இந்திய படைகளின் தலையீட்டை தடுக்க, விடுதலை புலிகள் அரசியல் கொலை மூலம் அப்புறப்படுத்திய 3 அரசியல் தலைவர்கள்
இந்திய படைகளின் தலையீட்டை தடுக்க விடுதலை புலிகள் நடத்திய pre-emptive strike தான், ராஜீவ் காந்தி மீதான அரசியல் கொலை என முந்தைய பதிவில் கூறியிருந்தேன்.
• உண்மையிலேயே ஒரு அரசியல் கொலையா நடந்தது?
இல்லை.
இந்திய படைகளின் தலையீட்டை தடுக்க, அந்த காலப்பகுதியில் 3 மிக முக்கியமான அரசியல் தலைவர்களை விடுதலை புலிகள் அப்புறப்படுத்தியிருந்தார்கள்.
முதலாவது ராஜீவ் காந்தி. இதை பற்றிய விவரங்களை எனது முந்தைய பதிவில் தந்திருந்தேன்.
இந்த பதிவில் மற்றைய இருவரை பற்றிய விவரங்களை தருகிறேன்.
• இந்திய படைகளின் தலையீட்டை தடுக்க விடுதலை புலிகள் அப்புறப்படுத்திய 2 வது அரசியல் தலைவர் யார்?
இலங்கையின் ஜனாதிபதி பிரேமதாச.
அடிப்படையில் பிரேமதாச தேசியவாதி. அந்நிய படையான இந்திய படை இலங்கையில் இருக்ககூடாது என்ற அவரது நிலைப்பாடும் , இந்திய படையை அகற்றவேண்டும் என்ற புலிகளின் போரும் ஒரு புள்ளியில் சந்தித்ததாலேயே இலங்கை அரசு புலிகளுக்கு ஆயுதங்களை தந்தது.
அதன் தொடர்ச்சியாக இந்திய படை வெளியேறிய பின், புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் பேச்சுவார்த்தை நடந்து பின் தோல்வியில் முடிந்தது. அதன் பின் 1990 ஜூன் மாதம் ஈழப்போர் 2 ஆரம்பமாகியது.
இந்த காலகட்டத்தில் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வு இடம்பெற்றது.
1991 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் , பிரேமதாசாவின் கட்சியை சேர்ந்த இரு பலமான தலைவர்களான லலித் அத்துலத் முதலியும் , காமினி திசாநாயக்கவும் பாராளுமன்ற உறுப்பினர்களை திரட்டி ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிராக impeachment தீர்மானத்தை கொண்டுவந்தார்கள்.
அன்றைய அரசியல் களத்தில் பிரேமதாசவிற்கு சம பலமுள்ள தலைவர்களாக இருந்தவர்கள் இந்த இருவரும் தான்.
இந்த இருவராலும் impeachment தீர்மானம் பிரேமதாசவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டது புலிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஏனெனில் இந்த லலித், காமினி இருவருமே இலங்கை - இந்திய ஒப்பந்ததை கொண்டுவர பின்னணியில் இருந்தவர்கள். பிரேமதாச இந்த ஒப்பந்ததை எதிர்த்தவர். அத்துடன் இந்திய படையை அந்நிய படை என எதிர்த்தவர்.
இந்த impeachment பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என புலிகள் சந்தேகம் கொண்டனர். ‘இதன் மூலம் பிரேமதாசவை தோல்வியடைய வைத்து லலித், காமினி இந்த இருவரில் ஒருவரை ஜனாதிபதியாக கொண்டுவர இந்தியா முயற்சிக்கிறது . அதன் பின் இந்தியா மறுபடியும் உள்நுழைய பார்க்கிறது ‘ என்று புலிகள் நினைத்தார்கள்.
அதற்காக தம் கட்டுப்பாட்டில் இருந்த ஈரோஸ் இயக்கத்தின் 11 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொழும்பிற்கு அனுப்பி பிரேமதாசவிற்கு ஆதரவாக வாக்களிக்க வைத்து அவருக்கு எதிரான impeachment இல் இருந்து காப்பாற்றினார்கள்.
• இதில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.
இலங்கையின் பாராளுமன்றத்தில் பிரேமதாச என்ற ஜனாதிபதிக்கும் லலித், காமினி எனும் இரண்டு தலைவர்களுக்கும் இடையே அதிகார போட்டி. இது சிங்கள தேசத்தில் நடக்கும் அதிகார போட்டி.
இதில் யார் வென்று ஜனாதிபதியாக வந்தாலும் தமிழீழத்தை அனுமதிக்க போவதில்லை. விடுதலை புலிகளுடன் போரை தொடரத்தான் போகிறார்கள்.
இதற்கு ஏன் விடுதலை புலிகள் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த ஈரோஸ் இயக்கத்தின் 11 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொழும்பிற்கு அனுப்பி பிரேமதாசவிற்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கவேண்டும்?
• இதில் மறைந்திருக்கும் உண்மை என்ன?
தங்களுக்கு எதிராக பிரேமதாச போர் செய்தாலும் , இந்தியாவின் தலையீட்டை தவிர்க்க பிரேமதாச ஜனாதிபதியாக நீடிக்கவேண்டியது அவசியம் என்பது புலிகளின் கணக்கு.
காரணம் பிரேமதாச அடிப்படையிலேயே ஒரு தேசியவாதி என்பதால் இந்திய தலையீட்டை என்றும் அனுமதிக்கமாட்டார் என்பது புலிகளின் கணிப்பு.
பிரேமதாசவும் விடுதலை புலிகளுடன் போர்தான் செய்யப்போகிறார். ஆனால் இந்திய தலையீடு என்பது மீண்டும் இருக்காது. அதனால் பிரேமதாச தொடர்ந்து நீடிப்பதுதான் சரியானது என்பது விடுதலை புலிகளின் அனுமானம்.
ஆக இங்கு பிரேமதாசவை காப்பாற்ற முனைந்ததற்கான ஒற்றை காரணமாக இருந்தது, இந்திய தலையீடு மீண்டும் நடந்துவிடக்கூடாது என்ற விடுதலை புலிகளின் எச்சரிக்கை உணர்வே.
• பிரேமதாசவும் மாற தொடங்கினார்
ஆனால் இந்த கணக்கு ஒன்றரை வருடங்களில் மாறதொடங்கியது. பிரேமதாச மெல்ல மெல்ல இந்தியாவை நோக்கி நகர ஆரம்பித்தார்.
காரணம் ஈழப்போர் 2 தொடங்கும்போது இலங்கை அரசாங்கத்திற்கு இருந்த போரியல் கணிப்புகள் பிழையாகி போயிருந்தன. உண்மையில் புலிகள்- பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தை முறிவடைய காரணம் இலங்கை அரசே.
ஏனெனில் பேச்சுவார்த்தை முறிந்து திரும்ப போர் மூண்டால் இலங்கை இராணுவத்தால் புலிகளை தோற்கடிக்க முடியும் என இலங்கை அரசு நினைத்தது. அதற்கான காரணங்கள் பின்வருவன.
• இரண்டு வருட இந்தியபடையினருடனான போரில் புலிகள் களைத்திருக்க ,மறுபுறம் இலங்கை படை போரின்றி புத்துணர்வுடன் இருந்தது.
• இந்த காலங்களில் இலங்கை படை தென்னிலங்கையில் வெற்றிகரமாக சிங்கள் இடதுசாரி இயக்கமான ஜேவிபியினரை அழித்திருந்தார்கள். இது அவர்களுக்கு உளவியல்ரீதியான பலத்தை அதிகரித்திருந்தது.
• இந்திய- இலங்கை ஒப்பந்ததிற்கு பின்னர் தமிழ்நாட்டை பின்தளமாக புலிகளுக்கு பாவிக்கமுடியாத நிலை. இது போரியல்ரீதியில் இலங்கை இராணுவத்திற்கு பெரும் சாதகமான நிலையை தரும் என்பது இலங்கையின் கணிப்பு.
• ஏற்கனவே இந்திய படையினருடனான போரில் புலிகளுக்கு ஆயுதங்கள் தந்ததே இலங்கை அரசு என்பதால் , புலிகளின் ஆயுத வளம் பற்றாக்குறையில் இருப்பதும் இலங்கைக்கு இன்னொரு சாதகமான விடயம் என நினைத்தது.
ஆக இத்தனை காரணிகளும் இலங்கை இராணுவத்திற்கு சாதகமாக இருந்ததால் பேச்சுவார்த்தையை இழுத்தடித்து புலிகள் மீது பாய சரியான தருணத்தை எதிர்பார்த்திருந்தது இலங்கை அரசு.
எதிரியின் இராணுவம் சாதகமான நிலையை தம் வசம் வைத்திருக்கும்போது, அந்த சாதக நிலையை தமது Pre-emptive strikes மூலம் neutralize செய்வது தலைவர் பிரபாகரனின் போரியல் உத்திகளில் ஒன்று.
Preemptive strike என்பது எதிரிக்கு முன்பே போரை தொடங்கும் ஒரு போரியல் தியரி.
A pre-emptive strike is military action taken by a country in response to a threat from another country - the purpose of it is to stop the threatening country from carrying out its threat.
A preemptive war is a war that is commenced in an attempt to repel or defeat a perceived imminent offensive or invasion, or to gain a strategic advantage in an impending (allegedly unavoidable) war shortly before that attack materializes. It is a war that preemptively 'breaks the peace'.
அதன்படி புலிகள் பேச்சுவார்த்தையை முறித்து போரில் இறங்கினார்கள். ஆனால் இலங்கையின் போரியல் கணிப்பெல்லாம் தலைகீழாக போயிருந்தது.
போர் தொடங்கிய சில மாதங்களுக்குள் புலிகள் கோட்டை, கொக்காவில், கொண்டச்சி போன்ற முகாம்களை வீழ்த்தியிருந்தார்கள்.
ஒரு வருடத்தில் ஆனையிறவு முகாம் மீது பாரிய முற்றுகை போர் தொடுத்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதம் இந்த முற்றுகை போர் நடந்தது. கெரில்லா இயக்கமாக இருந்த புலிகள் மரபு படையணியாக மாறியிருந்ததை இது உலகுக்கு அறிவித்தது.
புலிகளின் அழித்தொழிப்பு சமருக்கு உள்ளாகும் இலங்கை இராணுவத்தின் முகாம்களின் அளவும் , அதில் உயிரிழக்கும் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையும் பெரிதாகிகொண்டே போனது.
அத்துடன் புலிகள் தங்களின் asymmetric warfare ஆக கரும்புலி தாக்குதலை இலங்கையின் எந்த பாகத்திலும் நடத்தும் ஆற்றலை உருவாக்கியிருந்தார்கள்.
• களத்தின் நிலை இப்படி இருக்கையில்தான் ஜனாதிபதி பிரேமதாச , இலங்கையால் தனித்து நின்று புலிகளை வீழ்த்தமுடியாது என்ற முடிவோடு இந்தியாவை நோக்கி நகரதொடங்கினார்.
இந்த புள்ளியில்தான் பிரேமதாசாவை அகற்ற புலிகள் முடிவெடுத்தார்கள்.
1993 ஆம் ஆண்டு மே 1 ம் திகதி புலிகளின் தற்கொலை தாக்குதலில் ஜனாதிபதி பிரேமதாசா அரசியல்கொலை நடந்தது.
இந்த அரசியல் கொலைக்கான போரியல் காரணம் பிரேமதாச மூலமாக மீண்டும் இந்தியாவின் தலையீடு வரக்கூடாது என்பதே.
• இதனோடு தொடர்புடைய ஒரு கட்டுரையை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
போரியல் ஆய்வாளர் தராகி சிவாரம் எழுதிய “What went wrong between the Tigers and Premadasa” என்ற தலைப்பிலான கட்டுரையே அது.
நான் மேலே கூறிய தகவல்களை கீழேயுள்ள அவரது பதிவுகளும் குறிப்பிடுகின்றன.
“The Tigers became quite wary of Premadasa's intentions after this.
They had characterised him as a Sinhala chauvinist leader who was anyway a better bet for them because he was a strong nationalist – meaning that he would not seek Indian assistance to fight them.
It is in this context that they tried to save him during the crisis created by the impeachment. LTTE's decision to send the eleven EROS MPs who were under their control for the purpose of voting with the government on the impeachment, was based on the perception that the Indians were behind the move to impeach Premadasa and that they would prop up Gamini Dissanayake, who according to them would have no qualms about inviting India to crush them.
But it appears that from mid '92 the LTTE was becoming suspicious that Premadasa was gradually being drawn wittingly or unwittingly into the Indian orbit.
It was noted in the Peninsula that Premadasa was giving a free hand to what was described as the militarist lobby to push the line publicly that it would be stupid to talk to the LTTE and that it should be defeated militarily at whatever cost.”
(தராகி சிவராமின் “What went wrong between the Tigers and Premadasa” கட்டுரையிலிருந்து. வெளியான திகதி Tamil Times 15 June 1993)
• இந்திய படைகளின் தலையீட்டை தடுக்க விடுதலை புலிகள் அப்புறப்படுத்திய 3 வது அரசியல் தலைவர் யார்?
அந்த 3 வது தலைவர்தான் காமினி திசாநாயக்க.
இவர்தான் நான் முன்பு குறிப்பிட்ட , பிரேமதாசாவிற்கு எதிரான impeachment ஐ கொண்டுவந்த இருவரில் ஒருவர்.
அந்த அரசியல் நிகழ்விற்கு பின்பு பிரேமதாசாவால் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து லலித் அத்துலத்முதலியும் , காமினி திசாநாயக்கவும் நீக்கப்பட்டார்கள்.
இவர்கள் இருவரும் சேர்ந்து Democratic United National Front எனும் புதிய கட்சியை தொடங்கினார்கள்.
அன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதி பிரேமதாசாவிற்கு சவாலாக அந்த கட்சி இருந்தது. காமினி திசாநாயக்கவிற்கு ஒரு கறுப்பான வரலாற்று பக்கம் உண்டு.
1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் புத்தகங்கள் அழிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் சூத்ரதாரியே காமினி திசாநாயக்கதான்.
அவர் லலித்தோடு புது கட்சி ஆரம்பித்த பின்னர் எந்த பதவியும் இன்றிதான் இருந்தார். எந்தவித பாதுகாப்பு வளையமும் இல்லை. அதன் பின் சில ஆண்டுகளில் லலித் அத்துலத்முதலி , பிரேமதாச இருவரும் இறந்துபோகிறார்கள்.
அரசியலில் சந்திரிகா குமாரதுங்க புது நட்சத்திரமாக உருவாகிறார். அவரின் கட்சி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சந்திரிகா பிரதமர் ஆகிறார்.
பிரதமராக வந்தவுடன் புலிகளுக்கு சமாதான சமிக்ஞையை காட்டுகிறார். அவர் பிரதமராக வந்த 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் வருகிறது. இலங்கையின் ஜனாதிபதி பதவி என்பது அதி உச்ச அதிகாரத்தை உடையது. பிரதமர், அமைச்சரவை எல்லாவற்றையும் கட்டுபடுத்தகூடியது.
ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்காவிற்கு சவால் கொடுக்ககூடிய ஒரே தலைவர் காமினி திசாநாயக்கதான் என்பதால் ஐக்கிய தேசிய கட்சி காமினியை மீண்டும் உள்ளிழுத்து அவரை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக்குகிறது. அவரையே ஜனாதிபதி வேட்பாளராக்கிறது.
• இந்த புள்ளிவரை விடுதலை புலிகள் காமினியை தங்கள் இலட்சியத்திற்கான தடைகல்லாக கருதவில்லை.
ஆனால் அவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின் அதன் பின்னே நிகழகூடிய சாத்தியங்களை எடைபோட்டார்கள்.
ஒருவேளை காமினி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் இந்தியாவின் தலையீடு வரும் சாத்தியம் இருந்தது.
காரணம் முன்னரேயே குறிப்பட்டதுபோல காமினி திசாநாயக்க இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் பின்னணியில் இருந்தவர். புலிகளின் போர் ஆற்றல் தொடர்ந்து வளர்ந்துகொண்டே செல்வதால் இந்தியாவின் இராணுவ உதவியை நாடவேண்டும் என்ற கொள்கை உடையவர். அதனால் காமினி திசாநாயக்கவை அகற்ற முடிவு செய்தார்கள்.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தற்கொலை புலியால் அவர் அரசியல்கொலை செய்யப்பட்டார்.
அதன் பின்னே இருந்த போரியல்காரணம் மீண்டும் இந்திய தலையீடு வரக்கூடாது என்பதே.
• இந்த பதிவை அவதானமாக வாசித்திருந்தீர்களேயானால் ஒரு ஒற்றுமையை காண்பீர்கள்.
குறுகிய கால இடைவெளியில் ( 1991-1994) ராஜீவ் காந்தி , பிரேமதாச, காமினி திசாநாயக்க என மூவர் அரசியல் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் கொல்லப்பட்ட காரணம் , அந்த மூவரும் அவர்களின் கடந்தகால அரசியல் வாழ்வில் தமிழ் மக்கள் மீது அவிழ்த்து விட்ட வன்முறைக்கான பழிவாங்குதலிற்காக அல்ல.
இந்தியாவின் தலையீடு மீண்டும் வரக்கூடாது என்ற போரியல் காரணத்திற்காக.
மேலே கூறிய மூவரும் பாதுகாப்பு வளையம் இன்றி வலம்வந்த போது கூட ,புலிகளது போரியல் நலனுக்கு முரணாக இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு ஊறு விளைவிக்க புலிகள் முயற்சிக்கவில்லை என்பது வெளிப்படை. அதனால்தான் புலிகளது அரசியல் இலக்குகள் தனிமனித விருப்பு , வெறுப்பிற்கு அப்பாற்பட்டவை என்று சொன்னேன்.
• விடுதலை புலிகளின் போரியல் அணுகுமுறையை பின்வருமாறு சுருக்கமாக விவரிக்கலாம்.
• விடுதலை புலிகளின் போரியல் பலம் ஒன்று மட்டுமே தமிழீழத்தை நோக்கி நகர்த்தும்.
• அது ஒன்றே இலங்கையிடமும், உலக நாடுகளிடம் பேரம் பேசுவதற்கான சக்தியை தரும்.
• விடுதலை புலிகளின் போரியல் ஆற்றல் வீழ்ந்தால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்காது. ( உதாரணம்- 2009 இற்கு பின்னர் இதுதான் நடந்தது)
• அதனால் விடுதலை புலிகளின் போரியல் ஆற்றலை பலவீனப்படுத்தும் எதையும் அனுமதிப்பதில்லை.
அவ்வாறு புலிகளின் போரியல் ஆற்றலை பலவீனப்படுத்த முயலும் எந்த நிகழ்வையும் , நபர்களையும் முன்கூட்டியே அகற்றுவது போரியல் பார்வையில் pre-emptive strike என்று அழைப்பார்கள். அது பிரபாகரனின் போரியல் அணுகுமுறை.
இந்த பதிவை வாசிப்பவர்கள் கேட்கலாம். இதையெல்லாம் விடுதலை புலிகள் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்களா என்று. நிச்சயம் இல்லை.
ஆனால் விடுதலை புலிகளின் போரியல் நகர்வை கூர்ந்து அவதானித்து வந்தவன் என்ற வகையில் இதுதான் எனது அனுமானம்.
ஈழப்போர் 2 இலிருந்து நடந்த புலிகளின் தாக்குதல்கள் யாவுமே போரியல்ரீதியான நகர்வுகளே. அடுத்த பதிவில் இன்னும் சில அரசியல்கொலையான பிரமுகர்களின் தகவல்களை தருகிறேன்.
க.ஜெயகாந்த்
(மீள்பதிவு 2020)











Comments
Post a Comment