ஈவேராவை புலம்பெயர் தமிழனாக புரிந்துகொள்வதில் எனக்கு இருக்கும் நடைமுறை சிக்கல்கள்
தமிழ்நாட்டிற்கு வெளியே உலகின் பிற பாகங்களில் பிறந்த தமிழர்கள் ஈவேரா என்பவரை எப்படி உள்வாங்குவது என்பதில் இருக்கும் சிக்கல்கள் என்றுகூட இதை மேலும் விரிக்கலாம்.
என்னளவில் ஈவேரா என்பவரை எப்படி உள்வாங்குவது என்பதில் நான் எதிர்நோக்கும் நடைமுறை பிரச்சினைகளை பற்றி விவரிக்கிறேன்.
• இதற்குள் எனது தனிப்பட்ட உளவியலும் தொடர்புபட்டுள்ளது.
அடிப்படையில் எனது தளம் என்பது புவிசார் அரசியல், போரியல். இது உங்கள் அனைவருக்குமே தெரிந்ததொன்று.
நான் உலகின் பிரச்சினைகளை அடுக்குகளாக அணுகுகிறேன். ஒரு பிரமிட் வடிவிலான அடுக்கு.
• உச்ச அடுக்கில் உலக ஒழுங்கிற்குள் இறையாண்மை அரசுகளுக்கு இடையிலான போட்டி.
• கீழேயுள்ள அடுத்த அடுக்கிற்குள் ஒரு இறையாண்மை அரசின் நிலப்பரப்பிற்குள் நிலவும் தேசிய இனங்களுக்கு இடையேயான போட்டி வரும்.
• அதற்கு கீழேயிருக்கும் அடுத்த அடுக்கிற்குள் நுழைந்தால் ஒரு தேசிய இனத்திற்குள்ளேயே நிகழக்கூடிய வர்க்க போராட்டம், சாதிய போராட்டம், மதங்களுக்கு இடையேயான முரண்பாடு, ஆண் பெண் சமத்துவம், இத்யாதி,இத்யாதி என பல கிளைகளாக பிரிவடையும்.
இங்கு எனது தனிப்பட்ட உளவியல் விருப்பு காரணமாக, நான் இந்த பிரமிட்டின் உச்ச அடுக்கை ஆராய்வதில் நாட்டமுடையவன்.
உச்ச அடுக்கின் ஊடாக அணுகுகையில் இந்த உலகின் பல சிக்கலான விடயங்களை decode செய்வதற்கான தெளிவை எனக்கு தந்திருக்கிறது.
அதேநேரம் இலங்கையில் நான் பிறந்ததும் இன்னொரு காரணமாக இருக்கமுடியும். எனது வாழ்நாள் காலத்தில் தமிழ் தேசிய இனம் தனக்கென ஒரு இறையாண்மை அரசை உருவாக்க போராடியதும், அதற்காக ஆயுத போராட்டத்தை நடத்தியதும், இயல்பாகவே உலக ஒழுங்கு இதில் ஆற்றும் காத்திரமான பங்கும் இன்னும் அதிவேகமாக என்னை இந்த பிரமிட்டின் உச்ச அடுக்கினை நோக்கி நகர்த்தியிருக்கலாம்.
அதனால் இயல்பாகவே ஈவேரா எனும் மனிதரை தேடி அறியவேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டதில்லை.
ஏனெனில் அவர் முதல் அடுக்கிற்குள் வரமாட்டார்.
இரண்டாவது அடுக்கிற்குள்ளும் வரமாட்டார். அதை நான் பல கட்டுரைகளில் குறிப்பிட்டும் விட்டேன். ஏனெனில் ஈவேரா என்ற மனிதர் இறையாண்மை அரசு என்ற ஒன்றை கோரி நின்றவரே அல்ல. அவருக்கு தேசிய இனம், இறையாண்மை அரசு என்றால் என்னவென்றே தெரியாது என்பதை அவரது பேச்சுகளே தெளிவாக காட்டுகின்றன.
எந்த இனத்திற்குள் நின்றுகொண்டு எந்த இனத்திற்காக போராடுகிறேன் என கூறிக்கொண்டாரோ, அந்த இனத்தின் வரலாற்றினை, அதனது பண்பாட்டு, வாழ்வியல் கூறுகளினை ‘அடியோடு மறுதலித்துவிட்டு’, அந்த தேசிய இனத்திற்காக இறையாண்மை அரசை அவர் உருவாக்க போராடினார் என யாரும் வடை சுடமுடியாது.
அதனால் ஈவேரா எனும் மனிதர் அடுத்த அடுக்கிற்குள்தான் வருகிறார்.நான் மேலே கூறிய ஒரு தேசிய இனத்திற்குள் நிலவும் சாதிய, பாலின,வர்க்க போராட்ட அடுக்கிற்குள்.
இந்த அடுக்கிற்குள் இருக்கும் ஆளுமைகளை எனது உளவியல் விருப்பு காரணமாக நான் பெரிதாக தேடி வாசிப்பதில்லை.
அதனால் ஈவேரா எனும் மனிதரையும் நான் தேடி வாசிக்கும் விருப்பம் இருந்ததில்லை.
ஆனால் அவசியம் நேர்ந்திருக்கிறது.ஏனெனில் அடிப்படையில் தமிழ்தேசிய உணர்வாளனாக இருப்பதால்.
ஏனெனில் தமிழ்தேசிய உணர்வாளனாக தமிழ்நாட்டில் தமிழ்தேசிய சித்தாந்தம் அதிகாரத்தை அடையவேண்டும் என விரும்புகிறேன்.
அதற்கு தடையாக இருப்பது திராவிட சித்தாந்தம். இன்று திராவிட சித்தாந்தத்தின் அத்திவாரமாக இருப்பது ‘பெரியார்’ என அழைக்கப்படும் ஈவேரா.
அதனால் ஈவேரா எனும் மனிதரை அறிந்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது.
அறிந்துகொள்ளவேண்டும் என முற்படும்போதுதான் நடைமுறை சிக்கல்கள் ஆரம்பமாகிறது.
• ஏனெனில் ஈவேராவை பற்றி அறிய தமிழ்நாட்டில் இருந்து மட்டும்தான் தகவல்களை உலகின் பிற பாகங்களில் பிறந்த தமிழர்கள் பெறமுடியும்.
எப்படி அறிந்துகொள்வது? யாருடைய பார்வையில் அறிந்துகொள்வது? யாருடைய பார்வை என தீர்மானித்துவிட்டாலும், அவர்களுடைய பார்வையின் ஆழம் என்ன? நேர்மை என்ன? ஆய்வு பரப்பு என்ன? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.
• அதற்கு காரணம் இருக்கிறது.
தமிழ்நாட்டின் அரசியல் சூழல், அதில் உள்ள தலைவர்களின் புனித பிம்பங்கள், அவர்கள் மீதான ஆய்வு பார்வை என சகலதும் அழுகிபோன நிலையில் இருப்பதைத்தான் நான் காண்கிறேன்.
தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் இருக்கும் அனைத்து தலைவர்களின் பங்களிப்பும் மிகைப்படுத்தப்பட்டவையாக இருக்கிறது. ஒரு உள்நோக்கத்துடன் புனிதப்படுத்தப்பட்டவையாக இருக்கிறது.
இதற்குள்தான் ஈவேராவும் வருகிறார்.
இந்த புனிதப்படுத்தப்பட்ட தலைவர்களிலேயே முதல் இடத்தில் இருப்பவராகவே நான் ஈவேராவை காண்கிறேன்.
தமிழ்நாட்டின் அரசியல் என்பதே தலைவர்களை புனிதர்களாக, பெரும் ஆளுமைகளாக மிகைப்படுத்தி காட்டி அதனூடாக வாக்குகளை அள்ளும் விளையாட்டு.
இது எல்லா நாடுகளிலும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. நான் அடிக்கடி குறிப்பிடும் narrative இனை உருவாக்குதல் எல்லாம் இதற்குள் வருவதுதான்.
ஆனால் தமிழ்நாடு அளவிற்கு சீழ் படிந்த நிலையில் இல்லை. பிற இடங்களில் தலைவர்களின் காலம் முடிந்த பிறகாவது அந்த தலைவர்கள் பற்றிய நேர்மையான மதிப்பீடு என்பது உருவாகியிருக்கும். நேர்மையான ஆய்வு பார்வை செய்யப்பட்டு இருக்கும்.
• ஆனால் தமிழ்நாட்டில் அத்தகைய அரசியல் சூழல் இல்லை.
தமிழ்நாட்டில் ஆய்வறிஞர்கள் ஒரு கட்சியின் கட்டுப்பாட்டிற்குள்தான் வருகிறார்கள். ஒருவகையான கொடுக்கல் வாங்கல் அவர்களுக்கும் கட்சிகளுக்கும் இருக்கிறது.
இதில் மிக முக்கியமானது திராவிடத்திற்கும் ஆய்வறிஞர்களுக்கும் இருக்கும் நெருக்கமான உறவு.
இங்கு ஆய்வறிஞர்கள் சில காரணங்களுக்காக திராவிடத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்கிறார்கள். ஒன்று அவர் வாழ்க்கையில் பொருளாதாரரீதியில் உயர்வதற்கு திராவிடத்திற்கு ஊதுகுழலாக மாறுகிறார். அல்லது அவரது சாதிய பின்புலத்தை அடிப்படையாக வைத்து திராவிடத்திற்கு ஆதரவாக இருக்கிறார். அல்லது “false indebtedness", "misplaced gratitude” அடிப்படையில் திராவிட விசுவாசியாக இருக்கிறார்.
இந்த “false indebtedness", "misplaced gratitude” உளவியல் தமிழ்நாட்டில் எப்படி இயங்குகிறது என்பதை பற்றி முன்னர் கட்டுரை எழுதியிருந்தேன். இணைப்பு கீழே.
தமிழ்நாட்டு மக்களின் அடிமைத்தன உளவியல் - திராவிட உருட்டுகள்
இத்தகைய விசுவாசத்தில் இயங்கும் ஆய்வறிஞர்களிடம் இருந்து ஈவேராவை பற்றிய நேர்மையான ஆய்வு பார்வையில் எழுத்துக்கள் வருவது சாத்தியமில்லை.
தமிழ்நாட்டில் ஆய்வறிஞர்கள் இயங்கும் விதம், அதன் புறசூழல், இதிலே இருக்கும் கொடுக்கல் வாங்கல் எல்லாவற்றையும் அறிந்த நான் இந்த ஆய்வறிஞர்களின் பார்வையில் ஈவேராவை அணுக விரும்பவில்லை. காரணம் பொய்யான தகவல்கள் நிரம்பியதாகவும், மிகைப்படுத்தப்பட்டதாகவும் இருக்கிறது.
• இதற்கு தாராளமாக உதாரணங்களை தருமளவிற்கு நிலைமை மோசமாக இருக்கிறது.
• முதல் உதாரணம் ஈ.வே.ரா வைக்கம் போராட்டத்தை ‘தொடங்கியதாக’ தமிழ்நாட்டு பாடநூல்கள் உட்பட பல நூல்களில் எழுதப்பட்டுள்ளது [ Periyar launched Vaikkom struggle ] .
ஆனால் பலருடைய கட்டுரைகளில் வாசித்ததில், ஈ.வே.ரா வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்தார், போராடினார். ஆனால் அவர் அதை தொடங்கவில்லை – நடத்தவில்லை – முடிக்கவில்லை என்பதாக இருக்கிறது.
• கீழ்வெண்மணி படுகொலையில், படுகொலையை நடத்தியவர்களுக்கு எதிராக அவரது குரல் எழும்பவில்லை என்பதை பலர் ஆதாரங்களுடன் நிருபித்துவிட்டார்கள். படுகொலையை நிகழ்த்தியவர்கள் மீது எதிர்ப்பினை காட்டாமல், போராடிய மக்களின் பின்னணியில் இருந்த கம்யூனிச சித்தாந்தத்தை சாடியது என்பது ஏன் என்ற கேள்வி உடனே எழுகிறது. ஆனால் தமிழ்நாட்டின் ஆய்வறிஞர்கள் இன்றுவரை மழுப்பலான பதில்களை தந்துகொண்டிருக்கிறார்கள்.
• அடுத்தது ஈவேராவின் பார்வையில் ஒரு சிந்தனையாளனின் சாயலை நான் காணவில்லை. அவரது கருத்துக்களில் வரலாற்றை மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் படிமுறையில் அணுகும் போக்கு அறவே இல்லை என்பதை காணமுடிகிறது. இதுதான் தமிழ் மொழி, தமிழர் இனம், மதம், கடவுள் என்பவை தொடர்பில் அவரது வாதங்கள் வெறும் தட்டையாக இருப்பதற்கான காரணம்.
அவரது தட்டையான வாதங்களை வைத்து மேலும் மேலும் விரித்து விரித்து ஒரு மனிதன் அறிவுப்பார்வையை கூர்மையாக்க முடியாது.
“தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி பாஷை” , “தமிழின் இலக்கியங்கள் ஆரியத்தை ஏற்றுக்கொண்டவை’ என்பது போன்ற அவரது பார்வையை எடுத்துக்கொள்ளுங்கள்.
இதற்கு ‘தமிழர்களை பழமையிலிருந்து மீட்டு நவீனத்திற்கு திருப்புவதற்காக அவர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்’ என பெரியாரியவாதிகள் இன்று காரணம் சொல்கிறார்கள். இந்த காரணத்தை நான் நம்பவில்லை. ஆனால் ஒரு வாதத்திற்கு இது உண்மையென எடுத்துக்கொள்வோம். ஆனால் இது எந்தவித வரலாற்று பார்வையும் அற்ற, சிந்தனைதிறன் அற்ற அடி முட்டாள் பார்வை.
தமிழின் சங்க கால இலக்கியத்தை எடுத்துகொள்ளுங்கள். கிமு 300 -கிபி 200 இற்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது. குறைந்தது 1800 வருடங்களுக்கு முந்தையது.
• நான் சங்க இலக்கியத்தை எவ்வாறு பார்க்கிறேன்?
இதை மட்டுமே நான் பல பரிமாணங்களில் அணுகுகிறேன்.
• முதலாவது பரிமாணம் தொன்மை. எனது அடையாளங்களின் வேரை அது காட்டுகிறது. எனது வரலாற்றின் மூலத்திற்கு கூட்டி செல்கிறது.
எனது இனத்தின் அடையாளமே மொழியை அடிப்படையாக கொண்டது. அந்த மொழியின் வளமையை எனக்கு காட்டுகின்றது.
2000 வருடங்களுக்கு முன்பு உருவாகிய சங்க இலக்கியங்களில் நீக்கமற நிறைந்து நிற்கும் இலக்கிய செழுமை, மொழி வளமை இன்றும் தமிழ்மொழி மீதான எனது வியப்பிற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது.
• அடுத்து இதனை அரசியல் பரிமாணத்தினூடாகவும் விரிவடைய செய்யமுடியும்.
ஈவேரா எனும் மனிதர் ஒரு வார்த்தையில் ‘தமிழ் மொழி காட்டுமிராண்டி பாஷை’ என முடித்துவிட்டார். இது தமிழர்களிடையே தமது வரலாறு குறித்து ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியிருக்கலாம். தமது வரலாறு என்பது இருண்ட காலம் என்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கலாம்.
இந்த மாய தோற்றம் தமிழர்களை தமது வரலாறு குறித்து அறிந்து கொள்வதற்கான வேட்கையை சாகடித்துவிடும்.
தமிழர்கள் தமது வரலாறு குறித்து அறிந்துகொள்வதற்கான வேட்கையை கைவிடும்போது அது இன்னொரு ஆபத்தில் கொண்டுவந்து சிக்கவைக்கும்.
இன்றைய அரசியல் சூழலுக்கே அதை தொடர்புபடுத்தமுடியும்.
இன்று பாஜகவின் இந்துத்வா கருத்தியல் இந்திய நிலப்பரப்பில் வாழும் முஸ்லீம்களை எதனை அடிப்படையாக கொண்டு நிராகரிக்கிறது? முஸ்லீம்கள் அனைவரும் இஸ்லாமிய படையெடுப்போடு உள்நுழைந்தவர்கள். அதனால் அவர்கள் இந்திய நிலப்பரப்பின் பூர்வ குடிகள் அல்ல என கூறுகிறது. இதனை அத்திவாரமாக வைத்துத்தான் மற்றைய எதிர்ப்பு வாதங்கள் மேலே கட்டப்படும்.
இனி இலங்கை. இலங்கையின் சகல சிங்கள மக்களும், 10ம் நூற்றாண்டில் நடந்த சோழர் படையெடுப்போடு குடியேறிய சோழ படைகளின் வம்சாவளியினர்தான் இன்றைய தமிழீழ தமிழ் மக்கள் என நம்புகிறார்கள்.
1948 இலிருந்து இலங்கை அரசு தொடர்ச்சியாக தொல்லியல் துறையை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இந்த ‘சோழ படைகளின் வம்சாவளியினர்’ என்ற கருத்தாக்கத்தை மட்டுமே வலுப்படுத்திக்கொண்டு இருந்தது. பிற்காலங்களில் தமிழ் ஆய்வாளர்கள் இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என நிறுவியபோதும் பெரும்பான்மை சிங்கள பொது சனத்தின் பொதுப்புத்தியில் அது ஏறவில்லை. சிங்கள ஆய்வாளர்கள் மட்டும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
அதனால் தமிழ் மக்கள் ‘இலங்கையின் பூர்வகுடியான தமிழர்கள் பிரிந்து போக தீர்மானிக்கிறோம்’ என கூறும்போது, சிங்கள பொது சனம் ‘புத்தரின் புனித பூமியான, சிங்கள இனத்தின் நிலத்தை படையெடுப்பில் வந்து குடியமர்ந்த தமிழர்கள் நீங்கள் கூறுபோட பார்க்கிறீர்களா’ என எதிர் கேள்வி கேட்கிறது. ஏனெனில் அவர்களது இந்த வாதத்தில் ஒரு தார்மீக உரிமை சேர்ந்து கொள்கிறது. பூர்வ குடி Vs பின்னாளில் வந்த குடியமர்ந்த படையெடுப்பாளர்களின் வம்சாவளி.
எந்த ஒரு அரசியல் போராட்டத்திலும் தார்மீக உரிமை என்ற ஒரு கூறு பிரதானமானது.
இந்த இலங்கை விடயத்தில் ஈழ தமிழர்கள் தமது தொன்மையை வைத்துத்தான் சிங்கள மக்களின் வாதத்தை முறிக்கமுடியும்.
இனி தமிழ்நாடு. இன்றைய இந்திய நிலப்பரப்பில் வட இந்தியா தமது அடையாளத்தோடு இந்தியா எனும் ஒரு நாட்டினை கட்டியெழுப்ப முனைகிறது. இது பாஜக தொடங்கியது அல்ல. 1947 இலிருந்து மத்திய அரசு இந்தியாவின் சகல தேசிய இனங்களையும் assimilation செய்யவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறது. இந்த assimilation தொடர்பாக பல கட்டுரைகள் முன்னர் எழுதியிருக்கிறேன்.
இன்று இந்திய மத்திய அரசின் assimilation இனை தமிழர்கள் எதிர்க்கவேண்டுமானால், அவர்களது தொன்மையை சுட்டிக்காட்டி, அதனூடாக தாம் பூர்வகுடி என்பதை நிறுவி அதனூடாகவே assimilation இற்கு எதிராக அதனுடைய வாதங்களை வலுப்படுத்த முடியும்.
இதற்கு சான்றாக சங்க கால இலக்கியங்களும் உங்களது துணைக்கு வரும். உங்களது தொன்மையினை உறுதிசெய்ய. அத்துடன் தமிழர்களது நாகரீகம் (civilization) வெறும் primitive நிலையில் இருந்தல்ல. Sophisticated ஆக இருந்தது என விரித்துகொண்டே செல்லலாம்.
• அடுத்த பரிமாணம் இலக்கியம். வெறும் இலக்கிய கலாரசனையோடு மட்டும் நீங்கள் சங்க இலக்கியங்களை அணுகினால்கூட சங்க இலக்கியங்கள் உங்களை பிரமிப்பூட்டுபவை. அது பெரும் சொத்து.
• இன்னொரு பரிமாணம் சங்க இலக்கியங்களில் விரவி கிடக்கும் தமிழர் வாழ்வியல் பார்வை. அது தமிழர் வாழ்க்கையை எத்தகைய நெறிகளுக்குள் வடிவமைக்க முற்பட்டார்கள் என காட்டுகிறது.
ஆக ‘தமிழ் மொழி’ என்ற ஒற்றை பொருளை வைத்து பல பரிமாணங்களோடு விரித்து செல்லமுடியும்.
ஆனால் ஈவேரா இத்தகைய எந்த சிந்தனை ஆழமும் இன்றி ஒரே வார்த்தையில் பானையை உடைத்துவிடுகிறார்.
இவ்வாறு கடவுள், மொழி, தேசம் என எனது வாதங்களை அடுக்க முடியும். ஆனால் மேலுள்ள ஒரு உதாரணம் போதும் என நினைக்கிறேன்.
• ஆக உலகின் பிறபாகத்தில் பிறந்த தமிழனாக ஈவேராவை தமிழ்நாட்டின் ஆய்வறிஞர்களின் எழுத்துக்களினூடாக அணுகும்போது, கிடைப்பது பொய்யான தகவல்கள் அல்லது மிகைப்படுத்தப்பட்ட பிம்பம்.
இதற்கு எதிர் தரப்பில் இருப்பவர்கள் என இருப்பவர்கள் இந்திய தேசியவாதிகள், தமிழ் தேசியவாதிகள்.
இந்த இரு தரப்பினது சிக்கல் என்னவெனில் ஈவேராவினது பேச்சுக்களை, எழுத்துக்களை அப்படியே முகப்பெறுமதியோடு (face value) அணுகுகிறார்கள்.
ஈவேராவை அப்படியே கவிழ்த்து போட்டு அடிக்க முயல்கிறார்கள்.
எந்தவொரு எழுத்தும், பேச்சும் எதன் பின்னணியில் சொல்லப்பட்டன என ஆராயப்பட வேண்டும். அதாவது context. அன்றைய களம், காலம் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். அதன் ஊடாகவே ஒரு மனிதனின் மனப்போக்கை அறிந்துகொள்ள முடியும்.
அப்படி ஆழமான ஆய்வு பார்வையில் தமிழ்தேசியவாதிகளிடமிருந்து பெரிய அளவிலான ஆய்வு கட்டுரைகளை காணமுடியவில்லை.
சமூக ஊடகங்களில் ஈவேராவை விமர்சித்து வருபவை எல்லாமே context இல் அணுகாத விமர்சனங்களாக இருக்கின்றன.
இந்த கட்டுரையை இன்னும் விரித்து எழுத ஆசைதான். ஆனால் ஏற்கனவே இது நீண்ட கட்டுரையாகிவிட்டது.
உலகின் பிறபாகத்தில் பிறந்த தமிழனாக எனக்கு இருக்கும் நடைமுறை சிக்கல் என்பது, எவர் ஊடாக ஈவேராவை அணுகுவது என்பதுதான்.
தமிழ்நாட்டின் ஆய்வறிஞர்கள் (திராவிட சார்பு) ஊடாக அணுக முடியாது. பல பொய்கள், திரிபுகள் என குவிந்து கிடக்கின்றன.
தமிழ்தேசியவாதிகளின் தகவல்கள் என்பது ஆழமற்ற பார்வையாக இருக்கிறது.
• அதேநேரம் கிடைக்கும் தகவல்களை வைத்து ஈவேரா என்பவரை பற்றி எனக்கு என சில முடிவுகள் இருக்கின்றன.
ஈவேரா எனும் மனிதர் நான் மேலே கூறிய பிரமிட்டின் மூன்றாவது அடுக்கில் வரும் ஒருவர்.
அந்த அடுக்கு ஒரு வகையான சீர்திருத்தவாதிகள் அடுக்கு (reformers).
அத்தகைய சீர்திருத்தவாதியாக அவர் இருந்தாரா என்பதை அன்றைய தமிழ்நாட்டின் கள சூழல் பின்னணியில் இன்னும் விரிவாக ஆய்வு செய்யப்படவேண்டும். அதற்கான அறிவை முக நூலில் இருக்கும் தமிழ்தேசிய உணர்வாளர்கள் எனக்கு தந்து உதவலாம்.
• ஈவேரா தொடர்பான இன்றைய பிம்பம் நிச்சயம் மிகைப்படுத்தப்பட்டது என்பதும் எனது முடிவு.
காரணம் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் அப்படித்தான் இருக்கிறது. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அப்படித்தான் மிகைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஏன் அப்படி இருக்கிறது என முன்னர் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இணைப்பு கீழே.
• ஈவேரா சிந்தனையாளரும் அல்ல. பாமரத்தனமான எதிர் வாதங்கள் ஊடாக சமூக வரலாற்றை அணுகமுற்பட்ட நபராக இருக்கிறார். அதற்கு வசதியாக எந்த அடையாளத்திற்குள்ளும் நான் சிக்கமாட்டேன் என கூறிக்கொண்டு, எல்லா தளங்களையும் பற்றி நேரத்திற்கு ஒரு பார்வையை வைத்திருக்கிறார். ஆனால் அவர் சில அடையாளங்களிலிருந்து வெளிவராமலும் இருந்திருக்கிறார் என்பதை காணமுடிகிறது.
தமிழ்நாட்டில் திராவிடம் என்ற கருத்தியல் பிறமொழியினர் தமிழ்நாட்டை ஆள்வதற்கு என உருவாக்கப்பட்ட கருத்தியல். இந்த கருத்தியல் உள்ளார்ந்த அடிப்படையில் பல ஓட்டைகளை கொண்டது. இந்த ஓட்டைகள் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஈவேரா எனும் மனிதரை பெரும் புனிதராக பிம்பப்படுத்தி அவருக்கு பின்னே இந்த திராவிட கருத்தியலை வைத்திருக்கிறார்கள். நீங்கள் திராவிடத்தை சிதைக்க முற்படும்போது, திராவிட சார்பாளர்கள் ஈவேராவை முன்னே நிறுத்துகிறார்கள். “நீ ஈவேராவை விமர்சிக்கிறாயா? அந்த மனித புனிதரையா விமர்சிக்கிறாய்?” என அவரை காட்டி காட்டி தப்பிக்க பார்க்கிறார்கள்.
க.ஜெயகாந்த்











Comments
Post a Comment