தமிழினம் நினைவில் வைக்கவேண்டிய தீச்சுவாலை முறியடிப்பு சமர் (அக்னிகீல முறியடிப்பு சமர்)

போர் என்பது அரசியல் இலக்கினை அடைவதற்கான வன்முறை செயற்பாடு. 

பல சமர்களை (Battles) உள்ளடக்கியதுதான் போர் (War).

சமர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது போரியல்ரீதியானது.

ஆனால் சில சமர்கள் போர் களத்தையும் தாண்டி அரசியல் நகர்வுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுவதுண்டு.

அத்தகைய பெரும் தாக்கத்தை போர் களத்திலும், அரசியல் களத்திலும் ஏற்படுத்திய சமர் ஒன்றை புலிகளின் 26 வருட போரில் குறிப்பிட வேண்டுமெனில், அந்த சமர்தான் தீச்சுவாலை முறியடிப்பு சமர்.

இந்த தீச்சுவாலை முறியடிப்பு சமர் நடந்த காலகட்டம் 2001 ஏப்ரல் 24-27.


விசித்திரமான சமர்

இந்த சமரும் விசித்திரமானது. புதுமையானது. இலங்கை இராணுவம் அதனது சகல வளங்களையும் ஒரு புள்ளியில் திரட்டி ஒரு பெரும் இராணுவ நடவடிக்கையை நடத்தப்போவது புலிகளுக்கு தெரிந்தும், அமைதி காத்து அதை நடத்த அனுமதித்தார்கள்.

என்ன குழப்புகிறேனா?

இதனை முழுமையாக புரிந்துகொள்ள நாம் பின்னோக்கி செல்லவேண்டும். 

இந்த சமரில் சகலதும் உண்டு. உலக ஒழுங்கின் ராஜதந்திர நகர்வு, அதற்கான புலிகளின் எதிர்நகர்வு, போரியல் நகர்வு என சகலதும் இதில் உண்டு. 


அன்றைய போர்கள நிலவரம்

2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் ஆனையிறவு தளம் ( Elephant Pass Military Complex - EPMC) புலிகளின் கையில் வீழ்ந்தது. வீழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு கூட அமெரிக்க இராணுவ வல்லுனர்கள் வந்து பார்வையிட்டு ‘வீழ்த்தப்படமுடியாத (Impregnable) இராணுவ தளம் இது ‘ என உறுதிப்படுத்தியிருந்தார்கள்.

அதன் பின்னர் உலக போரியல் வரலாற்றிலேயே ஒரு non state military force இனால் செய்யப்பட்ட பெரும் தரையிறக்கமான குடாரப்பு தரையிறக்கத்தினை விடுதலை புலிகள் நிகழ்த்தி , ‘வீழ்த்தமுடியாது’ என கூறப்பட்ட ஆனையிறவு தளத்தை கைப்பற்றியது எல்லாம் வரலாறு.




ஆனையிறவு தளத்தின் போரியல்ரீதியான முக்கியத்துவம்

யாழ்குடா நாட்டை இலங்கை இராணுவம் அதனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு யாழ்குடாவின் கழுத்துப்பகுதியான ஆனையிறவு தளம் இன்றியமையாதது. 

அது ஒரு strategically important military base. யாழ்குடா மீதான புலிகளின் முற்றுகை அகற்றப்படவேண்டுமாயின் ஆனையிறவு தளத்தை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற போரியல் நிர்ப்பந்தம் இலங்கை இராணுவத்திற்கு.


ஏன் இலங்கை இராணுவம் பெரும் தாக்குதல் நடத்தப்போவது தெரிந்தும், அமைதி காத்து அதை நடத்த அனுமதித்தார்கள் புலிகள்?

காரணம் 2000 ஆண்டு டிசம்பர் 24ம் திகதியிலிருந்து  ‘சமாதானத்திற்கான சூழலை உருவாக்கும்’ முயற்சியாக ஒருதலைப்பட்சமான ஒரு மாத போர்நிறுத்தத்தை    (month-long unilateral ceasefire)  புலிகள் அறிவித்தனர்.அவ்வாறு ஒவ்வொரு மாதமும் நீட்டிப்பு செய்தனர். இது ஏப்ரல் 24 ம் திகதிவரை நீடித்தது. சரியாக நான்கு மாதங்கள்.


புலிகளின் இந்த ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்திற்கான பின்னணி

சமாதானத்திற்கான பேச்சு வார்த்தை முன்னெடுப்புகளை புலிகளுடன் அப்போதுதான் நோர்வே ஆரம்பித்திருந்தது.

நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக , புலிகளை போர்நிறுத்ததை அறிவிக்க சொல்லும் திட்டம் நோர்வேயினூடாக வந்திருக்கும் சாத்தியங்கள் அதிகம். 

அதேநேரம் புலிகளும்  அவர்கள் போரியல் ரீதியில் வலுவான நிலையில் இருக்கும்போது , அதை பேரம் பேசும் சக்தியாக பயன்படுத்தி ,உலக ஒழுங்கின் அங்கீகாரத்துடன் அரசியல் தீர்வாக மாற்றும் நகர்வாக,  இந்த போர்நிறுத்தத்தை பயன்படுத்த நினைத்தார்கள். 

உண்மையிலேயே இந்த போர்நிறுத்தம் போரியல்ரீதியில் புலிகளுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். அது எப்படி என்பதை பின்னர் விளக்குகிறேன். 

ஆனால் அரசியல் தீர்வுக்கான உலக ஒழுங்கின் அங்கீகாரத்திற்காக புலிகள் இந்த நகர்வை எடுக்கவேண்டியிருந்தது.

மேலே நான் விவரித்தவைதான் ‘ தீச்சுவாலை முறியடிப்பு சமருக்கு ‘ முன்பிருந்த கள நிலவரம்.


சரியாக 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி இலங்கை இராணுவம் ஆனையிறவு தளத்தை கைப்பற்றும் முயற்சியாக புலிகளின் முன்னரங்கு பகுதிகளின் மீது ‘அக்னி கீல’ ( தீச்சுவாலை) எனும் இராணுவ நடவடிக்கையை (operation) ஆரம்பித்தது. 

‘அக்னி கீல’ என்பது சிங்கள மொழியில் இலங்கை இராணுவம் இந்த இராணுவ நடவடிக்கைக்கு சூட்டிய பெயராகும். அதன் தமிழ் மொழிபெயர்ப்பு ‘தீச்சுவாலை’.


இனி இந்த இராணுவ நடவடிக்கை தொடர்பான போரியல் ரீதியிலான அலசல். 

இந்த சமர் நடந்த நிலப்பகுதி குறுகலான முன்னர் குறிப்பிட்ட கழுத்துபகுதியில். 

இந்த இராணுவ நடவடிக்கையில் இலங்கை தனது போர் திறன் அதிகமுள்ள  52,53,55 படையணிகளை ( division) , நான்கு மாத போர்நிறுத்தத்தில் கிடைத்த  அவகாசத்தில் சிறப்பு பயிற்சி, தயார்படுத்தல்களுடன் களமிறக்கியிருந்தது. அத்துடன் அதனது சகல இராணுவ வளங்களையும் ஒன்று குவித்திருந்தது.


இந்த புலிகளின் போர்நிறுத்தம் போரியல்ரீதியாக அவர்களுக்கு ஏன் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இனி விளக்குகிறேன். 

இது இலங்கை இராணுவத்திற்கு அதனது இராணுவ வளங்களை குவிக்கும் வாய்ப்பினை தந்தது( heavy concentration).

 புதிய ஆயுத வளங்களை (lethal weapon systems ) கொள்வனவு செய்வதற்கான, படையணிகளை தயார்படுத்துவதற்கான கால அவகாசத்தை தந்தது.


புலிகள் போர்நிறுத்தம் செய்திருக்காவிடில் என்ன நடந்திருக்கும்? 

புலிகள், ஆனையிறவை கைப்பற்றுவதற்கான இலங்கை இராணுவத்தின் வள குவிப்பை தடுக்க மற்றைய strategic position மீது offensive தாக்குதல்களை தொடுத்து கொண்டே இருந்திருப்பார்கள். 

இது இலங்கை இராணுவத்திற்கு அந்த strategic position  களில் படையணிகளை தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் (distracting force deployments). 

இது எதிரிகளை பரவலாக கால்பரப்ப வைத்து அவர்களது நிலையை thin ஆகவே வைத்திருக்க வேண்டிய  நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும்  போரியல் உத்தி. அதேபோல் இலங்கை இராணுவத்திற்கு கால அவகாசமும் கிடைத்திருக்க போவதில்லை.

இந்த நான்கு மாதங்களில் விடுதலை புலிகள் தரப்பிலிருந்து ஒரு தாக்குதலும் (counter-offensive operations) நடத்தப்படவில்லை.

அவர்கள் தற்காப்பு போர்முறையையே (self-restrained defensive tactics) கடைபிடித்தார்கள்.  

அதாவது தங்களது ஒருதலைப்பட்சமான போர்நிறுத்த ஒப்பந்தத்தால், தங்களது கையை தாங்களே கட்டிவைத்தது போல.

ஆனால் இராணுவம் வழமைபோல தாக்குதலை தொடுத்து கொண்டிருந்தது. இந்த நான்கு மாதங்களில் மட்டும் இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களில் விடுதலை புலிகளில் 160 பேர் உயிரிழந்தும் 400 பேர் காயமடைந்தும் இருந்தனர்.

இத்தகைய போரியல்ரீதியான சாதக நிலை இலங்கைக்கு இந்த நான்கு மாத போர்நிறுத்த காலத்தில் கிடைத்தது.  அதனால்தான் இந்த போர்நிறுத்த திட்டத்தை நோர்வேயினூடாக உலக ஒழுங்கு   ‘ நல்லெண்ணத்தை உருவாக்குதல் (creating a congenial atmosphere conducive for talks) ‘ என்ற போர்வையில் புலிகளிடம் கொண்டு சேர்ப்பித்து இருக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளன என்றேன்.


இனி சமரில் நடந்தவை 

ஏப்ரல் 24ம் திகதி , சுமார் 15000  இலங்கை இராணுவத்தினர் , இதுவரை நடத்திராத அளவிற்கான சூட்டு ஆதரவுடன் (supported by heavy artillery, multi-barrel rocket fire and aerial and naval bombardment) அந்த குறுகலான கழுத்துபகுதியினுள் முன்னேற தொடங்கினர். 

அதுவரை காலமும் நடந்த சமர்களிலேயேஅதிக அளவான சூட்டு ஆதரவு செறிவான சமர் தீச்சுவாலைசமர்தான்.


இந்த தீச்சுவாலை முறியடிப்பு சமரை முன்னின்று நடத்திய தளபதி தீபன் “படையினரால் 50000 ஆயிரத்திற்கும்மேற்பட்ட எறிகணைகள் (Shell), பீரங்கி குண்டுகள் (Artillery Shell), பல குழல் எறிகணைகள் (multi-barrel rockets), விமானக்குண்டுகள் என்பன 60 மணிநேர தீச்சுவாலை மற்றும் முறியடிப்பு சமர் காலத்தில்வீசப்பட்டன” என குறிப்பிடுகிறார்.


கிளாலி , எழுதுமட்டுவாள், நாகர்கோவில் முனைகளில் உள்ள புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கியே தாக்குதல் தொடங்கியது. ( படம் கீழே. இது எவ்வளவு குறுகலான பகுதி என்பதை காணலாம்)



மூன்று நாட்களுக்கு பின்னர் 400 ற்கும் மேற்பட்ட இலங்கை படையினர் உயிரிழந்து, 2000 ற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்து தங்களது தீச்சுவாலை நடவடிக்கையை கைவிட்டு பின்வாங்கினர்.

இந்த சமரிற்குள் என்ன நடந்தது என்பதை முறியடிப்பு சமரை முன்னின்று நடத்திய தளபதி தீபன் சொல்வதையே கீழே தந்திருக்கிறேன்.





அத்துடன் தீச்சுவாலை முறியடிப்பு சமரின்போது புலிகள் கையாண்ட போரியல் தந்திரங்களை பற்றி தமிழ் இனத்தின் ஒரேயொரு போரியல் ஆய்வாளரான தராகி சிவராம் எழுதிய கட்டுரையையும் கீழே இணைத்துள்ளேன். 




மேலும் அன்றைய சிங்கள பத்திரிகைகளில் வந்த ஒரு கட்டுரையையும் இணைத்துள்ளேன்.



புலிகளின் இந்த தீச்சுவாலை முறியடிப்பு சமரின் ஊடாக உலக ஒழுங்கு புரிந்து கொண்டது என்ன?

புலிகளின் போர்நிறுத்தத்தால் இலங்கை இராணுவத்திற்கு போதுமான கால அவகாசம் கிடைத்தது.

1999 இறுதியில் இருந்து 2000 இறுதிவரை புலிகளின் நடத்திய ஓயாத அலைகள் 3 military campaign இல், இலங்கை இராணுவம் யாழ் குடாவிற்குள் சுற்றி வளைக்கப்பட்டு இருந்தார்கள். 

தொடர்ச்சியாக பின்வாங்கி பின்வாங்கி இந்திய கடற்படையின் உதவியுடன் இலங்கை இராணுவத்தை  யாழ்குடாவில் இருந்து காப்பாற்ற முனைந்ததெல்லாம் இந்த காலகட்டத்தில்தான் நடந்தது.

இலங்கை இராணுவத்தின் மிக சிறந்த படையணிகள் எல்லாம் தொடர்ந்து அடிவாங்கி அடிவாங்கி சிதைந்து போயிருந்தன.

இலங்கை இராணுவத்திலேயே மிக சிறந்த படையணியாக இருந்த, அமெரிக்க சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ அணியான 53 வது டிவிசன் இதில் சிதைந்து போவதையிட்டு போரியல் ஆய்வாளர்கள் நொந்த காலகட்டம் அது.

ஏனெனில் இந்த 53 டிவிசன், பெரும் இராணுவ நடவடிக்கையில் offensive ஆக செயற்படுவதற்காக உருவாக்கப்பட்ட படையணி. இந்த படையணி முனை அணியாக (spearhead force) செயற்படவேண்டிய படையணி.

(The 53 Division is an elite division of the Srilanka Army . Trained and formed in 1996 under the leadership of US military officers, the unit was used as a principal offensive division during the War)

ஆனால் விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 military campaign இல் அடிவாங்கி, தொடர்ந்து defensive operations இல் ஈடுபட்டு சிதைந்து கொண்டிருந்தது.

இத்தனைக்கும் மத்தியில் வந்ததுதான் புலிகளின் 4 மாத கால போர்நிறுத்தம். 2000 டிசம்பர் 24 - 2001  ஏப்ரல் 24 வரை கடைப்பிடிக்கப்பட்டது.


• இந்த 4 மாத காலம் பல வகைகளில் இலங்கை இராணுவத்திற்கு போரியல் அனுகூலங்களை தந்தது.

இலங்கை இராணுவத்திற்கு உளவியல்ரீதியில் சுவாசிப்பதற்கான கால அவகாசத்தை தந்தது. இது மிக முக்கியமான விடயம். 

சிதைந்து போன படையணிகளை மீள கட்டமைப்பதற்கான கால அவகாசத்தை தந்தது.

புதிய ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான கால அவகாசத்தை தந்தது.

சகல வளங்களையும் ஒரு புள்ளியில் குவிப்பதற்கான வாய்ப்பினை தந்தது.

இத்தனை போரியல் அனுகூலங்களை இந்த 4 மாத காலத்தில் இலங்கை இராணுவம் பெற்று, சகல வளங்களையும் ஒன்று குவித்து தீச்சுவாலை சமரை தொடங்கிய 3 வது நாளிலேயே பலத்த சேதத்துடன் பின்வாங்க நேர்ந்தது ஒரு விடயத்தை தெளிவாக உலக ஒழுங்கிற்கு உணர்த்தியது.

இலங்கை இராணுவத்தை மீள கட்டமைக்க ‘பெரும் கால அவகாசம்’ தேவைப்படுகிறது என்பதை உலக ஒழுங்கிற்கு உணர்த்தியது.

இந்த கால அவகாசத்தை புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை என்ற போர்வையில்தான் உருவாக்கமுடியும் என்று உலக ஒழுங்கு முடிவு செய்தது.

இந்த சமாதான பேச்சுவார்த்தை ஒரு ‘பொறி’ என்பதை புலிகளின் தலைமை அறிந்திருந்தது. ஆனால் இந்த பொறிக்குள் பயணப்பட்டுத்தான் அரசியல் தீர்வை அடையவேண்டும் என்பது உலக ஒழுங்கின் இயங்குவிதி.

உலக ஒழுங்கு அங்கீகரிக்காத வரை ஒரு  De Facto State ஒரு இறையாண்மையுள்ள அரசாக (Sovereign State) மாறமுடியாது என்பது யதார்த்தம். அதனால் புலிகள் தெரிந்து கொண்டே இந்த ‘பொறிக்குள்’ பயணப்பட்டார்கள்.


இந்த தீச்சுவாலை முறியடிப்பு சமரை பற்றி, பின்னாட்களில் போரியல் ஆய்வாளர் தராகி சிவராம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அது கீழே.

“இருநாடுகளுக்கிடையிலான படைவலுச் சமநிலை என்பது அவற்றின் பீரங்கிகள், படையணிகள் போன்றவற்றின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் நாம் மதிப்பிட முடியாது. அவை எவ்வாறு எதிரியை நோக்கி ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன என்பதும் படைவலுச் சமநிலையை ஆராய்வதற்கு முக்கிய அடிப்படையாகிறது.

வடக்குத் தெற்காக முகமாலை, ஓமந்தை ஆகியவற்றுக்கிடையிலும் கிழக்கு மேற்காக முல்லைத்தீவு, மன்னார் ஆகியவற்றின் கரையோரங்களுக்கிடையிலும் அமைந்துள்ள பெரும் நிலப்பரப்பு புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

இதைச்சுற்றி இதன் வடபாகத்தில்இலங்கை இராணுவத்தின் 51, 52, 54 ஆகிய டிவிசன்களும் 55இன் ஒரு பகுதியும் இதன் தென்பாகத்தில் மன்னாரிலிருந்து மணலாறுவரை 21, 56 மற்றும் 22 டிவிசனின் ஒரு பகுதியும் நிலைகொண்டுள்ளன. 

இவற்றோடு இந்த டிவிசன்களுக்குரிய ஆதரவணிகளாக பீரங்கி, கவசவாகன மற்றும் வழங்கல் போன்ற பல பிரிவுகளும் உள்ளன. 

இவற்­றோடு 53 டிவிசனும் வடக்கை நோக்கியதாகவே உள்ளது.கிழக்கில் மணலாறுக்குத் தெற்காக திருமலையில் 22 டிவிசனின் ஒருபகுதியும் மட்டக்களப்பு வடக்கு அதன் பின்புலமான மின்னேரியா ஆகிய பகுதிகளில் 23 டிவிசனும் அண்மைக்காலத்தில் 55 டிவிசனின் ஒரு பகுதியும் நிலைகொண்டுள்ளன.


இதைப் பார்க்கும்போது உங்களுக்கு விளங்குவது என்ன?

அதாவது, வடக்கில் புலிகள் கட்டுப்படுத்தும் பகுதியை நோக்கி ஸ்ரீலங்கா அரசு தனது ஒன்பது களமிறக்கக் கூடிய டிவிசன்களில் ஏழு டிவிசன்களை ஒழுங்குபடுத்தியுள்ளது என்ற உண்மை அடிப்படைக் கணக்குத் தெரிந்த யாருக்கும் இலகுவாகப் புரியும். 

இதன் காரணம் என்ன? 

2001ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வடக்கில் தன்னிடமிருந்த படைவலுவின் சாரத்தைத் ஒன்று திரட்டி முகமாலையிலிருந்து பளையை நோக்கி ஸ்ரீலங்கா இராணுவம் தீச்சுவாலை நடவடிக்கையை மேற்கொண்டது. 

இதை முறியடித்த அதேவேளை வடக்கின் வேறு எந்த முனையிலிருந்தும் ஶ்ரீலங்கா படையினர் சமகாலத்தில் வேறு தாக்குதலை தொடுக்கமுடியாதபடி தடுக்குமளவிற்கு புலிகளின் படைபலம் காணப்பட்டது. வடக்கில் இருதரப்பிற்குமிடையில் படைவலுச் சமநிலை ஏற்பட்டுவிட்டதையே இது காட்டிற்று. 

அதாவது ஸ்ரீலங்காப் படைகளின் ஏழரை டிவிசன்களுக்கு (அந்நேரத்தில் 55 டிவிசன் முழுமையாக வடக்கிலேயே இருந்தது) சமனான படைவலு புலிகளிடம் காணப்பட்டதாலேயே மேற்படி நிலை தோன்றிற்று

இன்னொரு வகையில் சொல்லப்போனால் ஸ்ரீலங்காப் படைகளின் 83 சதவீத வலுவிற்குச் சமனான பலம் வன்னியில் புலிகளிடம் உள்ளது என்பதையே தீச்சுவாலை நடவடிக்கையின் தோல்வி மிகத் தெளிவாகக் காட்டிற்று. இதை இந்திய, பிரித்தானிய மற்றும் அமெரிக்க போரியல் அறிஞர்கள் மிகத் தெளிவாக உணர்ந்து கொண்டனர்.

இலங்கையில் இவ்வாறாகத் தோன்றிய படைவலுச் சமநிலை புலிகளின் பக்கம் சரியப்போகிறது என்பது கட்டுநாயக்க வான்படைத்தளத்திற்கு விழுந்த அடியோடு ஸ்ரீலங்கா அரசின் பின்னின்ற நாடுகளுக்கு மிகத் தெளிவாகப் புரிந்தது. 

இந்தப் படைவலுச் சமநிலையை புலிகளுக்குச் சார்பாக தளம்பவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஸ்ரீலங்கா அரசுக்கும் அதற்கு ஆதரவாகச் செயற்பட்டுவந்த நாடுகளுக்கும் 2001 ஏப்ரலுக்குப் பின்னர் ஏற்பட்டது. 

இலங்கையின் படைவலுச் சமநிலை புலிகளுக்குச் சார்பாக சரிந்தால் இத்தீவின் இராணுவ மேலாண்மை அவர்களின் கைக்குப் போய்விடும் எனவும் அப்படிப்போனால் இங்கு தாம் எண்ணியதை செய்யமுடியாதளவிற்கு ஸ்ரீலங்கா அரசுக்கு தற்றுணிவு அற்றுப்போகும் எனவும் அந்நாடுகள் எண்ணின.

அதுமட்டுமன்றி, இப்படைவலுச் சமநிலையில் புலிகளின் தரப்பு இராணுவ வளங்களில் சிலவற்றை தம்மால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படுத்த முடியாது என்பதையும் அந்நாடுகள் உணர்ந்தன. 

புலிகளிடம் எத்தனை பீரங்கிகள் உள்ளன, டிவிசன்கள் உள்ளன, சண்டைப் படகுகள் உள்ளன என்பதுபோன்ற விடயங்கள் சமச்சீரான படைவலு சம்பந்தப்பட்டவையாகும். இவற்றைக் கொண்டு சமநிலையைக் கணிப்படுவது இலகுவாகும். 

ஆனால், புலிகளிடம் காணப்படும் கரும்புலிப்படையும் கொழும்பைத் தாக்கும் வலுவும் சமச்சீரற்றவையாகவும் அதனால் சரியாக அளவிடப்படமுடியாதவையாகவும் காணப்படுகின்றது

உதாரணமாக ஒரு பீரங்கியால் எத்தனை முறை சுடமுடியும் என்பதை கணக்கிடலாம். ஆனால், ஒரு கரும்புலி அணியின் தாக்கம் எவ்வாறு அமையும் என்பதை அளவிடமுடியாது. 

ஆகவே, இலங்கையில் ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இன்று நிலவும் படைவலுச் சமநிலையில் கரும்புலிகளும் புலிகளின் கொழும்பைத் தாக்கும் வலுவும் அளவிடமுடியாத அம்சங்களாக இருப்பதும் வெளிநாடுகளுக்கு அச்சத்தைத் தோற்றுவிக்கின்றன. இதனாலேயே புலிகளை பேச்சுவார்த்தை என்ற கூட்டுக்குள் நிரந்தரமாக மடக்கிவைத்திருக்க அவை முயற்சி எடுக்கின்றன. ”

( “அந்தரத்தில் தொங்கும் இலங்கையின் படைவலுச் சமநிலை”  எனும் தலைப்பிலான கட்டுரையிலிருந்து - தராகி சிவராம் 29.08.2003 )


ஆக ஒரு சமர்தான்.

இந்த ஒரு சமரிற்கு பின்னே இருந்த போரியல் பரிமாணங்கள் போர் களத்திலும் அரசியல் களத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக இருந்திருக்கிறது.

இலங்கை இராணுவத்தை மீள கட்டமைப்பதற்கான கால அவகாசத்தை வழங்கவேண்டும் என்ற நிலைக்கு உலக ஒழுங்கை தள்ளியிருக்கிறது. 

அந்த கால அவகாசத்தை உருவாக்க, உலக ஒழுங்கு முன்வந்து ஏற்பாடு செய்ததுதான் சமாதான பேச்சுவார்த்தை.

ஆனால் தமிழினம் இந்த சமரை பத்தோடு பதினொன்றாக அணுகிவிட்டு போய்விடுகிறது.

இதன் பின்னே இருந்த போரியல் பரிமாணங்கள் பற்றிய புரிதல் இல்லாததால், தமிழினத்திற்கு தீச்சுவாலை முறியடிப்பு சமரின் முக்கியத்துவத்தை உணர முடியவில்லை.


க.ஜெயகாந்த்

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]