தமிழ் மக்களை கொலை செய்த இலங்கை இராணுவத்தின் செயல்களும், சிங்கள,முஸ்லீம் மக்களை கொலை செய்த புலிகளின் செயல்களும் ஒரே வகையில் சமப்படுத்தமுடியுமா? - எண்கள் சொல்லும் செய்தி என்ன? - ஆய்வு பார்வையில் (பகுதி-2)
இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட விடுதலை புலிகளின் எண்ணிக்கையை கண்டறிவதுதான் பகுதி-2.
இந்த எண்ணிக்கையை சுலபமாக எடுத்துவிடலாம். ஒரே ஒரு சிக்கல் மட்டும் வரும். அதை பின்னர் சொல்கிறேன்.
ஒவ்வொரு வருடமும் மாவீரர் தினத்தை நினைவு கூறுகையில், விடுதலை புலிகள் தங்களது தரப்பில் இறந்தமொத்த போராளிகளின் எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவிப்பது வழக்கம்.
இந்த எண்ணிக்கையில் எந்தவிதமான ‘திருகு தாளங்களும்’ நடப்பதில்லை. இலங்கை இராணுவத்தை போன்று எண்ணிக்கையை ‘குறைத்து’ சொல்லும் வேலையை புலிகள் என்றும் செய்ததில்லை.
கீழே விடுதலை புலிகளின் ‘மாவீரர் பணிமனையால்’ வெளியிடப்பட்ட , 1983-2008 வரை ஒவ்வொரு வருடமும் இறந்த விடுதலை புலிகளின் எண்ணிக்கை பட்டியலை தந்திருக்கிறேன்.
வீரச்சாவடைந்த விடுதலை புலிகளின் இந்த எண்ணிக்கை பட்டியல், வருடம்தோறும் விடுதலை புலிகளினால் உத்தியோகபூர்வமாக மாவீரர் நினைவுகூறலின் போது அறிவிக்கப்படும். ஆண் மாவீரர்கள், பெண் மாவீரர்கள், கரும்புலிகள் என வகைப்படுத்தப்பட்டு இருக்கும். 2008 மாவீரர் பட்டியலை கீழே.
• ஆனால் நான் மேலே சொன்ன அந்த சிக்கல் இனிமேல்தான் வருகிறது.
விடுதலை புலிகளின் மாவீரர் பட்டியலை அவதானித்தால் புரியும்.
1982 முதல் 31-10-2008 வரை விடுதலை புலிகள் தரப்பில் உயிரிழந்த போராளிகளின் எண்ணிக்கை என உத்தியோகபூர்வமாக “மாவீரர் பணிமனையால்” அறிவிக்கப்பட்ட எண்ணிக்கை 22114 ஆகும்.
ஆனால் 01-11-2008 இலிருந்து போரின் கடைசி தருணமான 19-05-2009 வரையிலான 6 1/2 மாதகாலப்பகுதியில் இறந்த விடுதலை புலிகளின் எண்ணிக்கை எவ்வளவு? இதை எப்படி கண்டுபிடிப்பது?
எந்த வகையான வழிமுறையை பின்பற்றி இந்த
6 1/2 மாதங்களில் வீரச்சாவடைந்த புலிகளின் எண்ணிக்கையை கணிப்பது?
போரின் போக்கு, உள்ளார்ந்த தன்மை என்பவற்றிற்கு ஏற்ப உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏறி இறங்கும். இதை சில தரவுகளுடன் எளிமையாக விளக்குகிறேன்.
மேலே நான் தந்திருக்கும் பட்டியலை கவனியுங்கள்.
•1982-2008 வரையான 26 வருட மாவீரர் பட்டியல் மறைமுகமாக சில போரியல் தகவல்களை தருகிறது.
அதில் 1997, 1998 என்ற இரண்டு ஆண்டுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
1997 - வீரச்சாவடைந்த புலிகள் 2112
1998 - வீரச்சாவடைந்த புலிகள் 1806
•ஏன் இந்த 26 வருடத்தில் அதிகமான புலிகள் 1997 இல் வீரச்சாவடைந்தார்கள்?
காரணம் 1997 மே மாதம்தான் இலங்கை இராணுவம் ‘ஜெயசிக்குறு’ (தமிழில்- வெற்றி நிச்சயம்) எனும் ஒருபெரும் military campaign இனை தொடங்கியது.
வன்னி நிலப்பரப்பினை இரண்டாக பிளந்து கிழக்கு வன்னி பகுதியிற்குள் புலிகளை முடக்குவதுதான் இந்த இராணுவ நடவடிக்கையின் இலக்கு.
இந்த இராணுவ நடவடிக்கைதான், இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு தெற்காசியாவில் நடந்த நீண்ட கால இராணுவ நடவடிக்கை ஆகும்.
இந்த இராணுவ நடவடிக்கை 1997 மே மாதம் தொடங்கி 1999 பெப்ரவரி மாதம் வரை தொடர்ந்தது. அதாவது 1 வருடம் 8 மாதங்கள் இந்த military campaign தொடர்ந்தது. பின்னர் இலங்கை இராணுவம் இதை பாதியிலேயே நிறுத்துவதாக அறிவித்தது.
ஏனெனில் இந்த ‘ஜெயசிக்குறுவிற்கு’ எதிரான சமரில், விடுதலை புலிகள் ‘செய் அல்லது செத்து மடி-1’, செய்அல்லது செத்து மடி-2’, ‘செய் அல்லது செத்து மடி-1’, ‘ஓயாத அலைகள்-2’ என பல சமர்களை செய்து இலங்கை இராணுவத்தினருக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தி இருந்தார்கள்.
இலங்கை இராணுவம் இந்த ‘ஜெயசிக்குறு’ இராணுவ நடவடிக்கையில் மட்டுமே 5000 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரை இழந்தது.
அதேவேளையில் தங்களது இதயப்பகுதியான வன்னி நிலப்பரப்பிற்குள் இலங்கை இராணுவம் offensive military operation செய்யும்போது, விடுதலை புலிகளும் அதிக இழப்புகளை கொடுத்து எதிர் சமர் செய்திருப்பதை காட்டுகிறது.
காரணம் விடுதலை புலிகளின் Command and control (C2), ஆயுத வளங்கள், கடல் வழி ஆயுத விநியோகம், பயிற்சி, இத்யாதி என சகலதும் வன்னி நிலப்பரப்பையே ஆதாரமாக கொண்டிருந்தன.
•1999, 2000 இலும் கூட வீரச்சாவடைந்த விடுதலை புலிகளின் எண்ணிக்கை அதிகமாகத்தானே இருந்திருக்கிறது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.
ஆனால் இதற்கான காரணம் 1999 நவம்பர் மாதம் புலிகள் ஆரம்பித்த ஓயாத அலைகள்-3 எனும் military campaign ஆகும். புலிகள் இந்த offensive military operation இனை 2000 ஆண்டு இறுதி பகுதிவரைநடத்தினர். இந்த ஓயாத அலைகள்-3 military campaign இனை கட்டம்-1, கட்டம்-2, கட்டம்-3, கட்டம்-4 என நான்கு கட்டங்களாக நடத்தினார்கள்.
சரி. இனி 1997, 1998 காலப்பகுதிக்கே திரும்ப வருகிறேன். இந்த காலப்பகுதிக்கு ஒத்ததாக 31-10-2008 வரையான 10 மாத காலப்பகுதியில் மட்டும் விடுதலை புலிகள் 1974 போராளிகளை இழந்திருக்கிறார்கள்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் இன்னும் அதிகமான போராளிகளை இழந்திருக்கவேண்டும். அதையும் சேர்த்தால் 2008 ஆண்டில் இழந்த போராளிகளின் எண்ணிக்கை 1997 இல் இழந்த போராளிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக வரும்.
•ஏன் அப்படி?
இந்த 2008 காலப்பகுதியின் பிற்பகுதியில்தான், இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவம் வன்னி பெருநிலப்பரப்பிற்குள் உள்நுழைந்து புலிகளின் இதயப்பகுதியை கைப்பற்ற ஆரம்பித்தது.
இந்த காலப்பகுதியில்தான் கனகராயன்குளம், புளியங்குளம், மாங்குளம், ஒலுமடு, நெடுங்கேணி, பூநகரி, அம்பகாமம் என விடுதலை புலிகளின் பல முக்கிய பகுதிகள் வீழ்ந்தன.
தமது இயக்கத்தின் ஆதாரமான வன்னி நிலப்பரப்பின் இதயப்பகுதி வீழ்வதை தடுக்கும் வகையில், விடுதலைபுலிகள் அதிகமான உயிரிழப்பை கொடுத்து இருப்பதை 2008 ஆம் ஆண்டின் உயிரிழப்பு எண்ணிக்கை காட்டுகிறது.
• இதை இன்னும் தெளிவாக காட்ட இன்னொரு தரவினை தருகிறேன்.
27-11-2008 இல் வெளியான விடுதலை புலிகளின் மாவீரர் எண்ணிக்கை பட்டியல் அதுவரை வீரச்சாவடைந்தபுலிகளின் எண்ணிக்கையை தருகிறது.
அதன்படி அதுவரை இறந்த மொத்த மாவீரர்களின் எண்ணிக்கை 22390 என அறிவித்திருந்தது.
அத்துடன் இந்த பட்டியல் 2008 ஆம் ஆண்டில் மட்டும், 20-11-2008 திகதி வரை இறந்த புலிகளின்எண்ணிக்கை 2239 என்கிறது.
2,239 LTTE fighters have been killed in action in the largely defensive war of the Tigers in 2008.
(இணைப்பு கீழே)
https://www.tamilnet.com/art.html?artid=27600&catid=71
இதை இன்னும் அலசுவோம்.
31-10-2008 இல் வெளியான பட்டியலில் 2008 ஆம் ஆண்டில் மட்டும் வீரச்சாவடைந்த புலிகளின் எண்ணிக்கை 1974.
27-11-2008 இல் வெளியான பட்டியலில் 2008 ஆம் ஆண்டில் மட்டும் வீரச்சாவடைந்த புலிகளின் எண்ணிக்கை 2239.
ஆக 2008 நவம்பர் மாதம் மட்டுமே 265 புலிகள் வீரச்சாவு அடைந்திருக்கிறார்கள்.
இதே கணக்கில் விடுதலை புலிகளின் உயிரிழப்பு 2008 டிசம்பர் மாதமும் இருந்திருக்கும் என எடுத்துக்கொண்டால், 2008 ஆம் ஆண்டு மட்டும் வீரச்சாவடைந்த புலிகளின் எண்ணிக்கை குறைந்தது 2500 ஆக இருக்கும்.
ஆக இறுதிப்போர் இறுக்கமடைய இறுக்கமடைய, விடுதலை புலிகளின் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகமாயிருக்கிறது.
எப்பாடுபட்டாவது வன்னி பெருநிலப்பரப்பின் இதயப்பகுதியை தக்கவைக்க, பெரும் உயிரிழப்பினை கொடுக்க புலிகள் தயாராக இருந்திருக்கிறார்கள்.
ஆக பலவிதமான கோணங்களில், நவம்பருக்கு பின்னரான இறுதி யுத்தத்தின் இறுதி மாதங்களில் விடுதலைபுலிகள் எத்தனை போராளிகளை இழந்தனர் என கண்டறிய வேண்டியுள்ளது.
• மறுபடியும் மேலே நான் குறிப்பிட்ட அந்த சிக்கலிற்கே வருகிறேன்.
01-11-2008 இலிருந்து போரின் கடைசி தருணமான 19-05-2009 வரையிலான 6 1/2 மாத காலப்பகுதியில் இறந்த விடுதலை புலிகளின் எண்ணிக்கை எவ்வளவு? இதை எப்படி கண்டுபிடிப்பது?
எந்த வகையான வழிமுறையை பின்பற்றி இந்த
6 1/2 மாதங்களில் வீரச்சாவடைந்த புலிகளின் எண்ணிக்கையை கணிப்பது?
அல்லது
விடுதலை புலிகள் அறிவித்த 27-11-2008 இலிருந்து 19-05-2009 வரையான 5 1/2 மாத காலப்பகுதியில் வீரச்சாவடைந்த விடுதலை புலிகள் எத்தனை?
இந்த புள்ளியில்தான் ‘நன்னிச் சோழன்’ என்பவர் தனது www.yarl.com எனும் இணையப்பக்கத்தில் எழுதியஆய்வு கட்டுரை என் கண்ணில் பட்டது.
ஏனெனில் நன்னிச் சோழன் இறுதிப் போரின் இறுதி மாதங்களில் அதாவது கடைசி 5 1/2 மாதங்களில் வீரச்சாவடைந்த விடுதலை புலிகளின் எண்ணிக்கையை சில லாஜிக்குகளை பயன்படுத்தி கண்டறிய முற்பட்டிருக்கிறார். அந்த வழிமுறைகளுடாக அவர் கண்டறிந்த அந்த எண்ணிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடிய எண்ணிக்கையே.
அந்த நீண்ட ஆய்வு கட்டுரையை முற்றிலும் இந்த பதிவில் இணைப்பது சாத்தியம் இல்லை. அதனால் அந்த ஆய்வு கட்டுரையின் இணைப்பை கீழே தந்திருக்கிறேன்.
1982 முதல் 18.05.2009 நள்ளிரவு வரை களமாடி வீரச்சாவடைந்தோர் 25,500 - 26,500 - நன்னிச் சோழன்
• அந்த எண்ணிக்கையை கண்டறிய அவர் பயன்படுத்திய லாஜிக் பின்வருமாறு.
போரின் இறுதி மாதங்களில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்பு சுருங்கிக்கொண்டே வருகிறது.
மார்ச் மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து ஏப்ரல் மாதம் 20ம் திகதி வரையிலான 6 வார காலத்தில், புலிகளது வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்கள் “இரட்டைவாய்க்காலையும் வலைஞர்மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதியில்” விதைக்கப்படுகின்றன.
இந்த வித்துடல்கள் விதைக்கப்பட்ட இந்த பகுதிதான், புலிகளின் மாவீரர் துயிலும் இல்லமாக இந்த மார்ச்-ஏப்ரல் காலப்பகுதியில் இருந்திருக்கிறது.
அவரது ஆய்வு கட்டுரையில் இந்த பகுதியின் aerial view புகைப்படத்தை ஆதாரமாக தந்திருக்கிறார்.
படம் கீழே.
இந்த புகைப்படத்தில் மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட “கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடங்கள்” தெளிவாக தெரிகின்றன.
அந்த புகைப்படத்தின் ஊடாக அந்த மார்ச்-ஏப்ரல் காலப்பகுதியில், விதைக்கப்பட்ட “கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடங்கள்” எண்ணிக்கையை கண்டறிகிறார்.
அதன்படி போர் உச்சத்தில் இருந்த அந்த மார்ச்-ஏப்ரல் மாதத்தை உள்ளடக்கிய 6 வார காலப்பகுதியில், 850-900 “கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடங்கள்” உருவாகியிருக்கின்றன. அதாவது அந்த 6 வாரகாலப்பகுதியில் 850-900 போராளிகள் வீரச்சாவடைந்து இருக்கிறார்கள்.
அதன்படி இந்த மார்ச்-ஏப்ரல் மாத 6 வார காலப்பகுதியை அளவுகோலாக வைத்தால், மே மாதத்தில் வீரச்சாவடைந்த புலிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருக்க வேண்டும். அதே நேரம் இதே விகிதத்தில் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் விடுதலை புலிகளின் உயிரிழப்பு இருந்திருக்காது.
இந்த அளவுகோலின் அடிப்படையில், கடைசி ஐந்து மாதங்களில் வீரச்சாவடைந்த மொத்த மாவீரர்கள் எண்ணிக்கையானது தோராயமாக 2,550 - 3,000 ஆக இருந்திருக்கலாம் என்பது நன்னிச் சோழனின் முடிவு.
அதன்படி 2008 நவம்பர் இறுதியில் புலிகளால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட மாவீரர்களின் எண்ணிக்கை 22390. அதாவது 1982- 2008 நவம்பர் வரையில் வீரச்சாவடைந்த புலிகளின் எண்ணிக்கை 22390.
டிசம்பர் மாதம் ‘மேற்கூறிய அளவுகோலின் படி’ சுமார் 200 போராளிகள் வீரச்சாவடைந்து இருக்கலாம்.
அதே ‘அளவுகோலின் படி’ கடைசி ஐந்து மாதங்களில் வீரச்சாவடைந்த மொத்த மாவீரர்கள் எண்ணிக்கையானது தோராயமாக 2,550 - 3,000 ஆக இருந்திருக்கலாம்.
இந்த மூன்று எண்ணிக்கையையும் கூட்டினால் பின்வருமாறு வரும்.
22,390 + 200 + 3,000 = 25,590
இறுதியாக நன்னிச் சோழன், 26 வருட ஆயுத போராட்டத்தில் வீரச்சாவடைந்த விடுதலை புலிகளின் மொத்த எண்ணிக்கை 25500- 26500 ஆக இருக்கும் என்பதை முடிவாக தருகிறார்.
எனது பார்வையில் இந்த எண்ணிக்கை இன்னும் சிறிது கூடியிருக்கும் என்றே நினைக்கிறேன். காரணம் மே 18, 19 திகதிகளில் தலைவரின் கரும்புலி படையணி, மெய்பாதுகாவலர் படையணி தங்களது தலைவருக்காக பெரும் உயிர் தியாகங்களை செய்திருக்கும். அந்த எண்ணிக்கையை எல்லாம் உள்ளடக்கினால் 25000-27000 இற்குள் வரும் என்பதுதான் எனது அனுமானமும் கூட.
ஆக 26 வருட ஆயுத போராட்டத்தில் வீரச்சாவடைந்து மாவீரர்களான விடுதலை புலிகளின் மொத்த எண்ணிக்கை உச்சபட்சமாக 27000 என வைத்துக்கொள்ளலாம்.
அதாவது இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட விடுதலை புலிகளின் எண்ணிக்கை 27000.
இந்த 27000 இல் 22390 விடுதலை புலிகளால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கை என்பதை நினைவில் கொள்ளவும். மீதி எண்ணிக்கையைத்தான் கிடைக்கும் ஆதாரங்களை நாம் போரியல்ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தி பெற்றிருக்கிறோம்.
இனி அடுத்து விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை பகுதி-3 இல்.
க.ஜெயகாந்த்

















Comments
Post a Comment