தலைவர் பிரபாகரனும் மற்றைய புரட்சியாளர்களும் - சுருக்கமான ஒப்பீடு ( பகுதி -1)
தலைவர் பிரபாகரன் மற்றைய புரட்சியாளர்களை விட ஒரு படி மேல் என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
முதலிலேயே சொல்லிவிடுகிறேன். புரட்சியாளர்களை ஒப்பீடு செய்வது ஒருவரை சிறுமைப்படுத்தி மற்றவரை பெருமைப்படுத்துவதற்காக அல்ல.
ஒப்பீடு செய்வதன் முதலாவது காரணம் , ஒரு ஆயுத போராட்டத்திற்கு பல்வேறு பக்கங்கள் இருக்கின்றன என்பதை விளங்கபடுத்தி, அது பற்றிய உங்களின் புரிதலை ஆழமாக்கவே.
இரண்டாவது காரணம், முகநூலில் இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பல ‘கிணற்று தவளை அறிவுஜீவிகளின்’ போதாமையை காட்ட.
முன்னைய பதிவை வாசித்த பலரும், தலைவர் பிரபாகரன் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த, தனது அனைத்து போராளிகளையும் கடைப்பிடிக்க வைத்த ஒழுக்கத்தை அடிப்படையாக வைத்துதான், அதை நான் குறிப்பிட்டதாக நினைத்திருக்கலாம்.
நான் அதை குறிப்பிட்டு சொல்லவில்லை. காரணம் ஒழுக்கம் என்பதன் அளவுகோல் கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் வேறுபடும். தமிழினத்தின் பார்வையில் ஒழுக்க மீறலாக தோன்றும் விடயம் இன்னொரு கலாச்சாரத்தின் பார்வையில் ஒழுக்கத்திற்கு உட்பட்டதாக இருக்கும்.
உதாரணமாக மேற்குலக நாடுகளில் மது, புகைபிடித்தல், பல பெண்களின் சகவாசம் என்பவை இயல்பானதாகவே அணுகப்படுகிறது. அதனால்ஒழுக்கத்தை அடிப்படையாக வைத்து மற்றைய புரட்சியாளர்களுடன் ஒப்பீடு செய்வது ஏற்புடையது அல்ல.
ஆனால் ஒழுக்க நெறிகளை அடிப்படையாக வைத்தும் ஒப்பீடு செய்யவேண்டும் என்றால், தலைவர் பிரபாகரனை அதே தமிழினத்தின் மற்றைய ஆளுமைகளுடன் வைத்து ஒப்பீடு செய்யலாம். அவ்வாறு ஒப்பீடு செய்தால் தலைவர் பிரபாகரன் தனது போராளிகளை கட்டுக்கோப்பான ஒழுக்கத்துடன் நடத்தியவிதம், கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத சாதனை.
நான் இந்த பதிவில் சொல்ல முனைவது வேறு. முந்தைய பதிவில் நான் குறிப்பிட்ட புரட்சியாளர்களையே எடுத்து கொள்ளுங்கள்.
பிடல் காஸ்ட்ரோ, சேகுவரா, ஹோசிமின், மாவோ போன்ற தலைவர்களை எடுத்துகொண்டால், அவர்களின் போராட்ட இலக்கு, தலைவர் பிரபாகரனின் போராட்ட இலக்கோடு ஒப்பீடு செய்யும்போது, ஒப்பீட்டளவில் சிறிது இலகுவானதாக இருந்திருக்கிறது என்பதையே இங்கு நிறுவ முயல்கிறேன்.
அது எப்படி என்பதை விளக்குகிறேன்.
இந்த புரட்சியாளர்கள் போராடிய நிலப்பரப்புகளின் வரலாற்றை வரிசையாக மிக சுருக்கமாக பார்ப்போம்.
இந்த நிலப்பரப்புகள் எல்லாவற்றிற்கும் பொதுவான அம்சம் ஒன்று உண்டு. இந்த புரட்சியாளர்கள் தோன்றும்முன்பேயே அவை உலக ஒழுங்கால் அங்கீகரிக்கப்பட்ட இறையாண்மையுள்ள அரசுகள் (sovereign state).
• சீனா - மாவோ
சீனாவின் Founding Father of people’s republic of China வாக மாவோ அழைக்கப்பட்டாலும், கம்யூனிச சித்தாந்தத்துடன் உருவாக்கப்பட்ட republic சீனாவிற்கான தந்தையே ஒழிய, சீனா என்ற இறையாண்மையுள்ள அரசை உருவாக்கியதாக அதன் அர்த்தம் அல்ல.
காரணம் பல ஆயிரம் ஆண்டுகளாக சீனா என்பது, imperial China வாக ஒற்றை நிலப்பரப்பாக ஆளப்பட்டுவந்தது. இவை Han Dynasty, Sui Dynasty, Tang Dynasty, Ming Dynasty என பலதரப்பட்ட Dynasty களால் ஆளப்பட்டது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மன்னராட்சி முறையில் இருந்த சீனாவில், 1911 Revolution (xinhai revolution) மூலமாக மன்னராட்சி முறை முற்றாக அகற்றப்பட்டு குடியரசாக மாற்றப்பட்டது.
பின்னர் chinese civil war இனூடாக , மாவோ People's Republic of China எனும் கம்யூனிச சித்தாந்தத்தில் அடிப்படையிலான சீனாவாக மாற்றினார்.
சுருங்க கூறினால் இறையாண்மையுள்ள சீன அரசு இருந்தது. அந்த அரசின் நிலப்பரப்பிற்குள் சித்தாந்தத்தின் அடிப்படையிலான civil war நடந்தது .
மாவோ , அவருக்கு எதிர் தரப்பில் இருந்த Kuomintang (KMT) என்ற இருதரப்பும் போராடுவது ஒரே மக்கள் கூட்டத்திற்குதான். இரு தரப்பும் போருக்கான ஆட்திரட்டலை நடத்தபோவதும் அந்த ஒரே மக்கள் கூட்டத்திடம் இருந்துதான்.
தங்களின் சித்தாந்தத்தை, அரசியலை அதிகமான மக்களிடம் கொண்டு சேர்த்த தரப்பிற்கு , அதிகமான ஆட்திரட்டலை ( recruitment) செய்யமுடியும். பலமுறை சொன்னது போல படைகளின் எண்ணிக்கை ( number of troops) போரின் வெற்றிக்கான அடிப்படை காரணி.
இந்த சாதகம் பிடல் காஸ்ட்ரோவிற்கும், ஹோசி மின்னிற்கும் இருந்தது.
• கியூபா - பிடல் காஸ்ட்ரோ
கியூபா எனும் நிலப்பரப்பு 400 ஆண்டுகளாக ஸ்பெயினின் காலனித்துவத்திலேயே இருந்தது. ஸ்பானிய காலனித்துவத்திற்கு முன்பு கியூபா எனும் நாடு இருந்ததில்லை.
அமெரிக்கா , அதனது புவி சார் நலனுக்காக 1898 இல் நடந்த Spanish–American War இல் வென்று, கியூபாவை ஸ்பெயினிடம் இருந்து விடுவித்தது. கியூபா இறையாண்மையுள்ள அரசாக உருவானது 1902 ம் ஆண்டு.
50 ஆண்டுகளுக்கு பிறகு, பிடல் காஸ்ட்ரோவும், சேகு வராவும் அன்றைய இராணுவ சர்வாதிகாரியை வீழ்த்துவதற்காக ஆயுதப்போராட்டத்தை தொடங்கினார்கள்.
ஆனால் கியூபாவின் மக்கள் கூட்டம் இரு பக்கத்திற்கும் பொதுவானது. எந்த தரப்பு தமது அரசியல்மயப்படுத்தல் மூலம் மக்களை தம் பக்கம் இழுக்கிறார்களோ, அவர்களுக்கு படைகளின் எண்ணிக்கை எனும் போரியல்காரணி சாதகமாக மாறும்.
• வியட்நாம் - ஹோசி மின்
புரட்சியாளர் ஹோசி மின்னை எடுத்துகொண்டால், அவர் பங்களிப்பு செய்திருந்த பிரஞ்சு காலனித்துவத்திற்கு எதிரான Anti-French Resistance War உம் சரி, அமெரிக்காவிற்கு எதிரான Vietnam War உம் சரி , இரண்டுமே அந்நிய நாட்டுக்கு எதிரான போர்.
என்றுமே அந்நிய நாட்டின் ஆக்கிரமிப்பிற்கு (military occupation) எதிராக, மண்ணின் மைந்தர்களை ஒருங்கிணைப்பது எளிது. ஆயுத போராட்டத்திற்கான ஆட்திரட்டல் (Recruitment) என்பது இங்கே எளிது.
• நான் மேலே கூறியதை மறுபடியும் சுருக்கி தருகிறேன்.
மாவோவின் தலைமையில் நடந்த சீன புரட்சி , கம்யூனிச சித்தாந்தத்தை அரசியல் அதிகாரத்தில் அமர்த்துவதற்கான போராட்டம்.
கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ, சேகுவராவின் ஆயுத போராட்டம் என்பது அடிப்படையில் இராணுவ சர்வாதிகாரியை வீழ்த்துவதற்கான ஆயுதப்போராட்டம்.
வியட்நாமில் ஹோசி மின் நடத்திய போர் , அடிப்படையில் அந்நிய நாட்டின் ஆக்கிரமிப்பை வீழ்த்துவதற்கான போர்.
போரின் வெற்றியை தீர்மானிக்கும் அடிப்படை காரணிகளில் ஒன்றான படைகளின் எண்ணிக்கை (number of troops) என்பதை, இந்த புரட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றக்கூடியதாக, அந்த அம்சம் போராட்டத்தின் உள்ளார்ந்த தன்மையிலேயே இருந்தது.
• இரண்டாவது இறையாண்மை அரசுக்குள் நடக்கும் போரின் போது, மற்றைய நாடுகளின் புவிசார் நலன் அடிப்படையிலான செயல்பாடுகளின் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டது.
மேலே கூறிய மூன்று போராட்டங்களையும் பார்ப்போம்.
• சீனாவின் இறையாண்மை அரசுக்குள் நடந்த சித்தாந்த அடிப்படையிலான சீன புரட்சியில் மற்றைய நாடுகள்ஒதுங்கியே இருந்தன.
கியூபா எனும் இறையாண்மை அரசுக்குள் நடந்த, இராணுவ சர்வாதிகாரியை வீழ்த்துவதற்கான பிடல்காஸ்ட்ரோவின் ஆயுத போராட்டத்தில் அமெரிக்கா பெரியளவு முனைப்பை எடுக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் ,வரலாற்று ஆவணங்களை புரட்டி பார்த்தால் , பிடல் காஸ்ட்ரோவின் கியூபாவை ஆரம்பத்தில் தனக்கான அச்சுறுத்தலாக (security threat) அமெரிக்கா கருதவில்லை.
When Fidel Castro seized power in 1959, the United States did not initially view Cuba as a security threat. The Library of Congress actually holds the papers of Philip bonsal, who was U.S. ambassador to Cuba during the first two years of Castro’s rule. In Bonsal’s correspondence from his time in Havana you can see that he and other U.S. officials were struggling to figure out just what Castro intended to with his newfound power. Pretty quickly, it became clear that the reforms that the Cuban revolutionaries were determined to undertake would harm U.S. business interests on the island.
வட வியட்நாம் , தென் வியட்னாம் எனும் இறையாண்மை அரசுகளுக்குள் நிகழ்ந்த Vietnam War இல், புவிசார் நலன் அரசியல் அடிப்படையில் அமெரிக்கா, சோவியத் யூனியன் உட்பட பல நாடுகள் களத்தில் குதித்திருந்தனதான். ஆனால் வட வியட்நாம் எனும் இறையாண்மை அரசுக்கு ஆதரவாக சோவியத் யூனியன், சீனா எனும் பெரும் பலம் பொருந்திய இரு நாடுகள் பக்கபலமாக இருந்தன.
• இனி அப்படியே தலைவர் பிரபாகரன் பக்கம் வருவோம்.
முதலாவது போரின் வெற்றியை தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியான படைகளின் எண்ணிக்கையை (number of troops) எடுத்து கொள்வோம்.
இலங்கையின் சனத்தொகையில் சிங்கள இனம் 75%. முஸ்லீம் இனம் 9%. ஆக மொத்தம் 84%.
இதற்குஎதிராக போராடிய இலங்கை தமிழர்கள் 11%.
அதாவது 84% Vs 11%.
எந்த கோணத்தில் அணுகினாலும், இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை மிக எளிதாக புலிகளை outnumber செய்யக்கூடியதாகவே இருக்கும்.
அதனது Force Ratio குறைந்தது 15:1 ஆகவே இருக்கும் (அதாவது ஒரு புலி போராளிக்கு குறைந்தது 15 இலங்கை இராணுவம்).
இரண்டாவது விடுதலை புலிகள் இறையாண்மையுள்ள தமிழீழ அரசை உலக ஒழுங்கில் புதிதாக உருவாக்க ஆயுதபோராட்டம் நடத்தினார்கள்.
உலக ஒழுங்கில் புதிதாக ஒரு இறையாண்மை அரசை உருவாக்க முனையும்போது , அதற்கு எதிரான மற்றைய நாடுகளின் புவிசார் நலன் அரசியல் அதிக பங்கு வகிக்கும்.
உதாரணம் இலங்கையில் விடுதலை புலிகள் போராடியபோது, அவர்களின் எதிர்தரப்பில் இலங்கை அரசு மட்டும்இருக்கவில்லை. அவர்களோடு தமிழீழ அரசை விரும்பாத இந்தியாவும் , சீனாவும் கூட இருந்தது.
இது இங்கு மட்டுமல்ல. ஆயுத போராட்டம் இல்லாமல் அரசியல் போராட்டம் மட்டுமே நடக்கும் இடங்களிலும் இதை காணலாம்.
உதாரணம் ஸ்காட்லாந்து தனிநாடாக போவதை ஐரோப்பிய யூனியன் உள்ளுக்குள் விரும்பவில்லை. காட்டலோனியா தனி நாடாக உருவாவதையும் விரும்பவில்லை.
கனடாவில், கியூபெக் தனிநாடாக உருவாவதை அமெரிக்கா உள்ளுக்குள் விரும்பவில்லை.
அத்துடன் உலக ஒழுங்கும் புதிதாக ஒரு இறையாண்மையுள்ள அரசு உருவாவதை அனேகமான சந்தர்ப்பங்களில் விரும்புவதில்லை.
மேலே நான் கூறிய மாவோ, ஹோசி மின், பிடல் காஸ்ட்ரோ என்ற மூவருக்குமே, உலக ஒழுங்கில் இறையாண்மையுள்ள புதிய அரசை , புதிய நாட்டை உருவாக்க வேண்டிய கடினமான சவால் எழவில்லை.
இந்த மூவரினது ஆயுதப்போராட்டம் தோல்வி அடைந்திருந்தாலும், சீனா, வியட்னாம் , கியூபா போன்றவை இறையாண்மையுள்ள அரசுகளாகவே தொடர்ந்திருக்கும்.
அவர்களின் போராட்டத்திற்கும் இறையாண்மையுள்ள புதிய அரசுகளின் உருவாக்கத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
அதனால்தான் மேலே குறிப்பிட்டேன். இறையாண்மையுள்ள அரசுக்குள் நிகழ்த்தும் சித்தாந்த, ஆட்சி மாற்ற , அந்நிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஆயுத போராட்டங்கள் ஒப்பீட்டளவில் சிறிது எளிதானது.
ஆனால் இறையாண்மையுள்ள ஒரு புதிய அரசை உலக ஒழுங்கிற்குள் உருவாக்குவது ,மற்றைய ஆயுதபோராட்டங்களை விட மிக கடினமானது.
தலைவர் பிரபாகரனின் போராட்ட இலக்கு என்பது மற்றைய புரட்சியாளர்களின் போராட்ட இலக்கை விட கடினமானது என கூறியதும் அதனால்தான்.
அத்துடன் போரியல் பார்வையில் அலசினாலும், விடுதலை புலிகளுக்கு எத்தனை போரியல் காரணிகள் எதிராக இருந்தன என்பதை பகுதி-2 இல் விளக்குகிறேன்.
ஆக தலைவர் பிரபாகரனின் போராட்ட இலக்கும் மற்றைய புரட்சியாளர்களின் போராட்ட இலக்கை விட கடினமானது. போரியல் காரணிகளும் மற்றைய புரட்சியாளர்களுக்கு சாதகமாக இருந்தன.
கடினமான போராட்ட இலக்கு இருந்தும், சகல போரியல் காரணிகளும் தனக்கு எதிராக இருந்தும் , களத்தை இரு தசாப்தங்களாக அவரது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, வெற்றிக்கு மிக அருகிலே வந்தது பெரும் பிரமிப்புக்கு உள்ளாக்கும் சாதனை.
போரியல் ரீதியில் மட்டும் ஆராய்ந்தாலும், தலைவர் பிரபாகரன் மற்றைய புரட்சியாளர்களை விட எப்படி ஒரு படி மேலே நிற்கிறார் என்பதை பகுதி-2 இல் தந்திருக்கிறேன்.











Comments
Post a Comment