தலைவர் பிரபாகரனுடனான சீமானின் சந்திப்பு- இதை தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு விளக்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள்

 முதலிலேயே 3 புல்லட் பாயின்ட்களை சொல்லிவிடுகிறேன்.


• முதலாவது தலைவர் பிரபாகரனை நாம் தமிழர் சீமான் சந்தித்தாரா அல்லது இல்லையா என்பது, இனி தமிழ்நாட்டின் தமிழ்தேசிய அரசியல் தளத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. சந்திக்கவில்லை எனிலும் அது ஒரு பிரச்சினையில்லை என்பதுதான் கள யதார்த்தம். இன்றைக்கு தமிழ்நாட்டில் தமிழ்தேசிய அரசியல் எனும் ஈட்டியில் நாம் தமிழர் சீமான்தான் கூர் முனையே.


• இரண்டாவது சீமான் தலைவர் பிரபாகரனை சந்தித்தது உண்மை. ஆனால் சீமான் அதனை தமிழ்நாட்டின் மேடைகளில் விவரித்த விதம் நிச்சயம் மிகைப்படுத்தல். இதனை ஈழத்தமிழர்கள் அறிவார்கள். 


பல வருடங்கள் புலிகளின் கட்டுப்பாட்டு நிலப்பரப்பில் ரத்தமும் சதையுமாக வாழ்ந்தவர்கள் அவர்கள். அதனால் சீமான் சொல்வதில் எது உண்மை, எது மிகைப்படுத்தல் என்பதை அவர்கள் அறிவார்கள். மிகைப்படுத்தல் சீமானின் ஆரம்ப காலங்களில் அவருக்கு ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தி தந்தது. அதன் பயன் தமிழ்தேசியத்திற்குத்தான் வந்துசேரும் என்பதால், ஈழத்தமிழர்கள் சீமான் “தனது சந்திப்பை மிகைப்படுத்தி சொன்னபோது அமைதி காத்தார்கள்”. 


• மூன்றாவது தமிழ்நாட்டில் பிறமொழியினரின் வலைப்பின்னல் எவ்வளவு  நுட்பமானது என்பதை முன்னர் ஒரு கட்டுரையில் கூறியிருந்தேன். 


தமிழ்நாட்டில் திராவிடம் என்ற கருத்தியல் பிறமொழியினர் தமிழராக உள்மனதில் உணராமல், தமது பிறமொழி அடையாளங்களோடு தமிழ்நாட்டை ஆளுவதற்கு ஏற்ற வசதியை செய்துதரும் கருத்தியல். 


அதனது  மிக முக்கிய மிகைபிம்பங்களில் ஒருவர் ஈவேரா. ஒருவகையில் ஈவேராதான் திராவிட கருத்தியலின் அத்திவாரம்.


சீமான் அந்த அத்திவாரத்தில் கைவைத்ததும், பிறமொழியினரின் அந்த வலைப்பின்னல் பாய்ந்தடித்து ஓடிவந்து சீமான் என்பவரின் நம்பகத்தன்மையை சிதைக்க முயற்சி செய்வதுதான் கடந்த சில நாட்களாக நடப்பது. அந்த வலைப்பின்னலின் ஊடகங்கள் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் எவர் எவரையோ இழுத்து பிடித்து நேர்காணல் செய்கிறார்கள். இன்னும் வரும். அதுதான் அந்த வலைப்பின்னலின் பலம்.


இதேயே தலைகீழாக யோசித்து பாருங்கள். தமிழ்தேசியவாதிகள் உங்களால் அந்த வலைப்பின்னலில் உள்ள ஒருவரை கூட அழைத்து வந்து expose செய்யமுடியாது. அதற்கான அரசியல், பொருளாதார, அதிகார பலம் உங்களிடத்தில் இல்லை.


சரி. இதுதான் அந்த மூன்றே மூன்று புல்லட் பாயின்ட்கள்.





இனி தலைவர் பிரபாகரன் சீமான் சந்தித்தது தொடர்பானது.


தலைவர் பிரபாகரனை சீமான் சந்தித்ததில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது?


இதை தமிழ்நாட்டிற்கு விளக்கப்படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. 


முதலாவது தமிழ்நாட்டிற்கு போர்கால சூழல் என்பதே தெரியாது. போர் என்பது எப்படியிருக்கும் என்பதுமே சுத்தமாக தெரியாது. அவர்களது அனுபவம் என்பது ஊடகத்தின் ஊடாக போர்களை பார்த்ததாக மட்டுமே இருக்கும்.


அடுத்தது புலிகளை பற்றிய புரிதல். 


போரியல் ஆய்வறிஞரான தராகி சிவராம் புலிகளை பற்றி முத்தாய்ப்பாக ஒரு வார்த்தையில் விவரித்திருப்பார்.


“LTTE is the most ferocious, highly sophisticated,disciplined and resiliently compact conventional fighting force in the world.”


இந்த கூற்றில் ஒரு வார்த்தை கூட மிகைப்படுத்தல் கிடையாது. 


புலிகள் அமைப்பு எப்படி இயங்கியது, அது இலங்கையை எப்படி ஆட்டி வைத்தது என்பது இலங்கையில் வாழ்ந்த எங்களுக்குத்தான் தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு புலிகளை பற்றி அறிவதற்கு வாய்ப்பு இல்லை. செய்திகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்டதை வைத்துத்தான் அவர்களுக்கு சித்திரம் வரையமுடியும்.


அடுத்தது தலைவர் பிரபாகரனை பற்றிய புரிதல். 


26 வருட போரை தொடர்ச்சியாக அவதானித்து வந்திருந்தால், அந்த ஆளுமை செயற்படும் விதத்தை ஓரளவு கணிக்கமுடியும். அதிலும் தமிழ்நாட்டிற்கு சிக்கல் இருக்கிறது. ஊடகங்கள் முழுவதும் புலிகளுக்கு எதிரான narrative இனை கட்டமைத்த  அந்த காலகட்டத்தில் அவரை பற்றியும் புரிதல் வர சாத்தியம் இல்லை.


மேலே விவரித்த இந்த மூன்று காரணங்கள்தான் இதிலுள்ள நடைமுறை சிக்கல்கள்.


ஒரு உதாரணம் தருகிறேன்.


அடிக்கடி தமிழ்நாட்டில் இருக்கும் உபிகள் ஒரு கேள்வியை வைப்பார்கள்.


போர் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது. 2008 இல் தலைவரை சீமான் சந்திக்கிறார். போர் நடக்கும்போது எப்படி சாப்பாடு, விருந்தெல்லாம் கொடுக்க முடியும்? “.


இது உபிகளின் கேள்வி. அதாவது புத்திசாலித்தனமாக கேள்வி கேட்டு எங்களை மடக்கி விட்டார்களாம்.


இதே கேள்வியை ஈழத்தமிழரிடம் கேளுங்கள். அவர்களுக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியும். 


காரணம் அவர்களுக்கு போர், அந்த சூழலில் பறக்கும் போர்விமானம், அதனது சத்தம், சத்தத்தை வைத்து இன்னும் எவ்வளவு நேரத்தில் குண்டு விழும், ஆர்ட்டிலறி ரேஞ்ச் என எல்லாவற்றையும் அறிந்து வைத்திருப்பார்கள். ஏனெனில் இது அவர்களுக்கு வாழ்வா சாவா விடயம். இது தெரிந்து இருந்தால்தான் உயிர் பிழைக்க முடியும்.


சரி. உபிகளின் இந்த “புத்திசாலித்தனமாக கேள்விக்கு” என்ன பதில்?


தலைவர் பிரபாகரனை இருந்தது வன்னியின் இதய பகுதி. முல்லைத்தீவு காடுகள். 


2008 இல் புலிகளது கட்டுப்பாட்டில்தான் வன்னி பிராந்தியம் இருந்தது. வன்னி பிராந்தியத்தின் பரப்பளவு குறைந்தது 7000 சதுர கீமீ. வடக்கு-தெற்கு நீளம் 100-120 கிமீ. மேற்கு-கிழக்கு அகலம் 50-70 கிமீ.


2008 ஆரம்ப காலப்பகுதியில், அதாவது சீமான் சந்தித்ததாக சொல்லப்படும் காலப்பகுதியில், புலிகளது FDL (Forward Defense Line) என்பது இலங்கையின் மேற்கு கரையோர பகுதியில் இருந்தன. புலிகளது தலைமை இருந்ததோ கிழக்கு கடற்கரையோரம் இருக்கும் முல்லைத்தீவு காடுகளில். 


இலங்கை இராணுவத்தின் தகவல்படியே, 2008 மே மாதம்தான் இலங்கையின் மேற்கு பகுதியில் இருக்கும் மன்னார் மாவட்டத்தின் பாலம்பட்டி பகுதியை கைப்பற்றுகிறது. ஜூலை மாதம் விடலைத்தீவை கைப்பற்றுகிறது.


ஏன் இந்த தகவல்கள் எல்லாம் முக்கியம்?


ஏனெனில் 2008 ஆரம்ப காலப்பகுதியில் புலிகளது  FDL (Forward Defense Line) இலங்கையின் மேற்கு கரையோரம் இருப்பது உறுதியாகிவிட்டது.


அப்படியெனில் இலங்கை இராணுவத்தின் ஆர்ட்டிலறி ரேஞ்சிற்குள் வன்னி காடுகள் வராது. ஏனெனில் ஆர்ட்டிலறிகளின் அதிக பட்ச சுடுதூரம் 30-40 கீமீ.


அடுத்தது இலங்கையின் விமானப்படையும் அதிகமான குண்டு வீச்சினை முல்லைத்தீவு காடுகள் மீது நடத்தமுடியாது.  HUMINT (Human Intelligence) இல்லாமல், வெறுமனே குண்டுகளை காடுகளை நோக்கி போடுவதில் பயனில்லை. 


அந்த போர் விமானங்கள் குண்டு வீச்சினை  புலிகளது  FDL (Forward Defense Line) இருக்கும் பகுதிகளிலும், 

logistical supply மீதும்தான் நடத்தும்.


இந்த காலகட்டங்களில் இலங்கை இராணுவத்தின் DUP (Deep Penetration Unit) முல்லைத்தீவு காடுகளுக்குள் நுழைந்திருக்க முடியாது.


ஆக வன்னி பிராந்தியத்தின் இதயப்பகுதியில் இருக்கும் தலைவர் வழமைபோல அவரது பணிகளை செய்து கொண்டிருப்பார். யாரையாவது சந்திப்பார். விருந்தோம்பலும் செய்ய முடியும்.


யோசித்து பாருங்கள். ஒரு கேள்விக்கு பின்னே போரியல் பார்வையில் பல விடயங்கள் இருக்கிறது.


இந்த கேள்விக்கான பதிலை போர்காலத்தில் வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த ஈழ தமிழர்கள் ஒரு வினாடியில் சொல்லிவிடுவார்கள்.


இதுதான் அந்த நடைமுறை சிக்கல்.


க.ஜெயகாந்த்

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]