எல்லா சமாதான பேச்சுவார்த்தைகளும் சமாதானத்தை நோக்கியது அல்ல. அவை ராஜதந்திர/போரியல் நகர்வுகளின் ஒரு பகுதியாகவும் இருக்கும் (பகுதி-2)


 


இந்த தலைப்பின் பகுதி-1 இல் இலங்கையும் , உலக ஒழுங்கும் சமாதான பேச்சுவார்த்தையை விடுதலை புலிகளுக்கான பொறியாக எப்படி வடிவமைத்திருந்தன என்பதை விளக்கியிருந்தேன்.


அதன் இணைப்பு கீழே.

எல்லா சமாதான பேச்சுவார்த்தைகளும் சமாதானத்தை நோக்கியது அல்ல. அவை ராஜதந்திர/போரியல் நகர்வுகளின் ஒரு பகுதியாகவும் இருக்கும். (பகுதி-1)


இந்த பொறி இறுதிப்போரில் விடுதலை புலிகளுக்கு எதிராக எப்படி தீர்க்கமான பங்கை வகித்தது என்பதை விளக்குவதே இந்த பதிவின் நோக்கம்.


அதற்கு முன்பு பகுதி-1 ஐ வாசித்திராதவர்களுக்காக , இந்த சமாதான பேச்சுவார்த்தை என்ற பொறியினை மிக சுருக்கமாக விளக்கிவிடுகிறேன்.


இந்த சமாதான பேச்சுவார்த்தை என்ற பெயரின் பின்னே ஒளிந்திருந்த போரியல்/ராஜதந்திர நகர்வின் படிநிலைகள் என்னென்ன?


1. இந்த ‘சமாதான பேச்சுவார்த்தை’ என்ற பொறியின் மூலம் உலக ஒழுங்கின் அழுத்தத்தின் ஊடாக , இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் வராத அரசியல் தீர்வை புலிகளின் மீது திணிப்பது முதல்படி.


2. அப்படி அந்த அரசியல் தீர்வை புலிகள் ஏற்காத பட்சத்தில் , முடிந்தவரை பேச்சுவார்த்தையை இழுத்தடித்து குறிப்பிட்ட ‘கால அவகாசத்தை’ ஏற்படுத்தி கொள்ளுதல் இரண்டாம் படி. 


இந்த கால அவகாசம் என்பது இலங்கையின் போர் வலுவையும் , பொருளாதார வலுவையும் பலப்படுத்துவதற்கு தேவையான கால அவகாசம்.


3. இந்த பொறியை புலிகள் உணர்ந்து,  இலங்கைக்கு தேவைப்படும் அந்த ‘ கால அவகாசம் ‘ கிடைப்பதற்கு முன்பேயே பொறியை உடைத்து கொண்டு வெளியேற முனைந்தால் , அதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் சர்வதேச பாதுகாப்பு வலை (International Safty Net). 


உலக ஒழுங்கை கொண்டு அமைக்கப்பட்ட International Safty Net ஐ மீற விடுதலை புலிகள் துணியமாட்டார்கள் என்பது அவர்களின் கணிப்பு.


மேலே குறிப்பிட்ட படிநிலைகளில் , இரண்டாவது படிநிலை எப்படி இலங்கைக்கு தனது போர் வலுவையும் , பொருளாதார வலுவையும் பலப்படுத்துவதற்கு தேவையான கால அவகாசத்தை தந்தது என்பதையும், இது இறுதிப்போரில் விடுதலை புலிகளை வீழ்த்துவதற்கு எப்படி தீர்க்கமான பங்கை வகித்தது என்பதையும் இனி சுருக்கமாக விளக்குகிறேன். 


இதில் குறிப்பாக போர் வலுவை பற்றி மட்டுமே விளக்கியிருக்கிறேன்.


இலங்கையின் இறுதிப்போரான நான்காம் ஈழப்போர் தொடங்குவதற்கு முன்பிருந்த கள நிலவரம் முதலில் உங்களுக்கு தெரியவேண்டும்.


#ஈழப்போர்-2 (1990-1994), ஈழப்போர்-3 (1995-2001) காலங்களில் இலங்கையின் பத்திரிகைகளில் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட அறிவித்தல் இலங்கை அரசால் வெளியிடப்படும். 


இலங்கை இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்களுக்கு  அரசாங்கத்தால் வழங்கப்படும் பொதுமன்னிப்பும், மீளதிரும்புவதற்கான கால எல்லையும் பற்றிய அறிவித்தல்தான் அது. 


இத்தகைய அறிவித்தல்களை பற்றிய அனுபவம் இலங்கையில் வாழ்ந்தவர்களுக்கு நன்கு தெரியும். 


இந்த காலகட்டங்களில் எப்போழுதுமே ,இலங்கை இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்களின் எண்ணிக்கை  இராணுவத்தின் மொத்த எண்ணிக்கையில் 15-20 % குறையாமல் இருந்தது. 


இராணுவத்தில் இருந்தால் விடுதலைபுலிகளின் தாக்குதலில் நிச்சயமாக கொல்லப்படலாம் என்ற அச்சத்தில் தப்பி , தலைமறைவான சாமானிய வாழ்க்கையை வாழ்பவர்கள்தான் இவர்கள். 


இலங்கை அரசாங்கம் மீண்டும் மீண்டும் பொதுமன்னிப்பு வழங்குவது எதை காட்டுகிறது? 


இலங்கை இராணுவத்திற்கு கடுமையான ஆட்பற்றாக்குறை இருந்ததையே காட்டுகிறது. 


• அத்துடன் இராணுவத்திற்கு ஆட்களை திரட்டுவதற்காக இணைவதற்கான வயதெல்லையையும் ,கல்வி தகுதியையும் குறைத்து கொண்டும், வழங்கும் சம்பளத்தை அதிகரித்தும் கொண்டே வந்தது. 


• அன்றைய காலகட்டத்தில் இராணுவம் வழங்கிய சம்பளம் நல்ல உத்தியோகத்தில் இருந்தால் கிடைக்ககூடிய சம்பளத்தை விட அதிகம்.  


இவையெல்லாம் இராணுவம் ஆட்பற்றாக்குறையில் இருந்ததை தெளிவாக காட்டுகின்றன.


விடுதலை புலிகளின் போர் ஆற்றலும், குறிப்பாக அவர்களின் தொடர்ச்சியான அழித்தொழிப்பு சமர்கள் சிங்கள சாமானிய மக்கள் மீது ஏற்படுத்திய உளவியல் தாக்கமும்தான் , புதியவர்கள் இலங்கை இராணுவத்தில் சேர்வதற்கு பெரும் தடையாக இருந்தது.


இலங்கை இராணுவத்தின் இந்த ஆட்பற்றாக்குறைக்கு மத்தியிலும் Force Ratio (1:10) என புலிகளுக்கு எதிராகவே இருந்தது. அதாவது 1 புலிக்கு குறைந்தது 10 இராணுவம் என்ற வகையிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது 


இதன் தொடர்ச்சியாக ஓயாத அலைகள் சமர்கள், தீச்சுவாலை முறியடிப்பு சமர், கட்டுநாயக்கா விமான தளம் மீதான கமாண்டோ தாக்குதல் எல்லாம் ஏற்கனவே ஆட்பல ரீதியிலும், உளவியல் ரீதியிலும் பலவீனப்பட்டிருந்த இலங்கை இராணுவத்தின் முதுகெழும்பை முறித்துபோட்டன. 


இதிலிருந்து மீள எழும்புவதற்கு இலங்கை இராணுவத்திற்கு ஒரு பெரும் ‘கால அவகாசம்’ தேவைப்பட்டது.


இந்த கால அவகாசத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதுதான் சமாதான பேச்சுவார்த்தையும் மேற்கூறிய படிநிலைகளும்.


இந்த ‘கால அவகாசத்தில்’ இலங்கை இராணுவத்தில் பல முக்கியமான மாறுதல்கள் நடந்தன. 


இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்தமை


இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை , போர் காலத்தில் இருந்ததை விட சமாதான காலத்தில் 50% தால் உயர்ந்தது. காரணம் கால அவகாசம் சிங்கள மக்களின் புலிகளின் போர் ஆற்றல் மீதான உளவியல்  அச்சத்தை வெகுவாக குறைத்திருந்தது.


புலிகளின் போரியல்ரீதியான அழுத்தம் களத்தில் இல்லாதபோது இராணுவத்திற்கு ஆட்களை திரட்டுவது ஒப்பீட்டளவில் இலகுவாக இருந்தது.


இராணுவத்திற்கான செலவும் பொருளாதாரமும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பை கொண்டவை. பலவீனமான பொருளாதாரமுடைய அரசாங்கத்தால் இராணுவத்திற்கு அதிகமான நிதியை ஒதுக்கமுடியாது. 


விடுதலை புலிகள் போர் களத்தில் ஏற்படுத்திய அதே சேதத்தை இலங்கையின் பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்தியிருந்தார்கள். எதிரியின் போர் வலுவை பலவீனமாக்குவதற்கு அவனின் பொருளாதார வலுவையும் பலவீனமாக்கவேண்டும் என்பது அடிப்படை போரியல் விதிகளில் ஒன்று. 


ஆனால் சமாதான பேச்சுவார்த்தை கால அவகாசம் இலங்கைக்கு அதனது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை வழங்கியது.


முப்படைகளின் ஆயுத தளபாடங்கள் இரட்டிப்பானமை


அத்துடன் பகுதி-1 இல் குறிப்பிட்டபடி இலங்கை தனது சாமர்த்தியமான ராஜதந்திர நகர்வுகளின் மூலம், புவிசார் அரசியல் நலனை அடிப்படையாக கொண்டு உலக ஒழுங்கில் இருந்த Great powersகளை உள்ளிழுத்து இருந்தது. 


அவைகள் உள்நுழைந்தவுடன் இந்த நாடுகள் இலங்கை இராணுவத்திற்கு இலகு கடன் அடிப்படையில் ஆயுதங்களை வழங்க ஆரம்பித்தன. 


இலங்கை இராணுவத்தின் உளவியல் முன்னைவிட மேம்பட்டமை


 விடுதலை புலிகளின் தொடர் அழித்தொழிப்பு சமர்களின் வெற்றிகள் ஏற்படுத்திய உளவியல் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான வழியை இந்த கால அவகாசம் இலங்கை இராணுவத்திற்கு ஏற்படுத்தி கொடுத்தது.


• ‘கால அவகாசம்’ இலங்கை இராணுவத்திற்கு ஏற்படுத்திகொடுத்த அனுகூலங்களை புலிகளுக்கும் தந்ததா?


இதற்கு எதிர்மாறானதுதான் போராளி இயக்கங்களுக்கு ஏற்படும்.


• யுத்த நிறுத்த காலங்களில் இராணுவத்தை எதிர்த்து போராடவேண்டிய  புற அழுத்தம் உருவாகாது.அதனால் தாமாக விரும்பி சேரும் போராளிகளின் எண்ணிக்கை போர் காலங்களை விட குறைவாகவே இருக்கும்.


• அதுபோல் போராட்ட இயக்கத்தில் இருந்து விலகுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். காரணம் போராளிகள் ஊதியம் இல்லாமல் போராடுபவர்கள். யுத்த நிறுத்த காலங்களில் குடும்ப சுமையை ஏற்றுகொள்ளுதல், திருமணம், பெற்றோரின் அழைப்பு என பல காரணங்களால் விலகுவது அதிகரிக்கும்.


• போர் காலங்களில் ஏற்படும் இழப்புகள், நிர்ப்பந்தங்கள்  மக்களின் அரசியல் பார்வையை  கூர்மையுடன் வைத்திருக்கும். யுத்தநிறுத்த காலங்களில் மக்களுக்கு எதிரியின் மீதான கவனம் சிதறும்.


• ஊதியத்தின் அடிப்படையில் தொழில்ரீதியாக இயங்கும் ஒரு நாட்டின் இராணுவம் , போரின்றி எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் அதனுடைய கட்டமைப்பு குலையாது. ஆனால் விடுதலை இயக்கங்களின் போராளிகள் ஊதியமின்றி இயங்குபவர்கள். நீண்டகால யுத்த நிறுத்தம் விடுதலை இயக்கங்களின் கட்டமைப்பை குலைத்துவிடும்.


மேலே கூறிய சகல பாதிப்புகளும் விடுதலை புலிகளுக்கும் ஏற்பட்டது.


நீண்டகால யுத்த நிறுத்தங்களின் ஊடாக போராளி இயக்கங்களை அரசுகள் நீர்த்துபோக வைப்பது என்பது பல நாடுகளில் முன்னரே நடந்ததுதான். இது விடுதலை புலிகளுக்கும் தெரியும். 


ஆனால் விடுதலை புலிகளுக்கு இந்த ஆபத்தான பொறியினுடாக பயணப்பட்டு , இராணுவ வெற்றிகளை அரசியல் தீர்வாக மாற்றவேண்டிய கட்டாயம் இருந்தது. இதைப்பற்றி முன்னைய பதிவுகளில் விரிவாக விளக்கியிருக்கிறேன்.


இதை வாசிக்கும் போது உங்களுக்கு  யுத்த நிறுத்தம் , சமாதான பேச்சுவார்த்தைகள் என்பதன் மூலம் தொழில்முறையிலான இராணுவத்திற்கு ஏற்படும் சாதகங்களையும் , போராளி இயக்கங்களிற்கு  ஏற்படும் பாதகங்களையும் தெளிவாக உணரமுடியும். 


யுத்த நிறுத்த காலங்களில் ஒரு நாட்டின் இராணுவம் தன்னை பலப்படுத்தி கொள்வதற்கும் ,போராட்ட இயக்கம் தன்னை பலப்படுத்தி கொள்வதற்கும் பெரிய இடைவெளி இருப்பதை நீங்கள் காணலாம்.


விடுதலை புலிகள் யுத்தநிறுத்தம் செய்வதன் மூலம் தங்களின் இயக்கத்தை பலப்படுத்தி கொள்கிறார்கள் என்ற பொய்யை அரசுகளும், பத்திரிகைகளும், இராணுவமும் , இந்த உண்மையை சாமர்த்தியமாக மறைத்தே மக்களின் பொது புத்தியில் பதிய வைக்கின்றன.


• உண்மையில் இதற்கு முன்னர் பிரேமதாச அரசு அரசியல் தீர்வின்றி பேச்சுவார்த்தையை இழுத்தடிக்க முனைந்தபோது, சமாதான பேச்சுவார்த்தையை 3 மாதத்திலேயே முறித்துவிட்டு விடுதலைபுலிகளே போரை ஆரம்பித்திருந்தார்கள். 


• அதேபோல சந்திரிக்கா குமாரதுங்க அரசும்  பேச்சுவார்த்தையை இழுத்தடித்த போது , 100 நாட்களின் பின்னர் பேச்சுவார்த்தையை முறித்துவிட்டு விடுதலை புலிகள் போரை ஆரம்பித்திருந்தனர். 


போர்நிறுத்தத்தின் போது விடுதலை புலிகள் பலமடைவார்கள் என்பது உண்மையானால் , விடுதலை புலிகள் ஏன் குறுகிய காலத்திலேயே அதை முறிக்கவேண்டும் என்ற எளிய கேள்வியை கூட தனக்குள் கேட்டுகொள்ள முடியாத வகையில் இருப்பதுதான் தமிழ் சமூகத்தின் அவலம்.


இந்த முறை சமாதான பேச்சுவார்த்தையை முறித்து அந்த ‘கால அவகாசத்தை ‘ உடைக்க விடுதலைபுலிகள் தீர்மானித்தார்கள்.  ஆனால் அந்த 5 வருட சமாதான பேச்சுவார்த்தை காலத்திற்குள் இலங்கை இராணுவம் இரட்டிப்பாக தனது போர்வலுவை கூட்டியிருந்தது.


இலங்கையின் இந்த எண்ணிக்கை பலம் நான்காம் ஈழப்போரில் ஒரு தீர்க்கமான பங்கை வகித்தது. அந்த எண்ணிக்கை போரியல் ரீதியாக இலங்கைக்கு எத்தகைய சாதகத்தை தந்தது என்பதை தனி பதிவாக விளக்குகிறேன்.


நான் முன்னைய பதிவில் விளக்கியது போல விடுதலை புலிகளின் ஆயுத மௌனிப்பிற்கு மிக முக்கியமான காரணம் அவர்களின் ‘கடல் வழி ஆயுத விநியோகம்’ முற்றாக தடைப்பட்டதே.


இதைப்பற்றி முன்னர் ஒரு பதிவிட்டிருந்தேன்.


அதற்கு அடுத்த பிற காரணங்களில், இலங்கைக்கு தனது போர்வலுவை அதிகரிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய பங்கு இருக்கிறது.


இந்த பதிவின் தலைப்பையே மீண்டும் சொல்கிறேன்.


எல்லா சமாதான பேச்சுவார்த்தைகளும் சமாதானத்தை நோக்கியது அல்ல.


க.ஜெயகாந்த்

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]