அரசியல் கொலைகள் மூலம் விடுதலை புலிகள் தங்களது போரியல் தேவையை நிறைவேற்றி கொண்டார்களா? ஆம் என்பதே பதில்.

 இந்திய படைகளின் தலையீட்டை தடுக்கவேண்டும் என்ற போரியல் தேவைக்காக, விடுதலை புலிகள் 3 அரசியல் தலைவர்களை அரசியல் கொலை மூலம் அப்புறப்படுத்தியிருந்தார்கள் என முந்தைய பதிவில் கூறியிருந்தேன்.


இதன் மூலம் விடுதலை புலிகள் தங்களது போரியல் தேவையை நிறைவேற்றி கொண்டார்களா? அதற்கான பயன் கிடைத்ததா? 

‘புலிகள் தங்களது போரியல் தேவையை நிறைவேற்றி கொண்டார்கள்’ என்பதுதான் பதில்.

‘அதற்கான பயன் கிடைத்தது’ என்பதுதான் பதில்.

இதை விளக்க முயல்வதுதான் இந்த போரியல் ஆய்வு கட்டுரையின் நோக்கம்.


இதை புரிந்துகொள்ள அன்றைய காலகட்டத்திற்கு பின்னோக்கி போகவேண்டும்.

முதலில் இந்தியாவை எடுத்துகொள்வோம்.

1991 இல் ராஜீவ் காந்தியை அகற்றியபிறகு, நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. என்று கவிழுமோ என்ற நிலை. அந்த 5 வருட ஆட்சியை நரசிம்மராவ் பூர்த்தி செய்ததே பெரிய சாதனை என ஊடகங்கள் கருத்து தெரிவிக்கும் அளவிற்கு இருந்தது.

இன்றைய மதிப்பீட்டில் நரசிம்மராவ் நவீன இந்திய பொருளாதாரத்தின் திறவுகோல்.

ஆனால் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் பிரபலம் இல்லாத தலைவர்.

அவரால் மறுபடியும் இலங்கை விவகாரத்தில் இந்தியா மூக்கை நுழைப்பது பற்றி நினைத்துகூட பார்க்கமுடியாது.

ஏனெனில் பலமான தலைவர்களால் மட்டுமே அந்நிய நாடுகளுக்கு படைகளை அனுப்புவது போன்ற கடினமான முடிவுகளை எடுக்கமுடியும்.

இங்கு ‘பலமான’ என்பது பல பரிமாணங்களை உடையது. ஆளுமை திறன், மக்களிடம் இருக்கும் செல்வாக்கு, கட்சியில் இருக்கும் செல்வாக்கு, நாடாளுமன்றத்தில் இருக்கும் சீட்டு என நீளும்.

மேலதிகமாக அன்று இந்தியாவின் பொருளாதாரம் அதல பாதாள நிலையில் இருந்தது. ரிசர்வில் இருந்த தங்கத்தை விற்க வேண்டிய நிலை. பாஜகவின் இந்துத்வா எழுச்சி, பாபர் மசூதி இடிப்பு, இந்து-முஸ்லீம் கலவரம் என பல பிரச்சினைகள்.

ஆக 1991- 1996 வரை இந்தியா இலங்கை விவகாரத்தில் அடக்கியே வாசித்தது. 

இதுதான் அன்றைய காலகட்டத்தில் விடுதலை புலிகளின் போரியல் தேவை. 


இந்திய படைகள் இலங்கையில் இருந்ததால், விடுதலை புலிகளின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி 1987-1990 வரையிலான காலப்பகுதியில் தடைபட்டிருந்தது பற்றி முன்னைய பதிவில் விளக்கியிருந்தேன்.

ராஜீவ் காந்தி அரசியல் கொலை மூலம் இந்திய படைகள் மீண்டும் வரும் சாத்தியத்தை நிறுத்தியதால், இந்த 1991-1996  காலப்பகுதியில் விடுதலை புலிகள் தமது அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியாக எதை அடையவேண்டும் என நினைத்தார்களோ அதை அடைந்து விட்டிருந்தார்கள்.

அவர்களுக்கு தேவைப்பட்ட போதுமான கால அவகாசம் கிடைத்துவிட்டிருந்தது.


•  அடுத்து 1996-1999 வரையிலான இந்தியா


இந்த 3 ஆண்டுகளில் மூன்று பிரதமர்களை இந்தியா பார்த்தது.


• தேவ கௌடா

•  ஐ.கே.குஜ்ரால்

• வாஜ்பாயி.

இந்த காலகட்டமும் இந்தியாவில் நிலையான ஆட்சி இல்லாத காலகட்டம்.

தலைவர்களுக்கு அவர்களின் ஆட்சியை தக்கவைப்பதே பெரும் சவால் என்ற நிலையில் இலங்கை விவகாரத்தில் ஒதுங்கியே இருந்தார்கள்.


அடுத்து 1999-2004


மீண்டும் வாஜ்பாயி தலைமையிலான பாஜக ஆட்சியில் அமர்ந்தது.

முழுமையாக 5 வருடங்களை நிறைவு செய்தது.

பாஜகவின் 5 வருட ஆட்சியில் அதனது இருப்புக்கு எந்த வித சிக்கலும் வரவில்லை. ஸ்திரமான அரசாகவே இருந்தது.


இந்த காலகட்டத்தில் இந்தியா இலங்கை விடயத்தில் எப்படி நடந்துகொண்டது?


இந்த காலகட்டத்திலும் இந்தியா இலங்கை விவகாரத்தில் பட்டும் படாமலேயே நடந்து கொண்டது.

முழுமையாக இலங்கை விவகாரத்தை கையில் எடுத்து கொள்ளும் துணிவு இந்தியாவிடம் அன்றும் இல்லாமல் இருந்தது.

இங்கு ஒரு விடயத்தை உங்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். ஏனெனில் இதை நீங்கள் பிழையாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.


இந்தியா ஒதுங்கியிருந்தது என்றால், ‘தமிழீழம் உருவானால் கூட கவலையில்லை’ என்று இருந்ததாக பொருள் அல்ல. 

இந்த காலகட்டங்களிலும் இந்தியா ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என வலியுறுத்தி கொண்டுதான் இருந்தது. புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தது. ஆனால் அதனது எல்லைக்குள்ளேயே நின்று கொண்டிருந்தது.

இலங்கை விடயத்தில் முன்பை போல அதிரடியாக நுழையும் ‘துணிவு’ இந்தியாவிடம் இருக்கவில்லை.




இதற்கு ஒரு வரலாற்று நிகழ்வை உதாரணமாக தருகிறேன். 


இது அன்றைய இந்தியா இலங்கை விவகாரத்தில் மீண்டும் உள்நுழைந்து கையை சுட்டு கொள்ள தயங்கிய மனநிலையை தெளிவாக காட்டும்.

ஏப்ரல் 2000 இல்,  விடுதலை புலிகள் தமது ஓயாத அலைகள் 3 (Unceasing Waves 3 [Phase 3, Phase 4]) நடவடிக்கையினூடாக ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பை கைப்பற்றியது.

அதன் பின்னர் யாழ்குடாவை கைப்பற்றுவதற்கான தாக்குதல்களை விடுதலை புலிகள் தொடங்கினர்.

அந்த நேரத்தில் யாழ்குடாவில் நிலைகொண்டிருந்த 40000 இலங்கை இராணுவத்தினரின் நிலை சிக்கலுக்குள்ளானது.

அவர்களின் ஆயுத,உணவு வழங்கல் பாதை முழுவதும் விமான படையை சார்ந்து இருக்கும் நிலைக்குள்ளானது.

யாழ்குடாவின் பலாலி விமானப்படை தளத்தினூடாகவே விமானப்படை இயங்கியது.

விடுதலை புலிகளின் படைப்பிரிவு தொடர்ந்து முன்னேறினால், புலிகளது பீரங்கிகளின் சுடு எல்லைக்குள் பலாலி விமானப்படை தளம் வந்துவிடும். அப்படி அதனது சுடு எல்லைக்குள் வந்துவிட்டால் விமான பாதைகள் தாக்கப்படும். விமானப்படை விமானங்கள் ஏறி இறங்க முடியாது.

ஆயுத,உணவு வழங்கல் பாதை முற்றாக தடைப்படும். 


“After a two-day pause the Tigers are expected to renew their assault, by attempting to shell the runway at Palalai, the government's only functioning air base. 

They need to advance only three miles more before the airstrip comes into range of Tiger heavy artillery. If the airport is destroyed, the government has little choice but to evacuate.”

(Guardian பத்திரிகை செய்தியிலிருந்து. 5/5/2000)


Guardian செய்தி : Sri Lankan government panics as fight for Jaffna reaches endgame


போர் களம் இந்த நிலையில் இருக்கும்போதுதான் இலங்கை அரசுக்கு பெரும் சிக்கல் எழுந்தது.


யாழ்குடாவில் இருக்கும் 40000 இலங்கை இராணுவத்தின் ஆயுத,உணவு வழங்கல் பாதையை விடுதலை புலிகள் முற்றாக நிறுத்திவிட்டால் என்ன ஆகும்?

ஆயுதமும், உணவு இல்லாமல் போனால் பெரும் இராணுவ இழப்பை விலையாக கொடுக்க வேண்டிவரும். 

அதை தடுக்க ஒரே ஒரு மாற்றுவழிதான் இருந்தது.

‘ஒருவேளை’ புலிகள் முற்றாக இராணுவத்தின் ஆயுத,உணவு வழங்கல் பாதையை நிறுத்தினால், யாழ்குடாவில் உள்ள சகல இராணுவத்தையும் கடல் வழியினூடாக மீட்பது.

இதுவும் எளிதான காரியமல்ல. 

காரணம் மீட்க நுழையும் இலங்கை கடற்படையின் துருப்பு காவி கப்பல்களும், அதனது தாக்குதல் கப்பல்களும் கடற்புலிகளின், கடற்கரும்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும்.

இதை எல்லாம் தடுக்க இலங்கை இந்தியாவிடம் உதவி கோரியது.


Guardian செய்தி இணைப்பு: Plea for India to rescue 40,000 Sri Lankan troops


இலங்கை இராணுவத்தின் பெரும் இழப்பை தவிர்க்க இந்தியாவிடம் உதவி கோரிய இலங்கை


இதற்கு 5/5/2000 இல், பிரிட்டனின் guardian பத்திரிகையில் வந்த செய்தியை கீழே தருகிறேன்.


On Wednesday night India's foreign minister Jaswant Singh ruled out intervention in the conflict. 

Sri Lanka's foreign minister Lakshman Kadirgamar, who had flown to New Delhi to meet the prime minister, Atal Bihari Vajpayee, left empty-handed. 

India's refusal to intervene is hardly surprising. As part of a peace accord, India sent troops to disarm the Tamil Tiger rebels in 1987 but pulled out three years later after losing more than 1,000 soldiers. 

The episode led directly to the assassination of India's former prime minister Rajiv Gandhi, who was blown up by a Tamil suicide bomber in 1991.”

இலங்கை இந்தியாவிடம் உதவி கேட்கிறது.

இந்திய அரசு இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்கமுடியாது என ‘உத்தியோகபூர்வமாக’ மறுக்கிறது.

திரைமறைவில் இந்தியா புலிகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் சாத்தியத்தை மறுக்கவில்லை.

இதே உள்ளடக்கத்தை கொண்ட இன்னொரு கட்டுரை இதே காலப்பகுதியில் Frontline பத்திரிகையும் வெளியிட்டிருந்தது. கீழே இணைத்திருக்கிறேன்.





மீண்டும் முதலில் இருந்து வருகிறேன்.


விடுதலை புலிகள் தமது போரியல் தேவைக்காக ராஜீவ் காந்தியை அகற்றியதால், இந்தியாவின் தலையீட்டை 1991-2004 வரை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

இந்த காலகட்டத்தில் விடுதலை புலிகள் போரியல் ஆற்றலில் உச்சத்தை தொட்டிருந்தார்கள். தமிழீழ இலக்கை அடைவதற்கு விடுதலை புலிகள் எத்தகைய கட்டமைப்பை,வளர்ச்சியை அடைந்திருக்கவேண்டுமோ அதையெல்லாம் அடைந்திருந்தார்கள். இந்த கட்டமைப்புகள் பற்றி தனி பதிவாக விளக்குகிறேன்.


இப்பொழுது மறுவலமாக அணுகுவோம்.

இதே ராஜீவ் காந்தி 1991 இல் மீண்டும் பிரதமராக வருகிறார் என வைத்துகொள்வோம். மீண்டும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய படைகளை இலங்கைக்கு அனுப்புகிறார் என வைத்துகொள்வோம்.

இலங்கையிலும் பிரேமதாசவுடன் புலிகள் ஈழப்போர்-2 ஐ, 1990 ஜூன் மாதமே ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த பக்கம் இந்திய படைகள் மீண்டும் இலங்கைக்கு வருகின்றன. மறுபக்கம் இலங்கை படைகளும் புலிகளுக்கு எதிராக நிற்கின்றன.

1991 இல் பெரிதாக வளர்ச்சியடையாத விடுதலை புலிகளுக்கு எதிர்நிலையில் இந்திய படைகளும், இலங்கை படைகளும் ஒன்றாக நின்றிருந்தால் என்ன நடந்திருக்கும்?

2009 இல் நடந்தது 1991 இல் நடந்திருக்கும்.


அடுத்த கேள்வி. இதை நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தியை அரசியல் கொலை செய்தால் இந்தியாவின் பெரும் பகையை சம்பாதிக்கவேண்டுமே. தெரிந்தும் ஏன் இதை விடுதலை புலிகள் செயதார்கள்?

இதே கேள்வியை நான் உங்களிடம் கேட்கிறேன்.

இந்தியாவின் பெரும் பகையை சம்பாதிக்க வேண்டிவரும் என தெரிந்தும், விடுதலை புலிகள் ராஜீவ் காந்தியை அப்புறப்படுத்துகிறார்கள் என்றால் ஒரு காரணம் இருந்திருக்கும் என்று பொருள். அதற்கான போரியல் கட்டாய தேவை விடுதலை புலிகளுக்கு இருந்திருக்கிறது என்றே பொருள்.

காரணம் ராஜீவ் காந்தியை அகற்றியதால்தான், இந்தியாவின் தலையீட்டை அடுத்த 15 வருடங்களுக்கு தடுத்து நிறுத்தியிருந்தார்கள்.

தமிழீழ இலக்கினை நோக்கி மிக நெருக்கமாக வரமுடிந்தது. உலக ஒழுங்குடன் புவிசார் சதுரங்க ஆட்டத்தை ஆடமுடிந்தது. உலக ஒழுங்கு புறக்கணிக்க முடியாத நிலையை தோற்றுவிக்கமுடிந்தது.

இல்லாவிடில் நான் சொன்னது போல 2009 இல் நடந்தது 1991 இல் நடந்திருக்கும்.


தலைவர் பிரபாகரன் 1985 இல் ஒரு பேட்டியில் சொன்னது இந்த விடயத்திற்கு பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

“போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது”

விடுதலை புலிகளின் பார்வையில், ‘போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது’ என்பதற்கு ஏற்ப  1991 இல் ராஜீவ் காந்தியை அப்புறப்படுத்தியதால் 2009 வரை புலிகள் இருக்கமுடிந்தது.


க.ஜெயகாந்த்


(மீள்பதிவு 2020)

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]