தமிழ் மக்களை கொலை செய்த இலங்கை இராணுவத்தின் செயல்களும், சிங்கள,முஸ்லீம் மக்களை கொலை செய்த புலிகளின் செயல்களும் ஒரே வகையில் சமப்படுத்தமுடியுமா? - எண்கள் சொல்லும் செய்தி என்ன? - ஆய்வு பார்வையில் (பகுதி-3)
இனி அடுத்து விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை.
விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் சரியான எண்ணிக்கையை பெற்றுக்கொள்வதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.
ஏனெனில் இந்த பதிவில் மேலே குறிப்பிட்டது போல, போரில் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை இலங்கை இராணுவம் எப்பொழுதும் குறைத்தேதான் சொல்லி வந்திருக்கிறது.
அதனால் இதனை வேறு சில முறைகளை பயன்படுத்தித்தான் கண்டறியவேண்டும்.
• முதலில் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட ‘கொல்லப்பட்ட இராணுவத்தினரின்’ எண்ணிக்கையை பார்ப்போம்.
2018 மே 19 அன்று, யுத்த வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சியில், அன்றைய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரையாற்றும்போது குறிப்பிட்ட விடயத்தை இங்கு எடுத்துக்கொள்வோம்.
விடுதலை புலிகளுடனான போரில், 28708 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 40,107 இராணுவத்தினர் காயம்பட்டு ஊனமுற்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
“He announced that, according to the security forces, 28,708 soldiers were killed and 40,107 disabled.”
இணைப்பு : https://www.wsws.org/en/articles/2018/05/26/pres-m26.html
அதாவது 1983 -2009 வரை நடந்த 26 வருட போரில், 28708 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என இலங்கை ஜனாதிபதி உரையாற்றுகிறார்.
ஆக இலங்கை அரசின் கணக்கின்படி 28708 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
அதுபோல இன்னொரு விடயம்.
2015 இல் போரில் காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு (Presidential Commission on Missing Persons), காணாமல் போன சிங்கள படையினரை கண்டறிவதற்கு அவர்களின் குடும்பங்களினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 5000 என அன்றைய செய்தி ஊடகங்களில் பரவலாக செய்தி வந்திருந்தன.
அதாவது 5000 இலங்கை இராணுவத்தினரை இன்றுவரை காணவில்லை என அவர்களது குடும்பங்கள் கூறுகின்றன. அப்படியெனில் அந்த 5000 இராணுவத்தினர் இலங்கை அரசின் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் பட்டியலில் இல்லை.
“The Commission has held its sittings in 6 districts, except Trincomalee and Batticaloa in the North-East last year. It has received more than 20,000 complaints, including 5,000 complaints of missing Sinhala soldiers, according to media reports in Colombo.”
இணைப்பு: https://www.tamilnet.com/art.html?artid=37722&catid=79
இலங்கை இராணுவத்தின் கொல்லப்பட்டோர் பட்டியலிலும் இல்லை. காணாமல் போன சிங்கள படையினரும் அவர்களது குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை எனில் அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாகவே பொருள். அவர்களை இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்களாக கருதமுடியாது. தப்பி ஓடியவர்களாக இருந்திருந்தால் குடும்பத்துடன் இரகசியமாக தொடர்பில் இருப்பார்கள். அந்த குடும்பங்களும் காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வந்து கண்டுபிடித்து தருமாறு வேண்டுகோள் வைக்கப்போவதில்லை.
இலங்கை அரசு ஒப்புக்கொண்ட எண்ணிக்கையை எடுத்தால் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கை 28708.
இன்றும் காணாமல் போனவர்களாக கருதப்படும் (கொல்லப்பட்ட) இராணுவத்தினரின் எண்ணிக்கை 5000.
ஆக இரண்டையும் கூட்டினால் 33708.
தனது இழப்புகளை குறைத்து சொல்லும் இலங்கை இராணுவத்தின் கணக்கின்படி பார்த்தால் கூட, புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை 33708 வருகிறது.
• சரி. ஆனால் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கையை துல்லியமாக எப்படி கண்டறிவது?
துல்லியமாக கண்டறிவது சாத்தியம் இல்லை. ஆனால் ‘ஓரளவிற்கு’ துல்லியமான எண்ணிக்கைக்கு அருகே வரக்கூடிய வழிமுறை இருக்கிறது.
அது என்ன வழிமுறை?
வருடம்தோறும் விடுதலை புலிகள் தங்கள் மாவீரர் தினத்தை நினைவுகூறுகையில், தங்களது தரப்பில் ஏற்பட்ட இழப்புகளை உத்தியோகபூர்வமாக வெளியிடுவார்கள் என பகுதி-2 இல் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா.
அதன்படி விடுதலை புலிகளின் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையை வைத்து, அவர்களால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தின் உயிரிழப்பை ஓரளவிற்கு துல்லியமாக கணிக்கமுடியும்.
அந்த வழிமுறையை அறிந்து கொள்வதற்கு, முதலில் Casualty Exchange Ratio ஐ பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்.
• Casualty Exchange Ratio என்பது என்ன?
இரு தரப்புக்கும் இடையிலான போரின் உயிரிழப்பு விகித்தை இது சுட்டி காட்டுகிறது.
நம்மில் ஒருவரின் உயிரிழப்பிற்கு எதிராக எதிரி தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற விகித கணக்கு.
இலங்கையில் விடுதலை புலிகளின் பெரும் வெற்றிகரமான அழித்தொழிப்பு சமர்களை எடுத்து கொண்டால், Casualty Exchange Ratio என்பது 1-to-3 விகிதத்திற்கும் 1-to-5 விகிதத்திற்கும் இடையில் இருந்தது.
உதாரணமாக முல்லைத்தீவு இராணுவ தளம் மீது விடுதலை புலிகள் நடத்திய ஓயாத அலைகள் - 1 அழித்தொழிப்பு சமரில் இலங்கை இராணுவத்தினர் குறைந்தது 1500 பேர் கொல்லப்பட்டனர். விடுதலைபுலிகளின் தரப்பில் 330 போராளிகள் உயிரிழந்தனர். இதனது Casualty Exchange Ratio கிட்டத்தட்ட 1-to-5 . அதாவது ஒரு விடுதலை புலி போராளியின் உயிரிழப்பிற்கு பதிலாக 5 இராணுவத்தினர் உயிரிழந்தி்ருக்கிறார்கள்.
அதேபோன்று கிளிநொச்சி Military Complex மீதான விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் - 2 அழித்தொழிப்புசமரில் இலங்கை இராணுவத்தினர் குறைந்தது 1200 பேர் கொல்லப்பட்டனர். இதில் 684 இராணுவத்தினரின் உடல்களை International Committee of the Red Cross (ICRC) மூலமாக விடுதலை புலிகள் கையளித்தனர். விடுதலை புலிகளின் தரப்பில் 240 போராளிகள் கொல்லப்பட்டனர். இதிலும் Casualty Exchange Ratio கிட்டத்தட்ட 1-to-5 .
மேலே கூறிய இரண்டு சமர்களுமே புலிகளால் நடத்தப்பட்ட அழித்தொழிப்பு சமர்களாகும்.
புலிகளால் நடத்தப்பட்ட பெரும்பாலான அழித்தொழிப்பு சமர்களில், Casualty Exchange Ratio 1-to-3 அதிகமாக புலிகளுக்கு சாதகமாகவே அமைந்திருக்கிறது.
•அதுபோல புலிகளால் நடத்தப்பட்ட தற்காப்பு சமர்களில் கூட, Casualty Exchange Ratio கிட்டத்தட்ட 1- to - 2 ஆக புலிகளுக்கு சாதகமாகவே இருந்தது. அதாவது ஒரு புலி போராளி உயிரிழப்புக்கு இரண்டு இலங்கை இராணுவத்தினர் உயிரிழந்திருக்கிறார்கள்.
தற்காப்பு சமர் என்பது போரியல்ரீதியில் பின்வாங்குவதை அடிப்படையாக கொண்டு சண்டையிடும் உத்தி.
உதாரணத்திற்கு இலங்கை இராணுவம் யாழ்குடாவை கைப்பற்ற 1995 இல் றிவிரெச எனும் இராணுவ நடவடிக்கையை தொடங்கியது. 50 நாட்களுக்கும் மேல் நடந்த இந்த றிவிரெச நடவடிக்கையில் யாழ்ப்பாணநகர் இறுதியில் வீழ்ந்தது. இதில் புலிகள் தற்காப்பு சமரையே செய்தனர்.
இந்த றிவிரெசவிற்கு எதிரான தற்காப்பு சமரில் புலிகள் தமது தரப்பில் 438 போராளிகளை இழந்தனர். இலங்கை இராணுவம் தமது தரப்பில் இறந்த இராணுவத்தினர் எண்ணிக்கை என அறிவித்ததே 500 இற்கும்மேலே. இலங்கை இராணுவம் அறிவித்ததே 500 இற்கும் மேல் எனும்போது உண்மையான இராணுவத்தினரின் இழப்பு இன்னும் அதிகம் என்பது யதார்த்தம்.
அதைப்போலவே 1996 இல் இலங்கை இராணுவம் கிளிநொச்சி நகரை கைப்பற்ற ‘சத்ஜெய’ எனும் இராணுவ நடவடிக்கையை தொடங்கினர். இதிலும் புலிகள் தற்காப்பு சமரையே நடத்தினர்.
இந்த ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கை சத்ஜெய 1, சத்ஜெய 2, சத்ஜெய 3 என மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டது. இதற்கு எதிராக புலிகள் நடத்திய தற்காப்பு சமரில் புலிகள் தமது தரப்பில் 254 போராளிகளை இழந்தனர். இலங்கை இராணுவம் 600 இற்கும் மேற்பட்ட இராணுவத்தை இழந்தது.
மேலே குறிப்பிட்ட புலிகளின் தற்காப்பு சமர்களிலும், Casualty Exchange Ratio 1-to-2 இற்கும் அதிகமாகபுலிகளுக்கு சாதகமாகவே அமைந்திருக்கிறது.
•அடுத்தது புலிகளின் ambush வகை தாக்குதல்கள், hit and run வகை தாக்குதல்கள்.
ambush, hit and run வகை தாக்குதல்கள் முற்றிலும் கெரில்லா போர் உத்திகளை அடிப்படையாக கொண்டது.
கெரில்லா தாக்குதல்களின் அடிப்படை பண்பே குறைவான இழப்புகளுடன் எதிரிக்கு இழப்பை ஏற்படுத்துதல் என்பதுதான்.
எதிர்பாராத நேரத்தில் எதிரியை தாக்கி சேதம் ஏற்படுத்துவது, எதிரி கை ஓங்கினால் தமது தரப்பின் இழப்புகளை முடிந்தளவு தவிர்த்து பின்வாங்குவது. அதனால் ambush ஐ திட்டமிடும்போதே அவர்கள் பின்வாங்குவதற்கான exit route ஐயும் முன்கூட்டியே தீர்மானித்திருப்பார்கள்.
இந்த வகை ambush, hit and run வகை தாக்குதல்களில் புலிகளுக்கு ஏற்படும் உயிரிழப்பு என்பது மிக சொற்பமாகவே இருக்கும்.
காரணம் அழித்தொழிப்பு சமர், தற்காப்பு சமர்களிலாவது இலங்கை இராணுவத்திற்கு விமானப்படையையும், ஆர்ட்டிலறி, டாங்கிகளையும், மோட்டார்களையும் பயன்படுத்தி புலிகளுக்கு இழப்பை ஏற்படுத்தலாம். ஆனால் இங்கு அதற்கான நேரமே கிடைக்காது. புலிகளின் squad, platoon என்ற எண்ணிக்கை அளவிலேயே இயங்கும் அணிகள் மின்னல் வேகத்தில் தாக்குதலை நடத்திவிட்டு மறைந்துவிடும். (Squad என்பது சுமார் 10 பேரைகொண்டது , platoon என்பது 2-3 squad ஐ கொண்டது)
ஆக புலிகளின் கெரில்லா வகை தாக்குதல்களில் Casualty Exchange Ratio என்பது 1-to-5 இற்கும் அதிகமாக புலிகளுக்கு சாதகமாகவே இருக்கும்.
• மிக அரிதிலும் அரிதான சில மோதல்களிலேயே புலிகளின் உயிரிழப்பு இராணுவத்தினரை விட அதிகமாக இருந்திருக்கிறது. அதாவது இங்கு மோதல் என குறிப்பது சமர் (battle), raid, ambush எல்லாவற்றையும் உள்ளடக்கிய பொருளில் ஆகும்.
உதாரணமாக 1991 இல் புலிகள் ஆனையிறவு பெருந்தளம் மீது பெரும் அழித்தொழிப்பு சமரை நடத்தினார்கள். புலிகள் நடத்திய அந்த சமரிற்கான பெயர் ‘ஆகாய கடல் வெளி சமர்’. புலிகள் தமது போராளிகளில் 604 பேரை இழந்தனர். இலங்கை இராணுவத்தினரின் இழப்பு 400 இற்கும் கீழே.
இன்னொரு உதாரணம்.
ஜானகபுர இராணுவ பெருந்தளம் மீது 28/7/1995 அன்று, விடுதலை புலிகள் ஒரு அழித்தொழிப்பு சமர் ஒன்றை தொடுத்தி்ருந்தார்கள்.
ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த அழித்தொழிப்பு சமர் பெரும் தோல்வியில் முடிந்தது.
காரணம் புலிகள் இத்தகைய அழித்தொழிப்பு சமரை ஜானகபுர பெருந்தளத்தின் மீது நடத்த போகிறார்கள் என்பது இலங்கை இராணுவத்திற்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது.
இந்த தாக்குதல் பற்றிய தகவல்கள் தமக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது என்பதை இலங்கை இராணுவமே இந்த சமர் முடிந்த பின்னர் வெளிப்படையாக கூறியிருந்தது.
இந்த தாக்குதல் பற்றிய இரகசியம் எவ்வாறு இலங்கை இராணுவத்திற்கு தெரிய வந்தது என்பது தொடர்பாக பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகிறது.
இந்த தாக்குதல் நடவடிக்கை முன்கூட்டியே தெரிய வந்ததால், விடுதலை புலிகளின் தாக்குதல் அணியை உள்ளே வரவிட்டு பின்னர் அவர்களை முற்றுகைக்குள் உள்ளாக்கி இலங்கை இராணுவம் அழித்தது.
தோல்வியில் முடிந்த இந்த தாக்குதலில் விடுதலை புலிகளின் தரப்பில் சுமார் 180 போராளிகள் பலியாகினர். இலங்கை இராணுவத்தின் இழப்பு மிக சொற்பமே இந்த சமரில்.
ஆக இத்தகைய மிக அரிதிலும் அரிதான சில மோதல்களிலேயே விடுதலை புலிகளின் இழப்பு இலங்கை இராணுவத்தின் இழப்பை விட அதிகமாக இருந்திருக்கிறது.
ஆக விடுதலை புலிகளின் தாக்குதல்களை மூன்று பெரும் பிரிவுகளாக பிரித்து உதாரணத்துடன் காட்டியிருந்தேன்.
புலிகளின் அழித்தொழிப்பு சமர். Casualty Exchange Ratio ‘கிட்டத்தட்ட’ 1-to-5 புலிகளுக்கு சாதகமாக.
புலிகளின் தற்காப்பு சமர். Casualty Exchange Ratio 1-to-2 புலிகளுக்கு சாதகமாக.
புலிகளின் கெரில்லா வகை தாக்குதல்கள். Casualty Exchange Ratio 1-to-5 இற்கும் அதிகமாக புலிகளுக்கு சாதகமாக.
• ஆனால் ஒட்டுமொத்தமாக முழு போரையும் (War) கணக்கிலெடுத்து, அதில் உயிரிழந்த விடுதலை புலிகளின் கணக்கினை எடுத்து, அதனூடாக Casualty Exchange Ratio சமன்பாட்டை பிரயோகிப்பதற்கு ஒரு விகிதத்தை எடுக்கவேண்டும்.
அதன்படி விடுதலை புலிகளின் மூன்று வகையான தாக்குதல்களையும் கருத்திலெடுத்து, முழு போரிற்கும் பிரயோகிக்கக்கூடிய சமன்பாடாக Casualty Exchange Ratio 1-to-2 ஐ நான் எடுத்துக்கொள்கிறேன்.
மேலே விளக்கிக்கூறிய சமர் உதாரணங்களிலேயே குறைவான விகிதத்தை கொண்டது இந்த Casualty Exchange Ratio 1-to-2 தான் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். ஆக இருப்பதிலேயே குறைவான Casualty Exchange Ratio ஐ தான் நான் இங்கு எடுத்திருக்கிறேன்.
சரி. இனி இந்த Casualty Exchange Ratio 1-to-2 சமன்பாட்டை பிரயோகித்து, விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தை அறிவோம்.
ஆக 26 வருட ஆயுத போராட்டத்தில் வீரச்சாவடைந்து மாவீரர்களான விடுதலை புலிகளின் மொத்த எண்ணிக்கை உச்சபட்சமாக 27000 என மேலே குறிப்பிட்டிருந்தேன்.
Casualty Exchange Ratio 1-to-2 படி, விடுதலை புலிகளின் 27000 போராளிகள் உயிரிழந்ததனால், இலங்கை இராணுவம் குறைந்தது 54000 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள் என முடிவுக்கு வரலாம்தான். ஆனால் இதில் சின்ன சிக்கல் இருக்கிறது.
இதையும் மேலும் பகுப்பாய்வுக்கு உட்படுத்த விரும்புகிறேன். காரணம் இன்னும் சில போரியல்ரீதியான காரணிகள் இந்த எண்ணிக்கையை நிர்ணயிப்பதில் செல்வாக்கு செலுத்துகின்றன.
27-11-2008 இல் விடுதலை புலிகளால் வெளியிடப்பட்ட மாவீரர் பட்டியலின் படி, 2008 நவம்பர் வரைவீரச்சாவடைந்த புலிகளின் எண்ணிக்கை 22390. (படம் கீழே)
• ஈழப்போர்-4 நடந்த காலகட்டம் என்பது 2006-2009.
இதில் 1982-2005 வரையான காலப்பகுதியில் வீரச்சாவடைந்த விடுதலை புலிகளை தனியே பிரித்து எடுக்கிறேன்.
அதற்கு 22390 இலிருந்து 2006, 2007, 2008 ஆண்டுகளில் வீரச்சாவடைந்த புலிகளின் எண்ணிக்கையை கழிக்கிறேன்.
அதன்படி
2006 - 1006
2007 - 1200
2008 - 2239 (நவம்பர் வரை)
இந்த மூன்றையும் கூட்டினால் 4445 வருகிறது.
இனி 22390 இலிருந்து 4445 ஐ கழித்தால் 17945 வருகிறது.
ஆக 1982-2005 வரையான காலப்பகுதியில் வீரச்சாவடைந்த புலிகளின் எண்ணிக்கை 17945.
இனி ஈழப்போர்- 4 இல் மட்டும் வீரச்சாவடைந்த புலிகளின் எண்ணிக்கையை எடுப்போம்.
2006 - 1006
2007 - 1200
2008 - 2239 (நவம்பர் வரை)
2008 டிசம்பர் - 2009 மே வரையான 6 1/2 மாதங்கள் - 4610 (ஏனெனில் மொத்த புலிகளின் இழப்பு 27000 என்ற எண்ணிக்கையை ஏற்கனவே பகுதி-1 இல் முடிவு செய்திருந்தோம்)
இந்த நான்கையும் கூட்டினால் 9055 வருகிறது. (1006+1200+2239+4610)
இந்த கணக்கின் படி ஈழப்போர்-4 இல் மட்டும் வீரச்சாவடைந்த புலிகளின் எண்ணிக்கை 9055.
1982-2005 வரையான காலப்பகுதியில் வீரச்சாவடைந்த புலிகளின் எண்ணிக்கை 17945.
இனி இந்த இரண்டு எண்ணிக்கையையும் வைத்துக் கொண்டு கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை அறிய முயல்கிறேன்.
இந்த பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டது போல, 1982-2005 வரையான காலப்பகுதியில் வீரச்சாவடைந்த புலிகளின் எண்ணிக்கையை வைத்து, Casualty Exchange Ratio 1-to-2 என்ற விகிதத்தின்படி கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை எடுக்கிறேன்.
அதன்படி 1982-2005 வரையான காலப்பகுதியில் வீரச்சாவடைந்த புலிகளின் எண்ணிக்கை 17945. Casualty Exchange Ratio 1-to-2 இன்படி இதே காலகட்டத்தில் புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 35890.
• இனி ஈழப்போர்-4 இல் புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை கண்டறியவேண்டும்.
ஆனால் இந்த எண்ணிக்கையை அறிய, ஈழப்போர்-4 இல் வீரச்சாவடைந்த புலிகளின் எண்ணிக்கையை பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது.
சில போரியல் காரணங்களுக்காக Casualty Exchange Ratio 1-to-2 ஐ பயன்படுத்த நான் தயங்குகிறேன்.
• முதலாவது போரியல் காரணம் ஈழப்போர்-4 இல், விடுதலை புலிகள் நடத்திய அழித்தொழிப்பு சமர்கள் பற்றிய தகவல்கள் வெளியுலகிற்கு தெரிய வந்தது மிக குறைவாகவே இருக்கின்றன.
இந்த ஈழப்போர் - 4 இல் புலிகள் அழித்தொழிப்பு சமரை நடத்தினார்களா? அந்த அழித்தொழிப்பு சமர் எதிர்பார்த்த வெற்றியை தந்ததா? அவைகளின் Casualty Exchange Ratio என்ன? ஈழப்போர்-4 இல், வன்னிபெருநிலப்பரப்பின் மேற்கு கரையோரம் இலங்கை இராணுவம் முன்னேறியபோது, புலிகள் தற்காப்பு சமரை மட்டுமே நடத்தினார்கள். அந்த தற்காப்பு சமரின் Casualty Exchange Ratio என்ன? இப்படி பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன.
ஆனால் இலங்கை இராணுவம் வெளியிட்ட தகவல்களிலிருந்து, இலங்கை இராணுவத்தின் ஆதரவு தரப்பு வெளியிட்ட தகவல்களிலிருந்து சில விடயங்களை போரியர் பார்வையில் அனுமானிக்க முடியும்.
• முதலில் இராணுவத்தின் தகவல்களை எடுத்துகொள்கிறேன்.
ஈழப்போர்-4 இல் எத்தனை இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தரப்பு, இராணுவதரப்பு தெரிவிக்கின்றது?
“ஈழப்போர்-4 இல், 6261 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக’ அன்றைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் கூறுகிறது.
செய்தியும் இணைப்பும் கீழே.
“Since (the July 2006 battle at) Mavil Aru, 6,261 soldiers have laid down their lives for the unitary status of the motherland and 29,551 were wounded,” Defense Secretary Gotabaya Rajapaksa told the state-run Independent Television Network.
(Reuters- May 22, 2009)
இணைப்பு : Last phase of Sri Lanka war killed 6,200 troops
• KAMALIKA PIERIS என்பவர் எழுதிய ‘ERASING THE EELAM VICTORY - (Part 14)’ எனும் கட்டுரை, 53 வது டிவிசன் தளபதி கமல் குணரட்ண (தற்போதைய இலங்கை பாதுகாப்பு செயலாளர்) கூறுவதாக பின்வருவனவற்றை குறிப்பிடுகிறது.
‘ஈழப்போர்-4 கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நடந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்பின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் கடுமையாக சண்டையிட்டே கைப்பற்ற வேண்டியதாக இருந்தது. மூர்க்கமான சமர்கள் பல நடந்தன. இதில் 8500 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 29000 இராணுவத்தினர் காயமடைந்தனர்.ஆனால் புலிகளால் எங்களது முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை’
“Eelam war IV took four years. We had to fight for every inch of land we captured, said Kamal Gunaratne. There were fierce battles and the army lost 8500 and 29,000 were injured. but LTTE could not stop the forward march of the army.”
• இறுதி யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சர்வதேச அழுத்தங்களை சமாளிக்க, இலங்கை அரசு ‘இந்த போரில்இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை’ ஆராயவென ஒரு ஜனாதிபதி குழு ஒன்றை உருவாக்கியது.
அந்த ஜனாதிபதி குழுவின் பெயர் Lessons Learnt and Reconciliation Commission (LLRC). தமிழில்கூறினால் ‘கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’.
ஈழப்போர் - 4 இல் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை 5,556 என LLRC இன் அறிக்கை குறிப்பிடுவதாக International Crisis Group இன் கட்டுரை குறிப்பிடுகிறது.
“The LLRC reported that the scale of civilian casualties, especially from January to May 2009, was a key question for the commission. Yet it accepted what the defence ministry told it – that “an estimate of civilian deaths was not available”.
At the same time, the ministry had no problem providing an estimate of LTTE deaths – 22,247 for July 2006 to May 2009, with 4,264 confirmed by name for the period January to May 2009; or an estimate of security force deaths – 5,556 for July 2006 to May 2009.”
(International Crisis Group அமைப்பு, 27 Feb 2012 இல் வெளியிட்ட ‘Sri Lanka’s dead and missing: the need for an accounting’ கட்டுரையிலிருந்து)
• மேலே உள்ள பந்தியை கவனித்தால், ஈழப்போர்-4 இல் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை இலங்கை தரப்பு குளறுபடிகளுடன் சொல்வதை காணலாம்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஈழப்போர்-4 இல், 6261 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக கூறுகிறார்.
இன்னொரு கட்டுரை, ஈழப்போர்-4 இல் 8500 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக 53வது டிவிசன் தளபதி கமல் குணரட்ண கூறுவதாக சொல்கிறது.
இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட LLRC இன் அறிக்கை ஈழப்போர்-4 இல் 5556 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக கூறுகிறது.
கொல்லப்படும் இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை இலங்கை அரசு முன்னுக்குப்பின் முரணாக காலங்காலமாக சொல்லி வருவதால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
ஆனால் ஒன்றை உறுதியாக கூறமுடியும்.
மேலே கூறப்பட்ட 6261, 8500, 5556 என்ற மூன்று எண்ணிக்கைகளுமே இலங்கை அரசின் தரப்பால் குறைத்து சொல்லப்பட்ட எண்ணிக்கைகளாகும்.
உண்மையான எண்ணிக்கை மேலே குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் என்பதை உறுதியாக கூறமுடியும்.
இந்த KAMALIKA PIERIS எழுதிய ‘ERASING THE EELAM VICTORY - (Part 14)’ எனும் கட்டுரையில்இருந்து மேலும் சில விடயங்களை தருகிறேன்.
53 வது டிவிசன் தளபதி கமல் குணரட்ண கூறிய ஒரு தகவலை இந்த கட்டுரை தருகிறது.
“Kamal Gunaratne says the Muhamalai battle (2008) was the most decisive battle in the entire history of the Eelam war. LTTE tried its best to win and if they had succeeded, it would have been the birth of Eelam. But this defining battle has not received the prominence it should have.”
“2008 இல் முகமாலையில் நடந்த சமர்கள்தான், 26 வருட போரிலேயே அதி முக்கியத்துவம் பெற்ற சமர்களாகும். இந்த சமர்களில் புலிகள் வெற்றி பெற்றிருந்தால், தமிழீழம் பிறந்திருக்கும். ஆனால் இந்த சமர்கள் பெற்றிருக்கவேண்டிய முக்கியத்துவத்தை பொதுவெளியில் பெறவில்லை.”
அந்த முகமாலை சமர்களில், இலங்கை இராணுவம் எப்படி தொடர்ந்து பலத்த இழப்புகளை சந்தித்தது என்பதை இராணுவ தளபதி கமல் குணரத்தன தொடர்ந்து விவரிக்கிறார். அவை கீழே.
“LTTE FDL was at the head of the narrow 12 km wide neck which linked Jaffna to the mainland.
This space was unsuitable for tanks and it was difficult to maneuver infantry and tanks in the space. The army had lost a large number of tanks to anti-tank fire.
It was very arduous, dangerous and fearful to advance in this area, said Kamal Gunaratne, also suicidal.
LTTE could cover the army easily. LTTE had battle-ready reserve fighters at Pallai, Elephant Pass, Paranthan and Kilinochchi, to defend the Northern FDL.
LTTE did not hesitate to hit the government FDL whenever possible. LTTE hit the FDL bunker close to Kilali lagoon. They sent accurate, deadly fire on to the bunker, said Kamal Gunaratne with deep feeling.
In another instance, LTTE had allowed them to get into a cul-de-sac and then attacked them on three sides.
On a third occasion, the well-entrenched LTTE destroyed or damaged six armored vehicles, four T-55 tanks, and two BMPs, and killed 130 SLA soldiers.
At Muhamalai, the casualties were very high. Usually, an operation would end with around 200 or so dead and injured. In Muhamalai, the total was 440 officers and soldiers dead, 1986 injured, of which 280 were critically injured.”
மேலும் தொடர்ந்து முகமாலையில் நடந்த இரு சமர்களை விவரித்து செல்கிறது.
இத்துடன் முடிவடைந்து விடவில்லை.
• இராணுவ தளபதி கமல் குணரத்தன வன்னியில் நடந்த சமர்களை பற்றியும் குறிப்பிடுகிறார்.
“ஒட்டுச்சுட்டானில் நடைபெற்ற சமர் கடுமையானது. ஏனெனில் புலிகள் தங்களது உச்ச பலத்தை அங்கு வெளிப்படுத்தினார்கள். மாங்குளம்- முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் நடுவில் இருக்கும் ஒட்டுச்சுட்டான் கேந்திர முக்கியத்துவம் பெற்ற இடமாகும்.
அதுபோல புதுக்குடியிருப்பு பகுதியை கைப்பற்ற 2 1/2 மாதங்கள் கடும் சமர் நடந்தது. நான் வழிநடத்திய சமர்களிலேயே மிக மூர்க்கமான சமர் இங்குதான் நடந்தது. இந்த மூர்க்கமான சமரில் இலங்கை இராணுவம் பலதடவை பின்னடவை சந்தித்து மீண்டும் எழும்பி வந்தது. 20 வருடங்களுக்கும் மேலாக புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த புதுக்குடியிருப்பு பகுதியை பலத்த உயிரிழப்பை விலையாக கொடுத்து கைப்பற்றினோம்’
“In addition to the battles at Muhamalai, there were battles in the Wanni. there was a fierce battle at Odusuddan. LTTE was at its peak at Odusuddan said Kamal Gunaratne.
Odusuddan was in a strategic position on the Mankulam- Mullaitivu highway.
There was also a protracted battle at Pudukuduirippu. Pudukuduirippu was on the Paranthan Mullaitivu highway.
It took 2 ½ months to break the LTTE stranglehold on Pudukuduirippu. The battle of Pudukuduirippu was the most brutal of all battle I have ever commanded, said Kamal Gunaratne.
There were serious reversals during the battle. The army nearly lost, then the battle reversed and Pudukuduirippu fell. Pudukuduirippu was a valuable victory. LTTE had held it for over two decades. Pudukuduirippu was won at a tremendous cost, many died.”
ஈழப்போர் -4 இல் பல மூர்க்கமான, கடுமையான சமர்கள் நடந்ததையும், பலத்த இழப்புகளை, பெரும் பின்னடைவுகளை இலங்கை இராணுவம் சந்தித்ததையும் பல தகவல்களுடன் இராணுவ தளபதி கமல்குணரத்தன இந்த கட்டுரையில் பகிர்ந்திருக்கிறார்.
• Asia Pacific Defence Reporter, இதுபோன்ற தகவலை பின்வருமாறு கூறுகிறது.
“2009 பெப்ரவரி மாத வாக்கில் வன்னி பெரு நிலப்பரப்பின் தென் கிழக்கு திசையில் முன்னேறி வந்த 59 வது டிவிசன், Task Force 4 படையணி மீது புலிகள் அழித்தொழிப்பு சமர் தொடுத்தார்கள். ஆனால் புலிகள் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
அதுபோல பின்னர் வன்னி பெருநிலப்பரப்பின் வட திசையினுடாக முன்னேறி வந்த 55 வது டிவிசன் மீதும் புலிகள் அழித்தொழிப்பு சமர் தொடுத்தார்கள்.அதுவும் பயனளிக்கவில்லை”
(Asia Pacific Defence Reporter - March 2009, vol. 38/2, p. 18)
• மேலே இலங்கை இராணுவ தரப்பு தரும் தகவல்களின் ஊடாக பின்வருவனவற்றை அனுமானிக்க முடிகிறது.
ஈழப்போர்-4 இல் புலிகள் பல அழித்தொழிப்பு சமர்களை நடத்தியிருக்கிறார்கள். இராணுவத்திற்கு பலத்த இழப்புகள், பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் இராணுவம் மீள எழும்பி முன்னேறியிருக்கிறது.
ஈழப்போர்-4 இல் வீரச்சாவடைந்த புலிகளின் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு, Casualty Exchange Ratio 1-to-2 என்ற அடிப்படையில் கொல்லப்பட்ட இராணுவத்தினரை கணக்கிடாததற்கு இன்னொரு போரியல்காரணமும் இருக்கிறது.
• அந்த போரியல்காரணம் ஈழப்போர்-4 இல், 2009 இன் இறுதி வாரங்களில் இருந்த களநிலவரம்.
2009 இன் இறுதி வாரங்களில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு நிலப்பகுதி என்பது சில சதுர கிலோமீற்றராக சுருங்கிவிட்டது என்பதை நாம் அறிவோம். அத்தகைய கள சூழலில், tactical பார்வையில் ஆராய்ந்தால், இராணுவத்தின் கனரக ஆயுதங்கள், விமான குண்டுவீச்சில் புலிகளின் இழப்பு என்பது இராணுவத்தின் இழப்பை விட அதிகமாகவே இருந்திருக்கும். ஆக இந்த இறுதி வாரங்களில் Casualty Exchange Ratio என்பது இலங்கை இராணுவத்திற்கு சாதகமாக மாறியிருக்கும்.
• மேலே குறிப்பிட்ட இந்த போரியல் காரணங்களுக்காகவே, ஈழப்போர்-4 இல் புலிகளுக்கு ஏற்பட்டஇழப்புகளை தனியாக பிரித்து எடுத்தேன்.
காரணம் ஈழப்போர்-4 இல் புலிகள் தரப்பில் வீரச்சாவடைந்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து, Casualty Exchange Ratio 1-to-2 என்ற விகிதத்தில் இலங்கை இராணுவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பெறுவது சரியான முறையாக இருக்காது.
அதனால்தான் ஈழப்போர் - 4 இல் மட்டும், இராணுவ தரப்பு சொல்லிய தகவல்களை எடுத்துக்கொண்டு அதிலிருந்து போரியல் பார்வையில் சில அனுமானங்களை பெற முயன்றிருக்கிறேன்.
அதன்படி மேலே குறிப்பிட்டது போல, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஈழப்போர்-4 இல், 6261 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக கூறுகிறார்.
இன்னொரு கட்டுரை, ஈழப்போர்-4 இல் 8500 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக 53வது டிவிசன் தளபதிகமல் குணரட்ண கூறுவதாக சொல்கிறது.
இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட LLRC இன் அறிக்கை ஈழப்போர்-4 இல் 5556 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக கூறுகிறது.
ஈழப்போர்-4 இல் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கையை இலங்கையின் அரசும், இராணுவமும் முன்னுக்கு பின் முரணாக சொல்வதையும் இங்கு காணலாம்.
அதேநேரம் இராணுவத்தின் இழப்புகளை குறைத்து சொல்வதை காலங்காலமாக இலங்கை இராணுவம் செய்துவந்ததையும் நாம் நன்கு அறிவோம்.
அதன்படி மேலேயுள்ள மூன்று எண்ணிக்கையில், அதிகமாக எண்ணிக்கையான இராணுவ தளபதி கமல்குணரத்தன கூறிய 8500 எண்ணிக்கையை எடுத்துக்கொள்கிறேன்.
கமல் குணரத்தன கூறிய அந்த எண்ணிக்கையே துல்லியமானது அல்ல. காரணம் அவரும் அந்த எண்ணிக்கையை வெகுவாக குறைத்துத்தான் கூறியிருப்பார்.
அவர் கூறிய எண்ணிக்கையிலிருந்து மேலும் 50 சதவீதம் அதிகமாக இருக்கவே அதிக சாத்தியம் உள்ளது.
அதன்படி ஈழப்போர் - 4 இல் குறைந்தது 12000 இலங்கை இராணுவத்தினராவது கொல்லப்பட்டிருக்கவேண்டும். இது எனது போரியல் பார்வையிலான அனுமானம்.
ஆனால் தகுந்த தர்க்கங்களுடன் ஒன்றை நிறுவமுடியவில்லை எனில் அதை நாம் ஆய்வின் முடிவாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
அதனால் ஈழப்போர் - 4 இல் குறைந்தது 12000 இலங்கை இராணுவத்தினராவது கொல்லப்பட்டிருக்கவேண்டும் என எனது அனுமானம் இருந்தாலும் அந்த எண்ணிக்கையை நான் எடுக்கவில்லை.
இலங்கை இராணுவ தளபதி கமல் குணரத்தன கூறிய எண்ணிக்கையான 8500 வெகுவாக குறைத்து சொல்லப்பட்ட எண்ணிக்கை என தெரிந்தாலும், வேறு வழியின்றி அந்த எண்ணிக்கையை இறுதி எண்ணிக்கையாக எடுத்து கொள்கிறேன்.
அதன்படி 1982-2005 வரையான காலப்பகுதியில் வீரச்சாவடைந்த புலிகளின் எண்ணிக்கை 17945. Casualty Exchange Ratio 1-to-2 இன்படி இதே காலகட்டத்தில் புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 35890.
ஈழப்போர் - 4 (2006-2009) இல் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினர் 8500.
ஆக 1983-2009 வரையிலான 26 வருட போரில், புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை 35890+8500= 44390 ஆகும்.
26 வருட போரில், புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் மொத்த எண்ணிக்கை 44390 என்பது இறுதி எண்ணிக்கையாக முடிவாகிவிட்டது.
இனி அடுத்தது.
விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட சிங்கள, முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை பகுதி-4 இல்.
க.ஜெயகாந்த்













Comments
Post a Comment