உலக வரலாறு தொடர்பான தமிழ்நாட்டின் பிழையான புரிதல்
விடுதலை புலிகளின் ஆயுதப்போராட்டத்தை பற்றிய உரையாடல் தமிழ்நாட்டு மக்களுக்கிடையே நிகழும்போது கவனித்தீர்களேயானால் ஒரு போக்கை அவதானிக்கலாம்.
‘என்னதான் இருந்தாலும் மக்களை ஒன்று திரட்டி அகிம்சையில் போராடியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்’.
‘ஆயுத போராட்டம் என்ற வன்முறை அரசியல் பிழையானது’.
அதிலும் ஒரு குரூப் ‘கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சார் சாவான்’ என இடையிலே புகுந்து பன்ச் டயலாக் சொல்லிவிட்டு போகும். தலைவர் பிரபாகரன் இறந்ததை குறிப்பிடுகிறார்களாம்.
அதாவது ஆயுத போராட்டம் என்ற வன்முறையிலான போராட்டம் பிழையானது. காந்தி நடத்தியது போன்ற அகிம்சை போராட்டமே சரியானது. வெற்றியை என்றுமே உத்தரவாதமாக தரக்கூடியது என்று மனப்பூர்வமாக நம்புகிறார்கள் என்பதே அந்த போக்கு.
இந்த நம்பிக்கை அவர்களுக்குள் எப்படி வந்திருக்கும் என்பதை ஊகிப்பது கடினமானதொன்றல்ல.
இந்தியா சுதந்திரம் அடைந்த விதமே அவர்களின் இந்த நம்பிக்கைக்கான காரணம்.
அதனால் உலகின் எந்த மூலையில் ஆயுதப்போராட்டம் நடந்தாலும் இந்தியாவின் அகிம்சை வழியே தீர்வினை தரும் என்று போகிற போக்கில் ஆலமரத்தடியில் பஞ்சாயத்து தீர்ப்பு கொடுப்பதுபோல அடித்து விட்டு போவது தமிழ்நாட்டின் பொது உளவியல்.
• இது எதனை காட்டுகிறது?
உலக வரலாறு பற்றிய தெளிவான புரிதல் தமிழ்நாட்டிலே இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
இந்தியாவின் சுதந்திரம் தொடர்பாக தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் கட்டப்பட்டிருக்கும் இந்த நம்பிக்கைகளே முதலில் சரிதானா?
ஏன் இந்த நம்பிக்கை பிழையான புரிதல்?
உலக வரலாறு கற்று தரும் பாடம் என்ன?
போன்ற கேள்விகளுக்கு பதிலை அறிவதன் ஊடாக தமிழ்நாட்டின் பிழையான புரிதலை விளக்க முனைவதே இந்த பதிவு.
ஒவ்வொரு விடயத்தையும் மிக சுருக்கமாகவே கீழே விவரித்திருக்கிறேன்.
• முதலில் இந்திய சுதந்திரத்தில் மறைந்திருக்கும் உள்ளார்ந்த பண்பு
இதில் பல பக்கங்கள் இருக்கின்றன.
இந்தியா எனும் புதிய நாடு பிரிட்டிஷாரால் வெட்டி ஒட்டி உருவாக்கப்பட்ட நாடு என்பதை பல பதிவுகளில் கூறியிருக்கிறேன்.
அதற்கு முன்பு இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததேயில்லை. இந்தியா என்ற தேச உளவியலை உள்வாங்கி அந்த நிலப்பரப்பின் மக்களும் இருந்ததேயில்லை.
அப்படி இருந்திருந்தால் இந்தியா எனும் நிலப்பரப்பை பிரிட்டிஷாரால் கைப்பற்றவே முடியாமல் போயிருக்கும்.
• ஏன் கைப்பற்றியிருக்க முடியாது?
18 ம் நூற்றாண்டில் இந்திய நிலப்பரப்பில் இருந்த மக்கள் தொகை குறைந்தது 16 கோடி.
பிரிட்டிஷாரின் மொத்த சனத்தொகை 80 லட்சம் மட்டுமே.
வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வின்படி, இந்தியாவில் இருந்த East India company (EIC) எனும் வியாபார நிறுவனத்தில் இருந்த பிரிட்டிஷ் படைவீரர்களின் எண்ணிக்கை எந்தவொரு கட்டத்திலும் 20000 ஐ தாண்டியதில்லை.
பின்னர் 1858 இல் British crown இற்கு மாறியபின்னரும் , அதனது ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்த அதிகபட்ச British army இன் எண்ணிக்கையே வெறும் 30000 தான்.
இந்திய நிலப்பரப்பிற்கும் பிரிட்டனிற்கும் இடையிலான தூரம் பல ஆயிரம் மைல்கள்.
போரியல்ரீதியில் வெறும் 30000 இற்கும் குறைவான பிரிட்டிஷ் படைகள், பல ஆயிரம் மைல்கள் தொலைவிலிருக்கும் 16 கோடி மக்களை கொண்ட நிலப்பரப்பை எப்படி கட்டுக்குள் வைத்திருக்கமுடியும்?
போரியல்ரீதியில் இது சாத்தியமே இல்லாதது.
இது தொடர்பான விரிவான கட்டுரையை முன்னர் எழுதியுள்ளேன். இணைப்பு கீழே.
https://tamildesiyam2009.blogspot.com/2022/07/1.html?m=1
உடனே நீங்கள் பாய்ந்தடித்து கொண்டு பிரிட்டிஷார் நவீன ஆயுதங்கள் வைத்திருந்ததாக ஒரு கதையை உருட்டுவீர்கள் என்று தெரியும்.
அதுவும் உண்மையில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. இது தொடர்பான விரிவான கட்டுரையை முன்னர் எழுதியுள்ளேன். இணைப்பு கீழே.
https://tamildesiyam2009.blogspot.com/2022/07/2_24.html?m=1
• பின்னர் எப்படி பிரிட்டிஷார் தமது ஆளுகைக்குள் இந்திய நிலப்பரப்பை கொண்டு வந்தார்கள்?
இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த அன்றைய மக்களுக்கு இந்திய தேசம் என்ற உளவியல் இருக்கவில்லை. இன்று உங்களின் மனதில் இந்திய தேசம் என்பது எத்தகைய படிமத்தை உருவாக்குகிறதோ அது அன்றைய காலத்தில் நிலவவில்லை.
அதனால் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களை கொண்டே இந்திய நிலப்பரப்பின் மக்களை ஆண்டார்கள்.
இதைப்பற்றி முன்னரேயே “பிரிட்டிஷார் வெட்டி, தைத்து உருவாக்கிய இந்தியா எனும் புது நாடு - போரியல்பார்வையில்” எனும் விரிவான பதிவை எழுதியிருக்கிறேன்.
• இந்த போரியல்ரீதியான தர்க்கங்களை எதிர்கொள்ள முடியாமல் இன்னொரு சாமர்த்தியமான கருத்தியலை இந்திய தேசியவாதிகள் முன்வைப்பார்கள்.
இந்து மதம், இந்திய பண்பாடு, இதிகாசங்கள், மொழி என்பவற்றை உள்ளடக்கியதான ஒரு தளத்தில் இந்தியதேசம் என்ற பொது அகம் இருந்ததாக இந்திய தேசியவாதிகள் ஒரு கருத்தியலை முன்வைப்பார்கள்.
ஆனால் இந்த பொது அகம் என்ற கருத்தியலிலும் எப்படி பல ஓட்டைகள் இருக்கின்றன என்பதை இன்னொரு பதிவில் விளக்கியிருக்கிறேன். இணைப்பு கீழே.
https://tamildesiyam2009.blogspot.com/2022/11/blog-post_29.html?m=1
• இன்னொரு விசித்திரமான வரலாறும் இருக்கிறது.
தங்களை ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை காப்பதற்காகவே உலக போர் 1 (WW1) இல் கிட்டதட்ட 17 லட்சம் இந்திய போர் வீரர்கள் பங்குபற்றினார்கள். அதில் குறைந்தது 70000 இந்திய போர் வீரர்கள் பலியானார்கள்.
அதுபோல இரண்டாம் உலக யுத்தத்தில் (WW2) 25 லட்சம் இந்திய போர் வீரர்கள் பங்குபற்றினார்கள். குறைந்தது 1 லட்சம் இந்திய வீரர்கள் பலியானார்கள்.
இந்திய நிலப்பரப்பு மக்களின் பெரும் பங்களிப்பை பிரிட்டிஷாரே ஒப்புகொள்கிறார்கள்.
Field-Marshal Sir Claude Auchinleck, Commander-in-Chief of the Indian Army from 1942 asserted that the British "couldn't have come through both wars if they hadn't had the Indian Army."
Churchill paid tribute to "The unsurpassed bravery of Indian soldiers and officers."
உண்மையிலேயே இந்திய நிலப்பரப்பு மக்கள் தங்களை ஒரு ஒற்றை தேசமாக கருதியிருந்தால் தன்னை ஆள்பவரின் சாம்ராஜ்யத்தை காப்பாற்றுவதற்காக இத்தனை லட்ச மக்களின் உயிரை தாரை வார்த்திருக்காது.
ஆக மேலே சுருக்கமாக விவரித்த இந்த மூன்று பக்கங்களுமே இந்தியா என்ற ஒரு ஒற்றை தேச உளவியல் இந்திய நிலப்பரப்பு மக்களிடம் இருந்ததில்லை என்பதை தெளிவாக காட்டுகின்றன.
• சரி. இனி இந்தியாவின் சுதந்திரம் எப்படி கனிந்தது?
மேலே சொன்னது போல, இந்திய நிலப்பரப்பில் வாழும் மக்களின் மனதில் இந்திய தேசம் என்ற உளவியலை கட்டியமைத்துவிட்டாலே பிரிட்டிஷாரால் அங்கு நிலைகொள்ள முடியாது.
காரணம் இந்திய நிலப்பரப்பை பூர்வீகமாக கொண்ட மக்களின் சதவீதம் 99.99.
பிரிட்டிஷாரின் சதவீதம் 0.01
0.01 சதவீதம் 99.99 சதவீதத்தை ஆள்வது சாத்தியம் இல்லை.
காந்தி போன்றவர்கள் இந்திய தேசம் என்ற உளவியலை வெற்றிகரமாக கட்டியெழுப்பினார்கள்.
அந்த உளவியல் பெரிதாக பெரிதாக இனி இந்தியாவை தன் ஆளுகைக்குள் வைத்திருப்பது சாத்தியமில்லை என்பதை பிரிட்டிஷ் உணர்ந்தது.
அதை துரிதப்படுத்தியவை இரண்டாம் உலக யுத்தத்தில் பிரிட்டிஷாருக்கு ஏற்பட்ட இழப்புகள்.
• இது சொல்லும் பாடம் என்ன?
• இந்தியா என்ற ஒற்றை தேச உளவியல் இருந்திருந்தால் பிரிட்டிஷாரால் இந்தியாவை தங்களது ஆளுகைக்குள் கொண்டு வந்தே இருக்கமுடியாது.
• அவ்வாறு இல்லாததனால் பிரிட்டிஷாரால் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆள முடிந்தது.
• எப்பொழுது இந்த தேச உளவியல் என்ற மாய பிம்பம் கட்டமைக்கப்பட்டதோ அந்த தருணத்தில் கத்தியின்றி இரத்தமின்றி பிரிட்டிஷார் சுதந்திரம் தருவதாக கூறி விலகினர்.
இப்படி நிகழ்ந்த இந்தியாவின் சுதந்திரத்தை உதாரணமாக வைத்துக்கொண்டுதான் தமிழ்நாடு உலகிற்கே போதித்து கொண்டிருக்கிறது ‘ ஆயுத போராட்டம் சரி வராது அகிம்சையில் போராடுங்கள் என’.
• உலக வரலாறு சொல்லும் பாடம்
இன்றைய உலக ஒழுங்கில் இருக்கும் சகல இறையாண்மை அரசுகளினதும் பட்டியலை எடுங்கள்.
• இதில் எத்தனை நாடுகள் நீங்கள் கூறிய அகிம்சை போராட்டத்தில்
(non violence) இறையாண்மை அரசுகளை நிறுவின என பட்டியலிடுங்கள்.
• இதில் எத்தனை நாடுகள் ஆயுத போராட்டத்தில் இறையாண்மை அரசுகளை நிறுவின என பட்டியலிடுங்கள்.
ஆயுத போராட்டத்தினுடாக இறையாண்மை அரசுகளை நிறுவிய நாடுகளின் எண்ணிக்கையே அதிகமாகஇருக்கும்.
உதாரணத்திற்கு கீழே அத்தகைய நாடுகளின் பட்டியலை கீழே தந்திருக்கிறேன்.
• அமைதி வழியில் இறையாண்மை அரசுகளை நிறுவிய நாடுகளின் பட்டியலும் வெறுமனே தட்டையாக அகிம்சை முறையில் காரியம் நடந்தேறின என்று பொருள் அல்ல.
ஒரு இறையாண்மையுள்ள அரசை உலக ஒழுங்கில் நிறுவுவதற்கு கட்டாயமான நிபந்தனையை நிறைவேற்றவேண்டும் என பல பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.
“ஆள்பவர் இனிமேல் உங்களை அடக்கி
வைக்ககூடிய மனித வளமோ, பொருளாதார வளமோ தன்னிடம் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்படும்போதே, இறையாண்மையுள்ள அரசுகள் பிரசவமாகின்றன.
அந்த இக்கட்டான நிலைக்கு ஆள்பவரை தள்ளவேண்டும் என்பதுதான் அடிப்படை கட்டாய நிபந்தனை.”
அமைதியான வழியில் உருவாகிய இறையாண்மை அரசுகளின் பட்டியலை எடுத்து கொண்டாலும், இங்கு மேலே நான் குறிப்பிட்ட கட்டாய நிபந்தனை நிறைவேறியிருக்கும்.
சில உதாரணங்களை தருகிறேன்.
• முதல் உதாரணமாக சோவியத் யூனியனின் வீழ்ச்சி
சோவியத் யூனியன் உடைந்த போது 15 புதிய இறையாண்மை நாடுகள் உருவாகின.
கத்தியின்றி இரத்தமின்றி இந்த புதிய நாடுகள் உருவாகின.
அதில் லத்வியா,எஸ்தோனியா,லிதுவேனியா என்ற மூன்று நாடுகள் பொதுவெளியில் பாடல்களை பாடியே சுதந்திரம் அடைந்தார்கள். இது Singing Revolution என்று அழைக்கப்படுகிறது.
பாடல்கள் பாடினாலே ஒரு இறையாண்மை அரசை உருவாக்க முடியும் என உலகுக்கு இந்த மூன்று நாடுகளும் அறிவுரை சொன்னால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்? தமிழ்நாடு செய்வதும் இதுபோலத்தான்.
சரி. திரும்பவும் விடயத்திற்கே வருகிறேன்.
இங்கும் இக்கட்டான நிலைக்கு ஆள்பவரை தள்ளவேண்டும் என்ற அடிப்படை கட்டாய நிபந்தனை பூர்த்திசெய்யப்பட்டது.
காரணம் அமெரிக்க- சோவியத் யூனியனிற்கு இடையிலான Cold War இல், சோவியத் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனம் அடைய ஆரம்பித்தி்ருந்தது.
அந்த நிலையில் அன்றைய சோவியத் யூனியனின் அதிபர் மிக்கெயில் கொர்பச்சேவ் கொண்டுவந்த இருசீர்திருத்தங்களான Glasnost (“openness”) உம் Perestroika (“restructuring”) உம் சோவியத் யூனியனின் வீழ்ச்சியை துரிதப்படுத்தின.
ஆக சோவியத் யூனியன் எனும் சாம்ராஜ்யம் உடைந்து வீழ்கையில் மேலே கூறிய அந்த 15 நாடுகளும் எந்தவித சிரமுமின்றி சோவியத்திலிருந்து பிரிந்து தமக்கான இறையாண்மை அரசை நிறுவிக்கொண்டன.
அன்று அதை தடுத்து நிறுத்தும் நிலையில் சோவியத் யூனியன் இல்லை.
• இரண்டாம் உலக யுத்த முடிவிற்கு பிறகான மேற்குலகம்
இரண்டாம் உலக யுத்தத்தில் மேற்குலக நாடுகள் பெரும் இழப்பை சந்தித்திருந்தன.
யுத்தம் முடிவடைந்த நிலையில் , மேற்குலக நாடுகளினால் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒருநிலப்பரப்பை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக கடினமாக மாறியது. அதற்கான பொருளாதாரவளமும், இராணுவ வளமும் குன்றி போயிருந்தன.
இந்த காலகட்டத்திலும் பல நாடுகள் பிரிட்டிஷ்,பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டுகொண்டன.
ஆயுத போராட்டத்திலும் நாடுகள் சுதந்திரம் அடைந்தன. அமைதி வழியிலும் சுதந்திரம் அடைந்தன.
ஏன் சில நாடுகள் இரத்தம் சிந்தி சுதந்திரம் அடைந்தன சில நாடுகள் அமைதி வழியில் சுதந்திரம் அடைந்தன என்பதிலும் காலனியாதிக்க நாடுகளின் ராஜதந்திர நகர்வுகள் இருக்கின்றன.
ஆனால் இதற்கு பின்னே இரண்டாம் உலக யுத்தத்தில் மேற்குலக காலனியாதிக்க நாடுகள் கொடுத்த பெரும் இழப்பு இங்கு ஒரு மிக முக்கியமான காரணி.
அவை மேற்குலக காலனியாதிக்க நாடுகளை இனிமேல் அடக்கி வைக்க கூடிய மனித வளமோ, பொருளாதாரவளமோ இல்லை என்ற நிலைக்கு தள்ளி வைத்திருந்தன.
இங்கும் இக்கட்டான நிலைக்கு ஆள்பவரை தள்ளவேண்டும் என்ற அடிப்படை கட்டாய நிபந்தனை பூர்த்திசெய்யப்பட்டது.
• மேலேயுள்ள அமைதி வழி பட்டியலில் வரும் மற்றைய நாடுகளின் வரலாறு என்ன?
இது தவிர இறையாண்மை அரசுகளாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான அரசுகளும் உண்டு.
இவைகளின் வரலாற்றை நீங்கள் தேடினாலும் அந்த நாடுகள் போர்கள் மூலமாகவே தங்களது எல்லையை வரைந்திருப்பார்கள்.
அமைதியான வழிமுறையில் எல்லை கோடுகள் வரையப்படுவதில்லை.
• இந்த பதிவின் சாரம்சம்
• இன்றைய உலக ஒழுங்கில் இருக்கும் சகல இறையாண்மை அரசுகளினதும் பட்டியலை எடுத்துக்கொண்டால் பெரும்பான்மையான நாடுகள் ஆயுதப்போராட்டத்தினுடாகவே தமது இறையாண்மை அரசுகளை நிறுவியிருக்கின்றன.
• அமைதி வழியில் இறையாண்மை அரசுகளை நிறுவிய நாடுகளின் பட்டியலை எடுத்து கொண்டாலும், அவற்றின் உருவாக்கத்திலும் அடக்கி ஆள்பவருக்கு போதிய மனித வளம், பொருளாதார வளம் இல்லாத நிலையைபுறச்சூழல் ஏற்படுத்தியதாலேயே இறையாண்மை அரசுகள் அமைதி வழியில் உருவாகியிருக்கின்றன.
• பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இறையாண்மை அரசை நிறுவிய நாடுகளை பட்டியலிட்டாலும், அவை அவ்வாறு உருவாகியிருப்பதற்கே பல போர் களங்கள்தான் காரணமாக இருந்திருக்கின்றன.
• ஆக இறையாண்மை அரசுகளின் உருவாக்கத்தில் நேரடியாக காணக்கூடியதாகவும் அல்லது மறைமுகமாக புறச்சூழலை உருவாக்குபவையாகவும் ஆயுத போராட்டங்களும் போர்களுமே இருந்திருக்கின்றன.
இதுதான் உலக வரலாறு கற்று தரும் பாடம்.
எல்லா ஆயுத போராட்டங்களும் இறையாண்மை அரசுகளாக வெற்றியடைந்து விடுவதில்லைதான்.
ஆனால் உலகின் பெரும்பான்மையான இறையாண்மை அரசுகளின் உருவாக்கத்திற்கு ஆயுத போராட்டங்களே காரணமாக இருந்திருக்கிறது.
இதுதான் கள யதார்த்தம். இதைத்தான் உலக வரலாறு சொல்கிறது.
உலக வரலாறு சொல்லி தரும் பாடத்தை உள்வாங்காமல் வெறும் தட்டையாக ஆயுத போராட்டம் பற்றிய புரிதலை தமிழ்நாடு கொண்டிருக்கிறது.
இத்தகைய பிழையான புரிதலை வைத்துக்கொண்டுதான், பதினாறு வயதினிலே சப்பாணி ‘ஆத்தா வையும் சந்தைக்கு போகனும்’ டயலாக்கை திரும்ப திரும்ப சொல்வது போல, தமிழ்நாடும் ‘அகிம்சையில் போராடியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்’ என்ற டயலாக்கை திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருக்கிறது.
க.ஜெயகாந்த்
(மீள்பதிவு 2021)











Comments
Post a Comment