திராவிட நாட்டு கோரிக்கையும்’ , வாயால் வடை சுட்ட திராவிட தலைவர்களும்

திராவிட அறிவுஜீவிகள், உடன்பிறப்புகள் அடிக்கடி போகிற போக்கில் திராவிட தலைவர்கள் ‘திராவிட நாடு’ கேட்டு போராடியதாக குறிப்பிடுகிறார்கள்.

•  உண்மையிலேயே ‘திராவிட நாடு’ கேட்டு போராடினார்களா? 

திராவிட நாடு என்பதை எந்த context இல் குறிப்பிடுகிறார்கள்?

திராவிட நாடு என்பது இறையாண்மையுள்ள அரசு என்ற பொருளாக இருந்தால், இந்தியாவிலிருந்து பிரிந்து திராவிட நாடு எனும் ஒரு தனி புது நாடு என்பதுதான் அர்த்தம்.

சரி. இந்த திராவிட தலைவர்கள் திராவிட நாட்டுக்காக எவ்வாறு போராடினார்கள் ?

‘எவ்வாறு போராடினார்கள்’ என்பதற்கான பதிலாக திராவிட அறிவுஜீவிகள், உடன்பிறப்புகள் பின்வரும் வாதங்களை பதிலாக வைக்கிறார்கள்.

• பெரியார் விடுதலை, குடியரசு பத்திரிகைகளில் ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என ‘முழங்கினார்’.

• அண்ணாதுரை நாடாளுமன்றத்தில் அருமையான சொற்பொழிவாற்றினார்.

• மேடைகளில் திராவிட தலைவர்கள் திராவிட நாடு கேட்டு ‘கர்ஜனை செய்தார்கள்’.


கர்ஜனை, முழக்கங்கள், கட்டுரைகள் மூலமாக ஒரு இறையாண்மை அரசை அடையமுடியுமா?

இந்திய ஒன்றிய அரசு ‘கர்ஜனையா? செஞ்சுக்கோ’ என நமுட்டு சிரிப்பு சிரிக்கும்.


ஒரு இறையாண்மை அரசு எப்பொழுது உருவாகும்?

“ஏற்கனவே உள்ள அரசுகள், இனிமேல் எதிர்தரப்பை அடக்கி வைக்கக்கூடிய  மனித வளமோ, பொருளாதார வளமோ தன்னிடம் இல்லை என்ற ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும்போதே, புதிய இறையாண்மையுள்ள அரசுகள் உருவாவதை அனுமதிக்கிறார்கள்.”

சரி. மேலே குறிப்பிட்ட பெரியாரின் கட்டுரைகளோ, அண்ணாதுரையின் சொற்பொழிவோ, திராவிட தலைவர்களின் கர்ஜனையோ ஏதாவது ஒருவகையில் இந்திய ஒன்றிய அரசை ‘இனிமேல் தமிழ்நாட்டை அடக்கி வைக்கக்கூடிய மனித வளமோ, பொருளாதார வளமோ தம்மிடம் இல்லை’ என்ற நிலைக்கு தள்ளியதா?

ஒரு புண்ணாக்கும் இல்லை. இது வெற்று பிதற்றல்கள்.

இதை இந்திய ஒன்றிய அரசு லாவகமாக தள்ளிவிட்டு போகும்.

• நீங்கள் ஆயிரம் கூர்மையான உண்மையான வாதங்களை ஆயிரம் மன்றங்களில் முன்வைத்தாலும், எந்தவொரு இறையாண்மை அரசும் ‘அடடா இதில் இவ்வளவு உண்மை இருக்கிறதா’ என தனி நாட்டை பிரித்து கொடுக்காது.

அண்ணாதுரையின் சொற்பொழிவை போல, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் ‘தமிழீழம்தான் தீர்வு’ என குறைந்தது நூறு தடவையாவது பாராளுமன்றத்தில் உணர்ச்சி பொங்க பேசியிருக்கிறார்கள். தமிழீழம் கிடைத்துவிட்டதா? 

திரும்பவும் அதே பதில்தான்.

‘இனிமேல் எதிர்தரப்பை அடக்கி வைக்கக்கூடிய  மனித வளமோ, பொருளாதார வளமோ தன்னிடம் இல்லை என்ற ஒரு இக்கட்டான நிலைக்கு ஒரு இறையாண்மை அரசை தள்ளினாலே புதிய நாடு உருவாகும்’.



பெரியார், அண்ணாதுரை போன்றவர்கள் இந்திய இறையாண்மை அரசை எதிர்த்து , தமிழ் நாடு எனும் புதிய இறையாண்மை அரசை உலக ஒழுங்கில் நிறுவ முயன்றார்களா? 

இல்லை என்பதே ஒற்றை பதில். 

அறிஞர் அண்ணாவின் அரசியல் என்பது இந்திய இறையாண்மை அரசை ஏற்றுக்கொண்டு, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை பெற்றுகொள்வதற்காக இந்திய ஒன்றியத்துடன் மாநில சுயாட்சி போன்ற அரசியல் ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள், கோரிக்கைகள்தான். 

கோரிக்கை, தீர்மானம் என்ற சொல்லாடலையே பயன்படுத்த விரும்புகிறேன். அவர் நடத்தியது போராட்டம் அல்ல.


அடுத்து பெரியார்.

அண்ணாவை விட பெரியார் மோசம்.

முதலில் அவருக்கு தேசிய இனம், வரலாற்று தாயகம், மொழி , சுயநிர்ணய உரிமை என்பவை பற்றிய தெளிவான புரிதல், ஆழமான பார்வை என்பவையே இருக்கவில்லை என்பதை அவரின் பேச்சுகள், எழுத்துகளே நிருபிக்கின்றன.

அவர் இந்திய இறையாண்மை அரசை ஏற்றுகொண்டவர். 

புதிய இறையாண்மை அரசை உலக ஒழுங்கில் உருவாக்குதல் என்ற புவிசார் அரசியல் பார்வையே அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

புதிய இறையாண்மை அரசை அமைப்பது பற்றி அவரிடம் கேட்டிருந்தால் கூட, ‘அது கிடக்குது வெங்காயம்’ போன்ற ‘ஆழமான’ பதிலைத்தான் தந்திருப்பார்.

உடனே பெரியாரின் சமூக நீதி, பெண் விடுதலை, கடவுள் மறுப்பு விடயங்களை தூக்கி கொண்டு ஓடிவரவேண்டாம். அந்த தளங்களில் அவரின் பங்களிப்பு இருந்திருக்கலாம். ஆனால் நான் இவைகளை பற்றி இந்த பதிவில் பேசவில்லை. 

• இவர்கள் நடத்திய திராவிட நாடு போராட்டங்கள் என்பது ‘இதை இட்லின்னு சொன்னா சட்னியே நம்பாது’ என்ற வகையிலான போராட்டங்கள்தான்.

இந்திய ஒன்றிய அரசின் பார்வையில் காலணா பொறாத போராட்டங்களை பெரும் வரலாற்று புரட்சியாக சித்தரித்துத்தான் இன்றுவரை திராவிட அறிவுஜீவிகளும், உடன்பிறப்புகளும் தமிழ் நாட்டு அரசியலில் பிழைப்பு நடத்தி கொண்டிருக்கிறார்கள்.


தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பெரியார் கோரினார் என்பதால் அவர் தனி தமிழ்நாடு கோரினார் , அறிஞர் அண்ணா திராவிட நாடு கோரினார் என்பது போன்ற வாதங்களை வைக்கும் ‘ கிணற்று தவளை அறிவுஜீவிகளுக்கு’ ஒரு எளிமையான சவாலை முன்வைக்கிறேன்.


 உங்களின் வாதத்தை கீழேயுள்ள வரிசைப்படி நீங்கள் நிறுவவேண்டும்.

• பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்கள் தனி தமிழ்நாடு அல்லது திராவிட நாடு என்று குறிப்பிட்டது , இந்த உலக ஒழுங்கில் புதிய இறையாண்மையுள்ள அரசை உருவாக்குவதை நோக்கமாக வைத்துதான்  குறிப்பிட்டார்கள் என்பதை முதலில் நீங்கள் நிறுவவேண்டும்.

• அடுத்தது இந்த புதிய இறையாண்மையுள்ள அரசை உருவாக்க அவர்கள் எந்தெந்த வழிகளில் போராடினார்கள் என்பதை நிறுவவேண்டும்.

• அந்த போராட்டத்தின் மூலம் இந்திய ஒன்றிய அரசுக்கு எத்தகைய அழுத்தத்தை தந்தார்கள்  என்பதை அடுத்து நிறுவவேண்டும்.

• நான் மேலே குறிப்பிட்டது போல இனி மேல் பெரியார், அண்ணா போன்றவர்களின் தலைமையிலான போராட்டத்தை அடக்கி வைக்கக்கூடிய மனித வளமோ, பொருளாதார பலமோ தன்னிடம் இல்லை என்ற நிலைக்கு இந்திய ஒன்றியத்தை தள்ளினார்களா என்பதை நிறுவவேண்டும்.

• குறைந்த பட்சம் அந்த இக்கட்டான நிலைக்கு இந்திய ஒன்றியத்தை தள்ள முயற்சித்தார்கள் என்பதையாவது நிறுவவும்.

• புதிய இறையாண்மையுள்ள அரசு என்ற இலக்கை நோக்கி தொடர்ச்சியாக இவர்கள் எத்தகைய போராட்டங்களை நடத்தினார்கள் என்பதையும் நிறுவவேண்டும். ஏனெனில் போராட்டங்களில் , இலக்கை நோக்கிய நகர்வில் ஒரு தொடர்ச்சி இருக்கவேண்டும். அங்கொன்றும் இங்கொன்றும் நடந்ததை ஒரே தொடர்ச்சியென கூறக்கூடாது.

• வழமை போல பெரியாரின் குடியரசு, விடுதலை பத்திரிகை கட்டுரை, இந்த நூலின் இத்தனையாவது பக்கம் என்பது போன்ற ஆதாரங்களை தூக்கி கொண்டு வருவீர்கள் என்பதும் தெரியும். இந்த கட்டுரைகளின் மூலம் இந்திய ஒன்றியத்திற்கு எவ்வளவு அழுத்தம் தரப்பட்டது என்பதை நிறுவவும்.

• அதேபோல் அறிஞர் அண்ணாவின் பாராளுமன்ற பேச்சுகளின் மூலம் இந்திய ஒன்றியம் எத்தகைய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது என்பதையும் நிறுவவும்.

பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்கள் புதிய இறையாண்மையுள்ள அரசை இந்த உலக ஒழுங்கில் நிறுவ முயன்றார்கள் என்பதை மேலேயுள்ள வரிசைப்படி உங்களின் வாதங்களை வைத்து எனது பின்னூட்ட பகுதியில் நிறுவவும்.

க.ஜெயகாந்த்


பின்குறிப்பு: 

திராவிட நாடு கேட்டு போராடினோம், முழங்கினோம், கர்ஜனை செய்தோம் என கூறினால், இந்திய ஒன்றிய அரசு எவ்வாறு நக்கலுடன் சிரிக்கும் என்பதை குறியீடாக காட்டுவதற்காக இந்திய ஒன்றிய தலைவர்களின் சிரித்த படங்கள்.

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]