடாது என்று. 

அதனால்தான் இலங்கை அரசு போர் முடிந்தபிறகும் இராணுவத்திற்காக அதிகம் செலவு செய்வதினை அமைதியுடன் கடந்து போகிறார்கள்.


சாராம்சம்

• விடுதலை புலிகள் தங்களது ஆயுத போராட்டத்தால் ஏற்படுத்திய தாக்கத்தினால், இலங்கை அரசு இன்னொரு தமிழீழ ஆயுத போராட்டம் உருவாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.

• அதனால் இலங்கை அரசு அதனது மொத்த செலவினத்தில் இன்றும் 12% - 20% ஐ பாதுகாப்பு செலவினத்திற்காக ஒதுக்குகிறது.

• இத்தகைய அதிகமான பாதுகாப்பு செலவினத்தால் இலங்கையின் Budget Deficit அதிகரித்து கொண்டே செல்வதையும் கண்டோம்.

• Budget Deficit அதிகரிக்கும்போது ஒரு இறையாண்மை அரசின் National Debt அதிகரிக்கும்.

• இன்று இலங்கை அரசின் பொருளாதார நெருக்கடி அதனது External debt இனால் உருவானது.

• Budget Deficit, National Debt, External debt என்பவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை (interconnected).

• விடுதலை புலிகள், அவர்கள் இருக்கும்போதும் இலங்கையின் பொருளாதார வலுவுக்கு சம்மட்டி அடி அடித்தார்கள்.

பின்னர் இலங்கை உலக ஒழுங்கின் உதவியுடன் போரை முடித்தது.

• ஆனால் போர் முடிந்தும், இலங்கை அதனது இராணுவ செலவை குறைக்க தயங்குகிறது.

காரணம் இன்னொரு தமிழீழ ஆயுத போராட்டம் உருவாகிவிடுமோ என்ற அச்சத்தினாலேயே அது தனது சக்திக்கு மீறிய இராணுவத்தினை கட்டி காக்கிறது.

இந்த போக்கினால் இலங்கையின் பொருளாதாரம், விடுதலை புலிகளின் தாக்கத்திலிருந்து இன்றுவரை மீளமுடியாமல் இருப்பதை காட்டுகிறது.


இப்பொழுது இந்த பதிவின் முதல் பந்திக்கே மீண்டும் வருகிறேன்.


ஒரு இறையாண்மை அரசு எப்பொழுது உருவாகும்?

“ஏற்கனவே உள்ள அரசுகள், இனிமேல் எதிர்தரப்பை அடக்கி வைக்கக்கூடிய  மனித வளமோ, பொருளாதார வளமோ தன்னிடம் இல்லை என்ற ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும்போதே, புதிய இறையாண்மையுள்ள அரசுகள் உருவாவதை அனுமதிக்கிறார்கள்.”

இதுவரை இந்த பந்தியை அதற்கான புள்ளிவிபரங்களோடு சரியாக உள்வாங்கி இருந்தீர்களேயானால், விடுதலை புலிகள் எப்படி ‘இனி விடுதலை புலிகளை அடக்கி வைக்கக்கூடிய பொருளாதார வலு தம்மிடம் இல்லை’ என்ற புள்ளிக்கு இலங்கை அரசை தள்ளியிருந்தார்கள் என்பதை காணலாம்.

அதுபோல விடுதலை புலிகள் எப்படி தங்களது போரியல் ஆற்றல் மூலமும் இலங்கையை இக்கட்டான நிலைக்கு தள்ளியிருந்தார்கள் என்பதை எனது பல போரியல் கட்டுரைகள் மூலம் நிறுவியிருக்கின்றேன்.


கற்பனையாக உங்களிடம் ஒரு கேள்வி

ஒருவேளை விடுதலை புலிகளுடனான போர் 2009 இல் முடிந்திராமல் இன்றுவரை தொடர்ந்திருந்தால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு என்ன நடந்திருக்கும்?


க.ஜெயகாந்த்

(இந்த கட்டுரை எனது முகநூலில் ஏப்ரல் 2022 இல் எழுதப்பட்டது)


இந்த பதிவோடு தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


• விடுதலை புலிகளின் வருடாந்தர போர் ஆயுதங்களுக்கான செலவினம்

விடுதலை புலிகளின் போர் ஆயுதங்களுக்கான வருடாந்தர செலவினம்




Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]