விடுதலை புலிகள் தமது ஓயாத அலைகள் 3 இன் மூலம் “ஆனையிறவு இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பை’ கைப்பற்றியதன் முழு போரியல் பரிமாணத்தை புரிந்துகொள்ள திணறும் தமிழ் இனம்

 புலிகள் ஆனையிறவு இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பை கைப்பற்றிய போர்முறை என்பது உலக போரியல் வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டிய போரியல் சாதனை.


புலிகளின் போரியல் சாதனையை, அதனது முழு பரிமாணத்தை, அதனது கனதியினை முறையாக தமிழினம் உள்வாங்கியிருக்கிறதா? 


இல்லை.


தமிழினம் புலிகளின் ஓயாத அலைகள் 3 போரியல் சாதனையை எவ்வாறு உள்வாங்கியிருக்கிறது?


எல்லோரும் கிளிப்பிள்ளை போல 40000 இலங்கை இராணுவத்தினரை 1200 புலிகள் வீழ்த்தி ஆனையிறவு இராணுவ தளத்தை வீழ்த்தியதாக சொல்கிறார்கள். அவ்வளவுதான். அதற்கு மேல் தெரியாது.

முதலில் இந்த எண்ணிக்கையும் சரியானதல்ல.


ஓயாத அலைகள் 3 (கட்டம் 3, கட்டம் 4) இல் உள்ள கனதியான போரியல் கூறுகளை மிக சுருக்கமாக, மேலோட்டமாக, எளிமையாக சொல்லிவிடுகிறேன்.


குறிப்பாக 2 முக்கியமான விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


முதலாவது விடயம்


ஓயாத அலைகள் 3 ஐ, சமர் (Battle) என அழைப்பதா அல்லது Military Campaign என அழைப்பதா?

இது ஒரு பெரும் சிக்கல். குழப்பமானது. 

ஏனெனில்  Battle இற்கும் Military Campaign இற்கும் இடையிலான வேறுபாடுகள் நுண்ணியது.

அவைகளின் கால அளவு, இலக்குகளின் தன்மை, இலக்குகளின் பரிமாணம், அவை ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்பவற்றை கொண்டு முடிவுசெய்யப்பட வேண்டியது.


சரி. Battle இற்கும் Military Campaign இற்கும் என்ன வேறுபாடு?


Battle என்பது குறுகிய காலத்தில் நடந்துமுடியும் ஒரு சண்டை (military engagement). இதை தமிழில் ‘சமர்’ என அழைக்கிறோம்.

Battle இனது தாக்கம் Tactical Level ஐ சேர்ந்தது.

Military Campaign இனது தாக்கம் என்பது Strategic Level அல்லது Operational Level ஐ சேர்ந்தது. 


அது என்ன Strategic Level, Operational Level, Tactical Level ?


போர் (War) எனும் வன்முறை செயற்பாட்டின் இறுதி இலக்கு என்பது அரசியல் இலக்குதான்.

அதில் War என்பதன் போரியல் இலக்கை அடைய Levels Of War எனும் இராணுவ கோட்பாடு மிக மிக முக்கியமானதொன்று. உயிர்நாடி என சொல்லலாம்.

அந்த Levels Of War இன் மூன்று அடுக்குகள்தான் மேற்கூறிய Strategic Level, Operational Level, Tactical Level.

இதில் Strategic Level என்பது உச்ச அடுக்கு.

Tactical Level என்பது அடியில் உள்ள அடுக்கு.

இரண்டுக்கும் நடுவில் வருவது Operational Level.


War, Military Campaign, Battle இவைகளுக்குள் என்ன வேறுபாடு?


போர் என்பது ஒட்டுமொத்தத்தையும் குறிக்கும்.

உதாரணமாக ஈழப்போர் என்பது War. 1983-2009 வரையான 26 வருட காலத்தில் நடந்த அனைத்தும் இந்த War என்பதற்குள் அடங்கிவிடும்.

Battle என்பது ஒரு சமர்.

உதாரணமாக புலிகளின் முல்லைத்தீவு இராணுவ தளம் மீதான ஓயாத அலைகள் 1 தாக்குதல் ஒரு சமர். அதனால்தான் ‘அழித்தொழிப்பு சமர்’ என அழைக்கிறோம். 

இதைப்போல புலிகள் பல அழித்தொழிப்பு சமர்களை செய்து இருக்கிறார்கள். பூநகரி இராணுவ தளம் மீதான ‘தவளைப்பாய்ச்சல்’ சமர்,  தீச்சுவாலை எதிர் சமர், புலிப்பாய்ச்சல் சமர், யாழ்கோட்டை இராணுவ தளம் மீதான சமர், மாங்குளம் முகாம் மீதான சமர் என நீண்ட பட்டியல் இருக்கிறது. 

ஆனால் சமரின் தாக்கம் என்பது tactical level இற்கு உட்பட்டது.

ஒரு சமரின் வெற்றி என்பது போரின் வெற்றி அல்ல. ஒரு சமரின் வெற்றி என்பது போரின் வெற்றியினை உறுதி செய்யாது.

ஒரு போர் (War) பல Campaign களையும் பல சமர்களையும் (Battle) உள்ளடக்கியது.

ஈழப்போரில் பல Campaign களும் சுமார் நூறு Battle களும் நடந்திருக்கின்றன.

ஒரு Campaign இற்குள்ளும் பல சமர்கள் இருக்கும்.

இங்குதான் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3 கட்டம் 4) வருகிறது. இதற்குள்ளேயே பல Battles நடந்திருக்கின்றன. 

இலக்கு, இலக்கு ஏற்படுத்திய தாக்கம் என்பவற்றின் அடிப்படையில் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3 கட்டம் 4) Military Campaign என்ற வகைக்குள்தான் வரும்.


இரண்டாவது விடயம்


எல்லோரும் ஆனையிறவு எனும் பெருந்தளத்தை மட்டும் வீழ்த்தியதாக பேசி கொள்கிறோம்.

உண்மையில் புலிகள் பல பெருந்தளங்களை வீழ்த்திவிட்டுத்தான், இறுதியாக 2001 ஏப்ரல் 22 இல் ஆனையிறவு பெருந்தளத்தை வீழ்த்தினார்கள்.


ஏன் பெருந்தளங்கள் என்ற சொல்லாடலை பயன்படுத்துகிறேன்?

ஏனெனில் இராணுவத்தின் இராணுவ அமைவிடங்கள் அதனது செயற்பாடு, அதனது ஆட்பல எண்ணிக்கை, ஆயுதங்களின் வகைகள், உட்கட்டமைப்பு என பல காரணிகளை வைத்து வகைப்படுத்தப்படுகின்றன.


• இராணுவ பெருந்தளம் (military base)

• இராணுவ முகாம்கள் (camp)

• மினி முகாம்கள் (mini camp)


இலங்கை இராணுவத்தின் பெருந்தளங்கள் ஒரு நிலப்பரப்பிலே தனியாக இருப்பதில்லை. 

அந்த இலங்கை இராணுவத்தின் பெருந்தளங்களின் குறிப்பிட்ட சுற்றளவிற்குள்ளே இலங்கை இராணுவத்தின் முகாம்கள் வரும். 

இந்த இராணுவ முகாம்களின் குறிப்பிட்ட சுற்றளவிற்குள்ளே மினி முகாம்கள் வரும்.

அத்துடன் இந்த ஒவ்வொரு பெருந்தளங்களும், முகாம்களும் தமக்கென தனிதனியான முன்னரங்கு காவலரண்களை கொண்டிருக்கும் (Front Defence Line- FDL).

பெருந்தளங்கள் கிட்டத்தட்ட ஒரு பிரிகேட் (Brigade) படையணியை கொண்டிருக்கும்.

ஒரு Brigade என்பது 4000- 5000 படையணியினர். 

இராணுவ முகாம்கள் கிட்டத்தட்ட ஒரு பட்டாலியன் (Battalion) படையணியை கொண்டிருக்கும். ஒரு Battalion என்பது 600-1000 படையணியினர்.


ஓயாத அலைகள் 3 (கட்டம் 3 கட்டம் 4) campaign இல் புலிகள் வீழ்த்திய பெருந்தளங்கள் (military base) எவையெவை?

• பெரும் எண்ணிக்கையான ஆட்டிலறிகளை கொண்ட தளமான ‘பளை’ இராணுவ பெருந்தளம்.

• அமெரிக்க சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ அணியான 53வது டிவிசனின் தாளையடி இராணுவ பெருந்தளம்.

இந்த தளம் இலங்கை இராணுவத்திலேயே மிகச் சிறந்த படையணியாக கருதப்பட்ட 53 Division இன் கட்டுப்பாட்டில் இருந்தது.

(இந்த தாளையடி இராணுவ பெருந்தளம் அடிப்படையில் தாளையடி-மருதங்கேணி-செம்பியன்பற்று முகாம்கள் ஒருங்கிணைந்த army complex ஆகும். இந்த தளத்தின் பாதுகாப்பு நிலைகளின் நீளம் சுமார் 14 கிமீ ஆகும்) 

• இராணுவ,கடற்படை தளமான வெற்றிலைக்கேணி பெருந்தளம். (Army cum Navy Base) 

(யாழ்குடாவின் வட கிழக்கு கடற்பிராந்தியத்தை கண்காணித்த வந்த இந்த வெற்றிலைக்கேணி இராணுவ,கடற்படை பெருந்தளம் அமைந்திருந்த பகுதி இராணுவ ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்)

பரந்தன் பெருந்தளம் ( இது 54 டிவிசனின் ஒரு பிரிகேட் படைப்பிரிவை கொண்டிருந்தது)

உமையாள்புரம் பெருந்தளம் (இதுவும் 54 டிவிசனின் இன்னொரு பிரிகேட் படைப்பிரிவை கொண்டிருந்தது)

இயக்கச்சி இராணுவ பெருந்தளம்


ஓயாத அலைகள் 3 (கட்டம் 3 கட்டம் 4) military campaign இல் புலிகள் வீழ்த்திய இராணுவ முகாம்கள் (military camp) எவையெவை?


• கட்டைக்காடு இராணுவ முகாம்


• புல்லாவெளி இராணுவ முகாம்


• எறிகணை தளமும் 2வது கெமுனு பட்டாலியனின் தலைமையகமுமாக இயங்கிய முள்ளியான் முகாம்


• அருகுவெளி இராணுவ முகாம்


• கேரதீவு கடற்படை முகாம்


• கோரக்கன்கட்டு குளம் இராணுவ முகாம்


• செம்பியன்பற்று இராணுவ முகாம்


• மருதங்கேணி இராணுவ முகாம்


• மாமுனை இராணுவ முகாம்


• தம்புதோட்டம் இராணுவ முகாம்


• தாமரைகுளம் இராணுவ முகாம்


• சோரன்பற்று இராணுவ முகாம்


• மாசார் இராணுவ முகாம்


இவை தவிர விடுதலை புலிகளால் 100 இற்கும் மேற்பட்ட மினி முகாம்களும் (mini camp) அழிக்கப்பட்டன.


• ஆக பளை பெருந்தளம், தாளையடி பெருந்தளம், வெற்றிலைக்கேணி பெருந்தளம், பரந்தன் பெருந்தளம், உமையாள்புரம் பெருந்தளம், இயக்கச்சி பெருந்தளம் மற்றும் 10 இற்கும் மேற்பட்ட இராணுவ முகாம்கள் மற்றும் 100 இற்கும் மேற்பட்ட மினி முகாம்கள் என எல்லாவற்றையும் அழித்துவிட்டுத்தான் ஆனையிறவு பெருந்தளம் கைப்பற்றப்பட்டது.

இப்பொழுது விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3 கட்டம் 4)  Military Campaign ஐயும் வியட்நாமில் Vietminh நடத்திய தீன் பீன் பூ ( Battle Of Dien Bien phu ) சமரையும் ஒப்பிட்டு பாருங்கள்.

ஏன் விடுதலை புலிகளின் இந்த ஓயாத அலைகள் 3 (கட்டம் 3 கட்டம் 4) போரியல் சாதனை என்பது உங்களுக்கு புரியும்.

இவை இரண்டையும் ஒப்பிடு செய்த போரியல் ஆய்வு கட்டுரையின் இணைப்பு கீழே.

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VIETMINH நடத்திய தீன் பீன் பூ ( BATTLE OF DIEN BIEN PHU) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)


ஓயாத அலைகள் 3 (கட்டம் 3 கட்டம் 4) எனும் Campaign இற்குள் பல சமர்கள் (Battles) நடந்தன.

புலிகளும் இந்த பெருந்தளங்களை கைப்பற்ற Battles நடத்தினார்கள். இராணுவமும் அதை தடுத்து நிறுத்த பல Operations களை நடத்தினார்கள்.


விடுதலை புலிகள் எப்படி படிப்படியாக மேலே குறிப்பிட்ட பெருந்தளங்களையும், இராணுவ முகாம்களையும், மினி முகாம்களையும் அழித்தார்கள் என்பதை காலவரிசைப்படி (chronological) ஏற்கனவே ஆவணப்படுத்தியிருக்கிறேன். அதை கீழே தந்திருக்கிறேன்.

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-1)


இவ்வளவு இருக்க, தமிழினம் சர்வசாதாரணமாக 40000 இலங்கை இராணுவத்தினரை 1200 புலிகள் வீழ்த்தி ஆனையிறவு இராணுவ தளத்தை கைப்பற்றியதாக ஒற்றை வரியில் சொல்லிவிட்டு போய்விடுகிறது. 


க.ஜெயகாந்த்





விடுதலை புலிகள் அழித்த பெருந்தளங்கள், இராணுவ முகாம்கள், மினி முகாம்கள் காலவரிசைப்படி (chronological) 


12/12/1999- விடுதலை புலிகள் கட்டைக்காடு இராணுவ முகாமை தாக்கி அந்த பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

(படம் 1 :இலக்கம் 1)


•அதன் பின்னர் யாழ் குடாநாட்டின் வட கிழக்கு திசையில் இருந்த வெற்றிலைக்கேணி இராணுவ, கடற்படை பெருந்தளம் (Army cum Navy Base) விடுதலை புலிகளால் தாக்கியழித்து கைப்பற்றப்பட்டது.

(படம் 1 : இலக்கம் 2)


யாழ்குடாவின் வட கிழக்கு கடற்பிராந்தியத்தை கண்காணித்த வந்த இந்த வெற்றிலைக்கேணி இராணுவ,கடற்படை பெருந்தளம் அமைந்திருந்த பகுதி இராணுவ ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.


•வெற்றிலைக்கேணிக்கு மேற்கு பக்கம் உள்ள புல்லாவெளி இராணுவ முகாமும் தாக்கியழிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

(படம் 1 : இலக்கம் 3)


எறிகணை தளமும் 2வது கெமுனு பட்டாலியனின் தலைமையகமுமாக இயங்கிய முள்ளியான் முகாமை மாலதி படையணி கைப்பற்றியது.


மாலதி படையணியும் யாழ் படையணியும் முள்ளியான்,மண்டலாயிலிருந்து மேலும் முன்னேறின.


இந்த தாக்குதல்களில் சுமார் 150 இராணுத்தினர் கொல்லப்பட்டனர். விடுதலை புலிகள் தமது தரப்பில் 38 போராளிகள் இறந்ததாக அறிவித்தனர்.


• #இன்னுமொரு சமர் முனை திறக்கப்பட்டது.


12/12/1999 அன்று காலை பத்து மணியளவில் கிழக்கு அரியாலையிலும் அருகுவெளியிலும் இரு வேறு பிரிவுகளாக தரையிறக்கம் செய்யப்பட்டது.


சாவகச்சேரிக்கு தெற்கே உள்ள கேரதீவு,அருகுவெளி நோக்கிய சமர் முனையில் மாலதி படையணி, ஜெயந்தன் படையணி,இம்ரான் பாண்டியன் படையணிகளை சேர்ந்த ஒரு படைத்தொகுதி களமிறங்கியது.


அருகுவெளி முகாம் கைப்பற்றப்பட்டது. அதேபோல் கேரதீவு கடற்படை முகாம் தாக்கியழிக்கப்பட்டு பெருமளவு ஆயுதங்களும், ராடாரும் புலிகளால் கைப்பற்றப்பட்டது. அன்றைய தினம் மாலைக்குள் அந்த பகுதிகளை தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

(படம் 1 : இலக்கம் 5)


13/12/1999 - வெற்றிலைக்கேணி பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஆழியவளை பிரதேசத்தில் இருந்த மினிமுகாம் மீது தாக்குதல் நடத்தி கைப்பற்றப்பட்டது.


•16/12/1999 - சுண்டிகுளத்திற்கும் மருதங்கேணி பிரதேசத்திற்கும் இடைப்பட்ட கடற்கரை பிரதேசங்கள் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதனூடாக புலிகளால் தமது கனரக ஆயுதங்களை யாழ்குடாவிற்கு நகர்த்த முடிந்தது.


அடுத்த நகர்வாக விடுதலை புலிகளின் ஒரு படையணி தனங்கிளப்பு பிரதேசத்திற்குள் ஊடுருவினர்.


தனங்கிளப்பு பிரதேசத்திலிருந்து யாழ் நகர் சில கிமீ தொலைவிலேயே இருக்கிறது.


• #பரந்தன் தளம்


ஆனையிறவு எனும் கூட்டுப்படை தளத்தின் தெற்கு பகுதியின் பாதுகாப்பிற்கான மிக முக்கிய தளம் பரந்தன் தளமாகும் (Paranthan army camp, situated strategically on the southern sector of Elephant Pass base complex).


இலங்கை இராணுவத்தின் 54 டிவிசனின் 6ம் பிரிகேட்டை கொண்டுள்ள பரந்தன் தளம் மீதும், 54 டிவிசனின் 5ம் பிரிகேட்டை கொண்டுள்ள உமையாள்புரம் தளம் மீதும் தாக்குதல் நடத்த தளபதி தீபன் நியமிக்கப்படுகிறார்.


16/12/1999 - விடுதலை புலிகள் பரந்தன் தளம் மீதான தாக்குதலை தொடுக்கிறார்கள். இந்த தாக்குதலில் முன்னணி படைகளாக சார்ள்ஸ் அன்டனி படைப்பிரிவும்,மாலதி படைப்பிரிவும் பங்கு கொண்டன.


19/12/1999 - இருமுனை நகர்வினூடாக 54-6 பிரிகேட் படைப்பிரிவை கொண்டிருந்த பரந்தன் தளம் கைப்பற்றப்பட்டது. (படம் 1 : இலக்கம் 4)


இதற்கிடையில் இலங்கை விமானப்படையின்

MI 24 Helicopter புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.


21/12/1999 - பரந்தன் chemical factory முகாமும் கோரக்கன்கட்டு குளம் இராணுவ முகாமும் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

(படம் 1 : இலக்கம் 6)


மருதங்கேணி, தாளையடி இராணுவ முகாம்களை அண்டிய பகுதிகளில் வாழும் பொது மக்கள் 25/12/99 திகதிக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு விடுதலை புலிகளால் மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது.


• #உமையாள்புரம் இராணுவ தளம் வீழ்ந்தது


27/12/1999 - ஆனையிறவு படை தளத்திற்கு தெற்காக 5கிமீ தொலைவில் உள்ள 54-5 பிரிகேட்டை கொண்டிருந்த உமையாள்புரம் தளம் புலிகளால் தாக்கியழித்து கைப்பற்றப்பட்டது.


பரந்தன் படைத்தளத்தை இழந்த பின்பு பின்வாங்கிய இலங்கை இராணுவத்தின் 54-6 பிரிகேட் உமையாள்புரத்தில் இருந்த 54-5 பிரிகேட்டுடன் இணைந்து பலமான பாதுகாப்பு அரணை அமைத்திருந்தது.


உமையாள்புரத்தை சுற்றியிருந்த 40 மினி (mini camps) முகாம்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டது.


இந்த உமையாள்புரம் இராணுவ பெருந்தளத்தை கைப்பற்ற நடந்த இரண்டு நாள் சமரில், தமது தரப்பில் 39 போராளிகள் வீரசாவடைந்ததாக விடுதலை புலிகள் அறிவித்தனர்.


30/12/1999 - இலங்கை விமானப்படையின் கிபிர் போர்விமானங்களும் , உலங்கு வானுர்திகளும் பூநகரி, கேரதீவு பிரதேசங்களில் இருந்த விடுதலை புலிகளின் நிலைகள் மீது கடும் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தின.


02/02/2000 - தனங்கிளப்பு, கேரதீவு பிரதேசங்களில் விடுதலை புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் நிகழ்ந்தன.


18/2/2000 - இலங்கை விமானப்படையின் Bell Helicopter விடுதலை புலிகளினால் தென்மராட்சி பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.


12/3/2000 - விடுதலை புலிகள் வசமிருந்த உடுதுறை பிரதேசத்தை மீட்க இலங்கை இராணுவத்தின் கமாண்டோ படையணி நடத்திய ஆபரேசன் தோல்வியில் முடிந்தது.


• #புகழ்பெற்ற குடாரப்பு தரையிறக்கம்


26/3/2000 - விடுதலை புலிகளின் வரலாற்று சிறப்புமிக்க கடல்வழி தரையிறக்கமான (sea borne invasion ) குடாரப்பு தரையிறக்கம் நடந்தநாள். ( படம் 1 : நீல நிற அம்புகுறி)


தரையிறக்கத்திற்கு பின்பு, இரவு சுமார் 9 மணியளவில் புலிகள் தமது பெரும் தாக்குதலை ஆரம்பித்தனர். ஒரே நேரத்தில் தாளையடி, செம்பியன்பற்று, மருதங்கேணி இல் இருந்த இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. (படம் 1 : இலக்கம் 7)


• #ஆட்டிலறி தளமாக இருந்த பளை இராணுவ பெருந்தளம் மீதான கமாண்டோ தாக்குதல்


மறுபக்கம் A9 கண்டி வீதியில் அமைந்திருந்த பளை இராணுவ பெருந்தளம் மீது விடுதலை புலிகளின் கமாண்டோ அணி அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் 11 பீரங்கிகளையும் அதனது ஆயுத களஞ்சியத்தையும் நிர்மூலம் செய்தனர்.

(படம் 1 : இலக்கம்8)


special commando units of the LTTE stormed the military garrison at #Pallai and destroyed the main artillery base and ammunition dump. Eleven heavy artillery pieces were destroyed by explosives.


பளையிலுள்ள பீரங்கிகள் நிர்மூலம் செய்யப்பட்டதால், அதனுடைய சூட்டாற்றல் ( Fire Power) பெருமளவு குறைக்கப்பட்டது.


அத்துடன் இயக்கச்சி இராணுவ பெருந்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இயக்கச்சி பெருந்தளம் மீது விடுதலை புலிகள் கடுமையான பீரங்கி, மோட்டார் தாக்குதலை நடத்தினர்.


• #பிரதான வழங்கல் பாதை துண்டிப்பு


ஆனையிறவு பெருந்தளம், இயக்கச்சி இராணுவ பெருந்தளத்திற்கான பிரதான வழங்கல் பாதையாக (Main Supply Route - MSR) இருந்த A9 கண்டி வீதியை விடுதலை புலிகள் துண்டித்தார்கள்.


இதனால் இலங்கை இராணுவம் கரையோர பகுதியில் இருந்த மாற்று பாதையான( Alternative Supply Route) கறுக்காய் தீவு, புலோப்பளை ஊடான ஒடுங்கிய பாதையை பயன்படுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.அடிப்படையில் இந்த மாற்று பாதை கனரக ஆயுதங்களையோ , வாகனங்களையோ நகர்த்துவதற்கு ஏற்ற பாதை அல்ல. (படம் 2)


The breach in the MSR between Jaffna and the Iyakkachchi-Elephant Pass sector has caused logistical problems for the army in sending in reinforcements and evacuating the wounded from the battle zones in the southern part of the Thenmaradchi division, military sources in the north said.


28/03/2000 - விடுதலை புலிகளினால் மாமுனை இராணுவ முகாம் கைப்பற்றப்பட்டது.


• #தாளையடி military complex வீழ்ந்தது


•29/03/2000 - மூன்று நாள் கடும் சமரிற்கு பின்பு தாளையடி இராணுவ பெருந்தளம் விடுதலை புலிகளால் தாக்கியழிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.


இந்த தாளையடி இராணுவ பெருந்தளம் அடிப்படையில்

தாளையடி-மருதங்கேணி-செம்பியன்பற்று முகாம்கள் ஒருங்கிணைந்த army complex ஆகும். இந்த தளத்தின் பாதுகாப்பு நிலைகளின் நீளம் சுமார் 14 கிமீ ஆகும்.

the largest and the well-fortified military base in the eastern coastal belt of vadamarachi.


இந்த தளம் இலங்கை இராணுவத்திலேயே மிகச் சிறந்த படையணியாக கருதப்பட்ட 53 Division இன் கட்டுப்பாட்டில் இருந்தது.


The 53 Division is the Sri Lankan army's best fighting arm, comprising Special Forces, an air mobile brigade, a mechanised infantry unit etc., The Division receives US special forces training and advice.


இதற்கிடையில் விடுதலை புலிகளின் விசேட தாக்குதல் அணிகள் தமது அதிரடி தாக்குதல் மூலம் தம்புதோட்டம் இராணுவ முகாமில் 11 பீரங்கிகளையும் (long range artillery guns) , தாமரைகுளம் இராணுவ முகாமில் 4 பீரங்கிகளையும் அழித்தொழித்தனர்.

(படம் 1 : இலக்கம் 9)


• #சமர்முனையின் மறுபகுதியில் நடந்தவை


இதற்கிடையே டிசம்பர்,1999 இல் ஊடுருவிய விடுதலை புலிகளின் ஒரு படையணி சாவகச்சேரியின் தென்பகுதி,தனங்கிளப்பு சந்தி, கேரதீவு அண்டிய பகுதிகள் என்பவற்றை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார்கள்.


இந்த மூன்று மாதங்களில், இலங்கை இராணுவம் இந்த பகுதிகளில் கடுமையான விமான குண்டுவீச்சு தாக்குதல்கள், பீரங்கி தாக்குதல்கள், இராணுவத்தின் தாக்குதல்கள் என பலவாறாக முயன்றும் விடுதலை புலிகளை இந்த பிரதேசங்களிலிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை.


இந்த பகுதிகளை விடுதலை புலிகள் தொடர்ந்து தக்கவைத்திருந்தது போரியல் வியூகத்தில் பெரும் முக்கியத்துவமுடைய நகர்வு. இது எந்தவகையில் பெரும் முக்கியத்துவமுடையது என்பதை போரியல் அலசல் பந்தியில் விவரிக்கிறேன்.


• #பிரதான வழங்கல் பாதையை மீட்க போராடிய இலங்கை இராணுவம்


02/04/2000 - ஆனையிறவு பெருந்தளம், இயக்கச்சி பெருந்தளத்திற்கான பிரதான வழங்கல் பாதையான A9 பாதையின் பளைக்கும் முகமாலைக்கும் இடையேயான 4km பகுதியை புலிகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்தது.


‘அந்த சிறிய பகுதியை’ மீள கைப்பற்றும் நோக்கில், இலங்கை இராணுவம் ‘வலிசக்கர’ ( Operation Wali Sakara) எனும் இராணுவ ஆபரேசனை நடத்தியது. இலங்கை இராணுவம் அதனது armored unit டினை முன்னிறுத்தி, இரு முனைகளில் நகர்ந்து இந்த தாக்குதலை நடத்தியது.


இதற்கு எதிரான முறியடிப்பு தாக்குதலை விடுதலை புலிகள் முகமாலை பகுதியில் நடத்தினார்கள். இந்த கடும் சமரில் இலங்கை இராணுவத்தின் 2 யுத்ததாங்கிகள் (Main Battle Tanks - MBT) புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டது. மேலும் 5 யுத்ததாங்கிகள் (MBT) கடுமையான சேதத்திற்கு உள்ளாகின.


அத்துடன் 2 South African ‘Buffel’ கவச வாகனங்களை விடுதலை புலிகள் கைப்பற்றினர். மேலும் புலிகளின் இந்த முறியடிப்பு தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். முன்னூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்தனர்.


மார்ச் 27 திகதியிற்கு பிறகான கடந்த ஐந்து நாட்களில், இந்த பகுதியினை கைப்பற்ற இலங்கை இராணுவம் நடத்திய மூன்றாவது பெரும் தாக்குதலே இந்த ‘வலி சக்கர’ எனும் ஆபரேசன்.


04/4/2000 - இலங்கை இராணுவம் மீண்டும் ஒரு புதிய இராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இந்த ஆபரேசனின் பெயர் ‘வெலிகதர’ ( Operation ‘Welikathara).


முகமாலையை நோக்கி நகர்ந்த இலங்கை இராணுவத்தின் இந்த ஆபரேசனை கடுமையான எதிர்தாக்குதலின் ( counter attack) மூலம் விடுதலை புலிகள் தடுத்து நிறுத்தினர். இந்த எதிர் தாக்குதலின் பின்னர், புலிகள் தமது பகுதியில் மட்டும் இலங்கை இராணுவத்தின் 60 சடலங்களை கண்டெடுத்தனர்.


10/4/2000 - இலங்கை இராணுவம் மீண்டும் புலிகள் வசம் இருந்த ‘அந்த சிறிய பகுதியை’ மீட்க , பலமுனைகளிலான நகர்வுடன் ஒரு புதிய தாக்குதலை தொடுத்தது.


இதற்கு எதிரான விடுதலை புலிகளின் எதிர்தாக்குதலில் 4 யுத்த தாங்கிகள் (MBT) முற்றாக அழிக்கப்பட்டன. மேலும் 5 யுத்த தாங்கிகள் (MBT) சேதமாக்கப்பட்டன.


• #விடுதலை புலிகளின் Final Push


18/04/2000 விடுதலை புலிகளின் ஓயாத அலைகள்-3 இன் இலக்கை அடைவதற்கான இறுதி பெரும் தாக்குதலை தொடங்கினார்கள். இந்த தாக்குதலில் இயக்கச்சி இராணுவ பெருந்தளத்தை சுற்றியிருந்த இராணுவ முகாம்களையெல்லாம் முற்றாக தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். குறிப்பாக சோரன்பற்று , மாசார் இராணுவ முகாம்கள் வீழ்ந்தன.

(படம் 1 : இலக்கம் 10)


Several well-entrenched military bases that formed the buffer zone of the Yakachi-elephant Pass area complex collapsed during the intense fighting


இந்த பெரும் தாக்குதலின் பின்னர், இயக்கச்சி இராணுவ தளமும் ஆனையிறவு தளமும் மட்டுமே எஞ்சியிருந்தன. இந்த இரு தளங்களுக்கான பிரதான வழங்கல் பாதை (MSR) ஏற்கனவே முற்றாக துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில் , இந்த தாக்குதலின் பின்னர் அவைகளுக்கான பாதுகாப்பு இராணுவ முகாம்களும் முற்றாக அழிக்கப்பட்டிருந்தன.


With the fall of several well fortified military bases in its proximity and the A9 highway cut-off at two strategic locations, the Yakachchi-elephant Pass base complex is facing a serious threat. Territorially isolated, supply lines cut-off and surrounded by powerful combat formations of the LTTE on all sides, a division of Sri Lankan troops occupying the complex is in serious crisis.


20/04/2000 - இயக்கச்சி இராணுவ தளம் மீதான பல்முனை தாக்குதலை விடுதலை புலிகள் தொடுத்தனர்.


22/04/2000 - இயக்கச்சி, ஆனையிறவு தளங்கள் வீழ்ந்தன.


இந்த தாக்குதலின் போது விடுதலை புலிகளின் கமாண்டோ அணிகளால் இயக்கச்சி முகாமில் இருந்த பீரங்கிகள்,யுத்த தாங்கிகள்,கவச வாகனங்கள், ஆயுத களஞ்சியங்கள் என்பன முற்றாக அழிக்கப்பட்டன.


இரண்டு நாட்கள் நடந்த புலிகளின் கடும் தாக்குதலிற்கு பிறகு இயக்கச்சி இராணுவ தளம் வீழ்ந்தது.


இயக்கச்சி இராணுவ தளம் வீழ்ந்த மறுகணமே ஆனையிறவு தளம் மீதான பல்முனை தாக்குதலை விடுதலைபுலிகள் நடத்தினர். அந்த தாக்குதலில் ஆனையிறவு தளமும் வீழ்ந்தது.


விடுதலை புலிகளின் இந்த இயக்கச்சி, ஆனையிறவு தளம் மீதான இறுதி தாக்குதலில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.


இந்த இரு தளங்களை கைப்பற்றியதினூடாக விடுதலை புலிகள் 152mm பீரங்கி, யுத்த தாங்கி, கவச வாகனங்கள் என்பவற்றை கைப்பற்றினர்.




Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]