புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் ‘துரோகம்’ என்றவார்த்தைக்கு பொருளில்லை
ஈழ ஆயுத போராட்டம் தொடர்பாக பதிவுகள் எழுதும்போது பலர் இந்தியா ஈழ தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக எழுதுகிறார்கள்.
‘துரோகம்’ என்ற சொல், இரு தரப்பில் ஒருவர் மற்றையவரை உணர்வுபூர்வமாக நம்பியிருக்கும் உறவுமுறையில் மட்டும் பொருந்தக்கூடிய சொல்.
ஆனால் புவிசார் நலன் அரசியலின் ஆணி வேரே “There are no permanent friends or enemies but permanent interests in international relations” என்பதுதான்.
அதாவது “புவிசார் நலன் அரசியல் சதுரங்க விளையாட்டில் நிரந்தர நண்பனும் கிடையாது. நிரந்தர எதிரியும்கிடையாது. நமது நலன் மட்டுமே நிரந்தரமானது” என்று பொருள்.
அதன்படி புவிசார் நலன் அரசியலில் “உணர்வுபூர்வமான உறவு” இருக்கமுடியாது. இருக்கவும்கூடாது.
- உலக வரலாற்றிலிருந்து சில உதாரணங்களை மிக சுருக்கமாக தருகிறேன்.
•அமெரிக்க-வியட்நாம் போரிலே அமெரிக்காவும் வியட்நாமும் எதிரிகள். சீனாவும் வியட்நாமும் நண்பர்கள்.
இன்று சீனா emerging super power ஆக வளர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவும் வியட்நாமும் நண்பர்கள். சீனாவும் வியட்நாமும் எதிரிகள்.
•Cold War காலகட்டத்தில் இந்தியா சோவியத்துடன் நெருக்கமாக இருந்ததால், அமெரிக்கா இந்தியாவை எதிர்நிலையில் வைத்திருந்தது.
இன்று சீனா அமெரிக்க நலனிற்கு அச்சுறுத்தலாக இருப்பதால், அமெரிக்கா இந்தியாவை நண்பனாக அணுகுகிறது.
•இதே Cold War காலகட்டத்தில் சோவியத்துடன் முரண்பட்டிருந்த சீனா அமெரிக்காவுடன் நட்புறவை வளர்த்தது.
இன்று சீனாவும் ரஷ்யாவும் அமெரிக்காவை எதிர்கொள்ள நண்பர்களாக செயற்படுகிறார்கள்.
- மேலேயுள்ள உதாரணங்கள் எதை காட்டுகின்றன?
ஒவ்வொரு அரசும் தமது நலன்களை பொறுத்து நண்பர்களை, எதிரிகளை மாற்றி கொள்ளுகிறார்கள். இங்கே உணர்வுபூர்வமான உறவு என்ற ஒன்று கிடையாது.
- சரி. தமிழீழ ஆயுத போராட்டத்திற்கு வருவோம்
1989 முதல் மாவீரர் உரையில் தலைவர் பிரபாகரன் சொன்ன ஒரு விடயத்தை தருகிறேன்.
“1983 இன கலவரத்திற்கு பின்பு இந்தியா அதனது நலனுக்காக தலையிட்டது.
எல்லா ஆயுத இயக்கங்களிற்கும் பயிற்சி வழங்கியது. முதலில் விடுதலை புலி இயக்கத்திற்கு பயிற்சி வழங்கப்படவில்லை.
பின்னர் இந்தியா எல்லா இயக்கங்களையும் சம அளவில் வளர்க்க நினைத்தது. ஒரு இயக்கம் இந்தியாவின் நலனுக்கு எதிராக திரும்பினாலும் மற்றைய இயக்கங்களை கொண்டு அழித்துவிடலாம் என நினைத்தது.
அதுதான் இந்தியா செய்த பிழை. அவர்கள் புலிகளையும் சேர்த்துக்கொண்டார்கள். நாங்களும் எங்களின் நலனுக்காக சேர்ந்து கொண்டோம்.
இந்தியா தமது நலனை அடிப்படையாக வைத்து இயக்கங்களிற்கு ஆயுதங்களை கிள்ளி கொடுத்தது.
நீங்கள் இந்தியாவிற்கு தெரியாமலேயே இந்தியாவினூடாக ஆயுதங்களை கடத்தி பெற்றுக்கொண்டோம்’
(1989 மாவீர்ர் அதன் உரை. 33:19 நிமிடத்திலிருந்து)
- மேலே தலைவர் பிரபாகரனின் உரை எதை காட்டுகிறது?
இந்தியா அதனது நலனிற்காக ஆயுதங்கள், பயிற்சிகள் வழங்கியது.
மறுபுறம் புலிகள் இந்தியாவின் உள்நோக்கத்தை தெரிந்து கொண்டே இந்தியாவை தங்களது தேவைக்காக பயன்படுத்தி கொண்டார்கள்.
இந்த சதுரங்க ஆட்டத்தில் இருவருமே தங்களது நலன்கள் எது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்கள். இதுதான் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டம்.
- உணர்வுபூர்வமான கதையாடல்கள் (narrative) தேவைதான். மறுக்கவில்லை
இறையாண்மை அரசுகள் தமது புவிசார் அரசியலின் இலக்கை அடைவதற்காக, மக்களின் ஆதரவை ஒருமுனையில் குவிக்க உணர்வுபூர்வமான கதையாடல்களை (narrative) உருவாக்கும்.
ஏன் அவ்வாறு செய்கின்றன என்பது பற்றி சில பதிவுகள் முன்னர் எழுதியிருக்கின்றேன்.
ஆனால் ஒரு பக்கம் இறையாண்மை அரசுகள் கறாராக புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கும். அதற்கேற்ப மக்களின் ஆதரவை ஒன்று குவித்து பயன்படுத்தி கொள்வார்கள்.
விடுதலை புலிகளும் இத்தகைய உணர்வுபூர்வமான கதையாடல்களை (narrative) உருவாக்கியிருக்கிறார்கள். அதன் மூலம் தமிழ் மக்களின் ஆதரவை ஒரு முனையில் குவித்திருக்கிறார்கள். அந்த மக்களின் ஒருமுனைப்படுத்தப்பட்ட ஆதரவை வைத்துக்கொண்டு தமிழீழ அரசு எனும் இலக்கை நோக்கி முன்னேறியிருக்கிறார்கள்.
- இன்றைய தமிழினத்தின் நிலை
இன்றைய தமிழ் இனத்தில் இருப்பது வெறும் உணர்வுபூர்வமான கதையாடல்கள் மட்டும்தான்.
இன்று புவிசார் அரசியல் பரிமாணத்தை மட்டுமே பேசக்கூடிய அறிவுசார் சமூகம் தமிழ் இனத்தில் மருந்துக்குகூட இல்லை.
அதிலும் ‘இந்தியாவை நம்பினோம். எனக்கு துரோகம் இழைத்து விட்டீர்கள்’ என்ற புலம்பல்கள் மட்டுமே.
இத்தகைய புலம்பல்கள், இரக்கத்தை மற்றவரிடம் எதிர்பார்த்தல் போன்ற எதுவும் உலக ஒழுங்கின் புவிசார்அரசியல் சதுரங்க ஆட்டத்தில் எந்த பலனையும் கொண்டு வராது.
க.ஜெயகாந்த்











Comments
Post a Comment